Election bannerElection banner
Published:Updated:

ஆக்கிரமிப்பு ஒருபக்கம்; தண்ணீர் பற்றாக்குறை மறுபக்கம்... இனியாவது தூர்வாரப்படுமா வைகை?

வைகை அணை
வைகை அணை

வைகை அணையில் படிந்துள்ள சுமார் 20 அடி உயர வண்டல் மணலை அகற்றி, அணையை தூர்வார வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி வருகிறது. `தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ?’ என்ற அச்சம், மக்கள் மனதில் எழ ஆரம்பித்துவிட்டது. `அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா?’ என்பது ஒருபுறம் இருந்தாலும், அணைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல், தூர்வாரப்படாமல் இருப்பதால், போதிய அளவு நீர் தேக்க முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகளும், விவசாய சங்கங்கத்தினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள எட்டிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ``வைகை அணையில் அதிக அளவு வண்டல் மண் படிந்துள்ளது. 15 முதல் 20 அடிக்கு வண்டல் மண் இருப்பதால், அணையில் முழுக்கொள்ளவு தண்ணீர் தேக்க முடியவில்லை. அணையைத் தூர்வார, 2016-ம் ஆண்டு தமிழக அரசு ரூ.180 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்தது. தொடர்ந்து 2019-ம் ஆண்டு ரூ.220 கோடியில் திருத்திய மதிப்பீடு தயாரித்தது. ஆனால், இதுவரை அணையைத் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், தேனி மாவட்டத்தின், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், அணைக்குத் தண்ணீர் வருவது தடைபடுகிறது. அதே போல, ஆண்டிபட்டி, மூனாண்டிபட்டி, தேக்கம்பட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை மற்றும் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிலர், மின்மோட்டார் மூலம், அணைத்தண்ணீரை சட்டவிரோதமாகத் திருடுகின்றனர். எனவே, வைகை அணையைத் தூர்வாரவும், ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர் திருட்டைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வைகை அணை
வைகை அணை
Vikatan

அம்மனுவானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர், மதுரை தலைமைப் பொறியாளர், மதுரை மற்றும் தேனி கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கடலில் நேரடியாகக் கலக்காத ஒரே நதி என்ற சிறப்பு வைகை நதிக்கு உண்டு. தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மூலவைகை ஆறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு மற்றும் அதன் கிளை நதிகள் ஆகியவை சேரும் இடமாக வைகை அணை திகழ்கிறது. 1959-ம் ஆண்டு திறக்கப்பட்ட வைகை அணையின் மொத்த உயரம் 111 அடி. ஆனால், 71 அடி மட்டுமே நீர் தேக்க முடியும். அதிலும் 20 அடி வண்டல் மண் படிந்துள்ளது. அணை கட்டப்பட்டு சுமார் 62 ஆண்டுகள் ஆன நிலையில், அணை தூர்வாரப்படாமல் உள்ளது.

வைகை அணை
வைகை அணை
Vikatan

சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் குறிப்பிடப்படும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணையில், மணல் மேடுகளும், ஆக்கிரமிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. தொடர்ச்சியாக விவசாயிகளும், விவாசாய சங்கங்களும், அணையைத் தூர்வார அரசு முன் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும், இதுவரை பலனில்லை. தற்போது, வைகை அணையைத் தூர்வாரக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணை தூர்வாரப்பட்டால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களும் விவசாயிகளும் வைகை அணையின் பயனை முழுமையாக அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு