Published:Updated:

`இனிமே இலவச விதைகளே வேணாம்ங்க!' - போலி விதைகளால் விவசாயிகளை வதைக்கும் அரசு

போலி விதைகளுடன் விவசாயிகள்.
போலி விதைகளுடன் விவசாயிகள்.

தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இலவச விதைகள் தரமில்லாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில், விளைநிலத்தின் பட்டா, சிட்டா பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு, இலவச விதைகள் கொடுக்கப்படுவது வழக்கம். கடந்த ஜூலை மாதம், தேனி அருகே உள்ள பள்ளப்பட்டி கிராம விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட கொத்தமல்லி, தக்காளி, வெண்டைக்காய் விதைகள் தரம் இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பள்ளப்பட்டி கிராமத்துக்குச் சென்றோம்.

விதைகள்
விதைகள்

``எங்க ஊர்ல கொத்தமல்லி சாகுபடி அதிகம். தக்காளி, வெண்டைக்காய், அரளிப்பூ, கொய்யா, இப்படி பல பயிர் செஞ்சிருந்தாலும், கொத்தமல்லியை 10 சென்ட்ல நடவு செஞ்சாதான் திருப்தியா இருக்கும். எப்பவும் தேனியில இருக்குற கடையில விதைகள் வாங்கிப் போடுவோம்.

ஆனா, இந்தத் தடவை தோட்டக்கலைத்துறை விதை கொடுக்குறாங்கனு, நிலத்தோட டாக்குமென்ட்டைக் கொடுத்து, இலவசமா விதையை வாங்கிட்டு வந்தோம். முளைச்சு வந்த ரெண்டாவது நாள் எல்லாம் கருகிப் போச்சு. அதைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு. அப்பத்தான், இன்னும் நிறைய பேரோட நிலத்துல, விதை முளைக்கவே இல்ல. எல்லாம் மண்ணுல மக்கிப் போச்சுனு சொன்னாங்க.

காமராஜ்
காமராஜ்

நான் ஒரு ஏக்கர்ல கொத்தமல்லி விதை போட்டேன். வழக்கமா 50 நாள்ல அறுவடை செய்வோம். கிலோ ரூ.100 வீதம் நல்ல லாபம் கிடைக்க வேண்டிய இடத்தில் ஒண்ணுமில்லாம போச்சு” என்ற காமராஜ், கையில் வைத்திருந்த 500 கிராம் கொத்தமல்லி விதைப் பாக்கெட்டை நம்மிடம் கொடுத்தார்.

ரூ.350 விலை கொண்ட அந்த விதைப் பாக்கெட்டில், காலாவதி தேதி, ஜூலை 2020 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. காலாவதி ஆக இருக்கும் ஜூலை மாதமே, விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

``மல்லி மட்டுமல்ல... என் தோட்டத்துல போட்ட தக்காளியும் காய்க்கவே இல்ல…” எனக் கூறி நம்மை அவரது தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் சேதுராஜ். ``ஏக்கருக்கு 10 பாக்கெட் விதை போட்டேன். இன்னையோட மூணு மாசம் ஆச்சு.

சேதுராஜ்
சேதுராஜ்

சாதாரணமா கடையில வாங்கின விதைக்கு, ஏக்கருக்கு 200 பெட்டி வரும். ஆனால், அரசாங்க விதையில 30 பெட்டி கூட வரல. காய் பிடிக்கல, செடி படர்ந்து வளரல, கருகிப்போகுது. ரெண்டு தடவ உரம் வெச்சு, ரெண்டு தடவ மருந்து அடிச்சு எந்தப் பலனும் இல்ல. வாங்கிட்டு வந்த 40 பாக்கெட் மல்லி விதையை இன்னும் விதைக்கல, எடுத்து குப்பையிலதான் போடணும்” என ஆதங்கத்தோடு பேசிய சேதுராஜ் மேலும், ``அரசாங்க இலவச விதை பாக்கெட்டுல போட்டிருக்குற விலையைவிட, கடைகள்ல 100 ரூபா கம்மியாதான் விதையை விக்குறாங்க. காசு போனாலும் பரவால. இனி இந்த இலவச விதையை என் ஆயுசுக்கும் வாங்க மாட்டேன்” என்றார் அழுத்தமாக.

``என்னோட 1 ஏக்கர் நிலத்தில (வெண்டைக்காய்) வெண்டிக்காய் போட்டேன். 100 நாள் ஆச்சு. 200 கிலோ எடுக்க வேண்டிய இடத்தில வெறும் 60 கிலோதான் எடுத்தேன். முதல் எடுப்புக்குப் பிறகு, காய் பிடிக்கவே இல்ல. தண்டு கருகுது. காய் முளைச்சு வந்தாலும், ஒடிக்க முடியாத அளவுக்குச் செடியிலேயே முத்திப் போகுது. என்னென்னமோ மருத்து அடிச்சுப் பார்த்துட்டேன். எதுக்கும் சரியா வரல.

சக்திவேல் முருகன்
சக்திவேல் முருகன்

கண்ணு முன்னால செடி கருகுறத பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. போலியான விதையைக் கொடுத்து விவசாயிகளை ஏமாத்திட்டாங்க. கொடுக்காம இருந்திருந்தா, வழக்கமா கடையில காசுக்கு விதை வாங்கிப் போட்டிருப்பாங்க. ஏன் இப்படி விவசாயிகளைக் கஷ்டப்படுத்துறாங்கனு தெரியல” என்று ஆதங்கப்பட்டார் விவசாயி சக்திவேல் முருகன்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் சீனிராஜ், ``இந்தப் பிரச்னை, பள்ளப்பட்டி கிராமத்தில மட்டுமல்ல, சங்ககோணாம்பட்டி, கோட்டைபட்டி, அய்யனார்புரம்னு சுற்றியுள்ள பல கிராமங்கள்லயும் இதே நிலைமைதான். தோட்டக்கலைத்துறையில இருக்குற அதிகாரிககிட்ட நிலைமையைச் சொன்னோம். ஆனா, இதுவரைக்கும் ஒரு அதிகாரி கூட நேரடியாக இங்க வந்து பயிர்களைப் பார்க்கவும் இல்லை. ஆய்வும் செய்யலை.

சீனிராஜ்
சீனிராஜ்

போலியான விதைகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது பெரும் குற்றம். இலவசமாகக் கொடுக்குற விதைதான் என்றாலும், சம்பந்தப்பட்ட விதைக் கம்பெனிக்கு அரசு பணம் கொடுக்குதுதானே? அப்படின்னா, இங்கிருக்குற தோட்டக்கலைத்துறை அதிகாரிக அரசாங்கத்தை ஏமாத்துறாங்கன்னுதான் அர்த்தம். ஒரு பாக்கெட் ரூ. 350 மதிப்புன்னா, அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் போயிருக்கும்னு தெரியல. இந்தப் பிரச்னையை நாங்க விடுறதா இல்ல. விதைச்சு, மூணு மாசம் காத்திருந்து, கடைசியில நஷ்டத்தைச் சந்திச்ச விவசாயிகளுக்குரிய இழப்பீடு கொடுக்கணும். இல்லையின்னா, போராட்டம் நடத்தத் தயங்கமாட்டோம்" என்றார்.

இது தொடர்பாகத் தேனி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மணிகண்டனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான், தேனிக்குப் பணி மாறுதல் பெற்று வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. விதைப்பிரச்னை குறித்து எனக்குத் தெரியாது. உடனடியாக விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன். இனி இதுபோன்று எப்போதும் நடக்காது. அடுத்தமுறை விதை கொடுக்கும்போது தரமான விதைகள் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

தோட்டக்கலைத்
துறையினர் கொடுத்த விதை
தோட்டக்கலைத் துறையினர் கொடுத்த விதை

`இனி நடக்காது' என்ற ஒற்றைப் பதிலில் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், நஷ்டத்துக்கு அரசாங்கம்தான் உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு