Published:Updated:

`கம்பம் பன்னீர் திராட்சை; பெரியகுளம் மாம்பழம்!'- விரைவில் புவிசார் குறியீடு?

கம்பம் பன்னீர் திராட்சை
கம்பம் பன்னீர் திராட்சை

கம்பம் பன்னீர் திராட்சை மற்றும் பெரியகுளம் மாம்பழம் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சிலர், சமீபத்தில் நடைபெற்ற விவசாயக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கிடைக்கும் பொருள்களுக்குப் புவிசார் குறியீடு (Geographical indication) கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டிற்குப் புவிசார் குறியீடு கிடைத்தது.

கம்பம் பன்னீர் திராட்சை
கம்பம் பன்னீர் திராட்சை
`மாசில்லா தேசம் 2020; நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்!'- தேனி அமைப்பின் பாசிட்டிவ் முயற்சி

ஒரு பொருளுக்குப் புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில், அப்பொருளின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து, அதைச் சந்தைப்படுத்துவது எளிதாகிறது. இதனாலேயே விவசாய விளைப்பொருள்களுக்கு அதிகமாக புவிசார் குறியீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான், கம்பம் பன்னீர் திராட்சை, பெரியகுளம் மாம்பழம்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையக்கூடிய பன்னீர் திராட்சைப் பழம், மற்ற இடங்களில் சீசன்களுக்கு மட்டுமே விளையும் திராட்சை போல அல்லாமல், வருடம் முழுவதும் விளையக்கூடியதாக உள்ளது. மேலும், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி காலநிலை மற்றும் அப்பகுதி மண்ணின் தன்மை ஆகியவை, பன்னீர்திராட்சைப் பழங்களுக்குச் சுவையைக் கொடுக்கிறது. இதனால், கம்பம் பன்னீர் திராட்சைக்குப் புவிசார் குறியீடு கொடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், புவிசார் குறியீடு பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி நிச்சயம் இடம் பெறும். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!
பெரியகுளம் மாம்பழம்
பெரியகுளம் மாம்பழம்

கம்பம் பன்னீர் திராட்சை போல, பெரியகுளம் வட்டாரத்தில் விளையக்கூடிய மாம்பழம் மிகவும் பிரபலம். அல்லிநகரத்தில் ஆரம்பித்து தேவதானப்பட்டி வரையில், பல ஆயிரம் ஏக்கரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரியகுளம் மாம்பழம் அதன் சுவைக்காக தமிழகம் முழுவதும் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மேலும், மாம்பழக்கூழ் தயாரிக்க ஏற்றதாக பெரியகுளம் மாம்பழம் இருப்பதால் ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகள் பெரியகுளம் மாம்பழத்தைத் தேடி வந்து வாங்கிச்செல்கின்றன. இதனால், பெரியகுளம் மாம்பழத்திற்குப் புவிசார் குறியீடு கொடுக்க வேண்டும் என்று மாம்பழ சாகுபடி விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கின்றனர்.

கம்பம் பன்னீர் திராட்சை மற்றும் பெரியகுளம் மாம்பழம் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சிலர், சமீபத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர்ப்புக் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயி சீனிராஜ், கோரிக்கை மனு ஒன்றை கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் அளித்தார்.

விவசாயி சீனிராஜின் மனுவிற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பதில் கடிதம் வந்துள்ளது. அதில், கம்பம் பன்னீர் திராட்சை மற்றும் பெரியகுளம் மாம்பழத்திற்குப் புவிசார் குறியீடு அளித்திட, டெல்லிக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பம் பன்னீர் திராட்சை
கம்பம் பன்னீர் திராட்சை
`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

இது தொடர்பாக பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``புவிசார் குறியீட்டை, புது டெல்லியில் உள்ள மத்திய அரசு நற்சான்று நிறுவனம்தான் கொடுக்க வேண்டும். அதனால், அந்நிறுவனத்திற்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம். தனித்துவமான, வேறு எங்குமே கிடைக்காத, குறிப்பிட்ட ஒரு புவியியல் பகுதியில் மட்டும் கிடைக்கக்கூடிய பொருள்களுக்கு, மத்திய அரசு 1999ம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு கொடுத்துவருகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, விவசாய விளைபொருள்களுக்குப் புவிசார் குறியீடு கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த வகையில், தேனி மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் கம்பம் பன்னீர் திராட்சைக்குப் புவிசார் குறியீடு கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு