Published:Updated:

"குரங்குங்ககிட்டேயிருந்து எங்களைக் காப்பாத்துங்க!" - கதறும் கிராம மக்கள்!

அரசு அலட்சியம் அநியாயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலட்சியம் அநியாயம்

அம்பல மேடை

"குரங்குங்ககிட்டேயிருந்து எங்களைக் காப்பாத்துங்க!" - கதறும் கிராம மக்கள்!

அம்பல மேடை

Published:Updated:
அரசு அலட்சியம் அநியாயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலட்சியம் அநியாயம்

‘அநியாயமா இருக்கே? இதை யார்கிட்ட போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள்...

குடிநீர் வசதியில்லை, சாலை வசதி இல்லை, பள்ளிக்கூடம் இல்லை... இப்படியான அடிப்படை பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், ‘எங்களைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று விசித்திர கோரிக்கையுடன் குமுறுகிறது ஒரு கிராமம். வேடந்தாங்கல் அடுத்து உள்ள சித்தாத்தூரில்தான் இந்தக் குமுறல். இது பற்றி பசுமை விகடன் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள். உடனே அங்கு சென்றோம்....

கிராம மக்கள்
கிராம மக்கள்

‘‘எங்க ஊர்ல மொத்தம் 300 குடும்பங்கள் இருக்கு. எல்லாருமே விவசாயத்தை நம்பி இருக்கிறவங்கதான். நான் ரெண்டு ஏக்கர்ல விவசாயம் பண்றேன். நாங்க நிம்மதியா விவசாயம் செஞ்சி நாலு வருஷத்துக்கு மேலாகுது. விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் என்னதான் கடின உழைப்பைக் கொட்டினாலும் இயற்கை ஒத்துழைச்சாதான் லாபம் பார்க்க முடியும். நாங்க கடின உழைப்பை போட்டு இயற்கையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நல்ல விளைச்சல் கிடைச்சாலும்கூட எங்களால சந்தோஷப்பட முடியல. காரணம், இந்தப் பகுதியில இருக்கிற குரங்குங்க பண்ற அட்டூழியம்தான்” விரக்தியுடன் பேச்சைத் தொடங்குகிறார் சித்தாத்தூரைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம்,

வீட்டில் குரங்கு
வீட்டில் குரங்கு
வீடுகளில் குரங்கு
வீடுகளில் குரங்கு

“எங்க ஊர் வனப்பகுதியை ஒட்டியிருக்கிறதால அப்பப்போ வனவிலங்குகளோட தொல்லை இருக்குறது சகஜம்தான். நாங்களும் அதுக்கு பழகியிருக்கோம். காட்டுப்பன்றியெல்லாம் அப்போப்போ விவசாய நிலத்துல புகுந்து நாசம் பண்ணிரும். ஆனா, கடந்த மூணு வருஷமா இந்தக் குரங்குங்க பண்ற அட்டூழியத்தை எங்களால தாங்கிக்கவே முடியல. விளைச்சல் எல்லாத்தையும் மொத்தமா நாசம் பண்ணிடுது. ஆரம்பத்துல ஒண்ணு, ரெண்டு வந்தப்போ… பாவம் வாயில்லா ஜீவன் தானேன்னு விட்டுட்டோம். ஆனா, நாளாக நாளாக மொதலுக்கே மோசம் வர்ற அளவுக்கு எங்க நிலைமை ஆயிருச்சு.

குரங்குகள்
குரங்குகள்

இந்த ஊருக்குள்ள நூத்துக்கணக்கான குரங்குங்க டேரா போட்டிருக்கு. எந்த மூலைக்குப் போனாலும் அங்க ஒரு குரங்குக் கூட்டத்தைப் பார்க்கலாம். வேர்க்கடலை போட்டா நோண்டிச் சாப்பிடுது, நெற்பயிரை உருவி சாப்பிடுது, மாங்காயையும் அறுத்துட்டு ஓடிடுது, வாழை மரங்களையும் அழிச்சிடுது…. இதைக் கேட்கும்போது சிலருக்குச் சிரிப்பா இருக்கலாம். ஆனா ஒருநாள் இந்தக் குரங்குக் கூட்டம் மத்தியில வாழ்ந்து பாத்தாதான் எங்க அவஸ்தை என்னான்னு புரியும். சுருக்கமா சொல்லணும்னா… நாங்க விவசாயம் பண்றதா இல்லை விட்டுட்டு சும்மா இருக்கிறதாங்கிற அளவுக்குதான் சூழல் இருக்கு. அதுக்காக இந்தக் குரங்குங்க மேலயும் தப்பு சொல்ல முடியாது. பாவம் அதுங்க என்ன பண்ணும். அதுங்களோட நிலைமை அப்படி” எனப் பரிவுடன் சொல்லும் பன்னீர்செல்வம், “இதைத் தடுக்காத வனத்துறை மேலதான் தப்பு இருக்கு. இதுமாதிரி தொல்லை தர்ற விலங்குகளைப் பிடிச்சு மறுபடியும் காட்டுக்குள்ளயே விடறதுக்கு வனத்துறையில் சிறப்புத் திட்டங்கள்லாம் இருக்கு. ஆனா, பல முறை வனத்துறையில புகார் கொடுத்தும் எங்கப் பிரச்னையைக் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. இந்தக் குரங்குக் கூட்டத்தால எங்க ஊரோட நிம்மதியே போச்சு. ஊருக்குள்ள வந்து பாருங்க உங்களுக்கே தெரியும்” என்றபடி ஊருக்குள் அழைத்துச் சென்றார்.

விவசாய நிலம்
விவசாய நிலம்

ஊருக்குள் நுழைந்ததும், ஏதோ குரங்குப் பண்ணைக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வு தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் குரங்குக் கூட்டங்கள் லூட்டி அடித்துக் கொண்டிருந்தன. குரங்குகளுக்குப் பயந்து அனைத்து வீடுகளின் கதவுகளும் சாத்தியே வைக்கப்பட்டிருந்தன. “இதோ இந்த வாழை மரங்களை எப்படிச் சிதைச்சு வெச்சிருக்குதுங்கன்னு பாருங்க…’’ தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள வாழை மரங்களெல்லாம் குரங்குகளால் சிதைக்கப்பட்டிருப்பதைக் காட்டியவாறே பேசிய தாஸ்,

சிதைக்கப்பட்ட வாழைமரங்கள்
சிதைக்கப்பட்ட வாழைமரங்கள்
சிதைக்கப்பட்ட வீடு
சிதைக்கப்பட்ட வீடு

“இப்படிப்பட்டப் பகல்ல எல்லா வீடுகளும் சாத்தப்பட்டிருக்கும் கிராமத்தை எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா? ஆரம்பத்துல விவசாய நிலங்கள்ல மட்டும் இருந்த குரங்குக்கூட்டம் அப்படியே படிப்படியா ஊருக்குள்ளேயும் வந்துருச்சு. கொஞ்சம் அசந்துட்டா போதும்… வீட்டுக்குள்ள புகுந்து என்ன கிடைக்குதோ அதையெல்லாம் தூக்கிட்டு ஓடிரும். ஓடுகளை உடைக்கிறது, கூரைகளை நாசம் பண்றதுன்னு குரங்குகளால நாங்க அனுபவிக்கிற பிரச்னைகளை அடுக்கிகிட்டே போகலாம். இதைப் புகாரா சொன்னா இதெல்லாம் ஒரு பிரச்னையான்னு அதிகாரிங்க ரொம்ப அலட்சியமா பாக்குறாங்க. தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தாதான் தெரியுங்கிற மாதிரிதான் இதுவும். இங்க இருந்து பாத்தாதான் இது எவ்வளவு பெரிய பிரச்னைன்னு புரியும். நிம்மதியா சாப்பிட கூட முடியாது” என்றார் வேதனையுடன்.

பன்னீர் செல்வம், தாஸ்
பன்னீர் செல்வம், தாஸ்
அரசு அலட்சியம் அநியாயம்
அரசு அலட்சியம் அநியாயம்

“5,000 குரங்குகளைப் பிடித்துள்ளோம்!”

இதுகுறித்து மதுராந்தகம் வனச்சரக அலுவலர் நரசிம்மனிடம் பேசினோம், “நாங்கள் குரங்குகளைப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மதுராந்தகம் ரேஞ்சில் இதுவரை 5,000 குரங்குகளைப் பிடித்து வனத்துக்குள் விட்டிருக்கிறோம். குரங்குகள் ஊருக்குள் வந்து பெருகுவதற்கு மக்கள்தான் காரணம். ஆரம்பத்தில் ‘ராமா… ராமா…’ என்று பழங்களையும் உணவையும் கொடுத்துப் பழக்கி விடுகிறார்கள். அதுவே தொல்லையாக உருவெடுத்தபிறகு, எங்களைக் குறை சொல்கிறார்கள். நாங்களும் மனிதர்கள்தான் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட விவசாயிகளை என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். அந்தப் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார். இந்த தகவலை அந்த கிராமத்து விவசாயிகளிடம் தெரிவித்து, வனத்துறை அலுவலர்களைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறோம்.

அலைபேசியை எடுங்க... அத்தனையும் படம் புடிங்க... அப்படியே அனுப்புங்க... வாட்ஸ் அப் எண்: 99400 22128