Published:Updated:

முல்லைப் பெரியாறு மதுரை குடிநீர் திட்டம்... எதிர்க்கும் தேனி விவசாயிகள்... ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி லோயர்கேம்பில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை மதுரை மக்கள் வரவேற்றாலும், தேனி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. வருசநாடு மலைப்பகுதியில் எப்போதாவது பெய்யும் மழையால், மூல வைகையில் தண்ணீர் வருவது ஆச்சர்யமான ஒன்றாக இருக்கும் சூழலில், வைகை அணையை நிரம்பச் செய்வதில் முல்லைப்பெரியாறு தண்ணீருக்கு பெரும் பங்கு உண்டு.

குமுளி மலை அடிவாரப்பகுதியான லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் முல்லைப் பெரியாறு தண்ணீரால் பலனடைகின்றன. வழிநெடுகிலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் பேரூராட்சிகள், நகராட்சிகள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

லோயர்கேம்ப் பகுதி
லோயர்கேம்ப் பகுதி

இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கம், மாநகராட்சியின் விரிவாக்கம் போன்ற காரணத்தால், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, தேனி லோயர்கேம்பில் இருந்து முல்லைப்பெரியாறு தண்ணீரை, மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் லோயர்கேம்பில் ஆய்வு செய்ய வரும் போதெல்லாம், விவசாயிகள் நேரில் சென்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இச்சூழலில்தான், இந்தக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது, லோயர்கேம்பில் தடுப்பணை அமைத்து, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக மதுரைக்கு தரைவழி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

``இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு மக்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் கொடுக்க முடியும். 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது” - இவ்வாறெல்லாம் அ.தி.மு.க அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கோடைக்காலத்தில் குடிநீருக்காக மதுரை மாநகராட்சி மக்கள் படும் கஷ்டம், இத்திட்டத்தால் சரிசெய்யப்படும் என்பதால், மதுரை மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. மைதான நுழைவாயில், முல்லைப்பெரியாறு அணை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

தடுப்பணை கட்டப்படவுள்ள லோயர்கேம்ப் பகுதியில் மதுரை அதிகாரிகளின் ஆய்வின்போது...
தடுப்பணை கட்டப்படவுள்ள லோயர்கேம்ப் பகுதியில் மதுரை அதிகாரிகளின் ஆய்வின்போது...

இவையெல்லாம் ஒருபுறம் என்றால், இத்திட்டத்தை எதிர்க்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து, லோயர்கேம்ப் அருகே உள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், ``மதுரைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை லோயர்கேம்பில் இருந்து கொண்டுசெல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். வைகை அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லோயர்கேம்பில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால், தேனி மாவட்டம் பாலைவனமாகும். மேலும், கம்பம், கூடலூர் மக்களின் குடிநீர் தேவைக்காக, லோயர்கேம்பில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைக்கு மேல்பகுதியில், மதுரை மக்களுக்காகத் தடுப்பணை கட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால், கோடைக்காலத்தில் கம்பம், கூடலூர் மக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமத்தை சந்திப்பார்கள். கோடைக் காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் குறைந்த அளவு தண்ணீர் மதுரைக்கு மட்டும் தடையில்லாமல் சென்றுவிடும். அப்போ கம்பம், கூடலூர் மக்களின் நிலை? குடிக்கவே தண்ணீர் இல்லாமல் போகும்போது விவசாயத்தின் நிலை? ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னர் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். திட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்!” என்றனர்.

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இது தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``கம்பம் பகுதிக்கு எந்தத் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது. அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே திட்டமிடப்பட்டது. விவசாயிகளின் பயம் தேவையற்றது” என்றார்.

மதுரை மக்களின் குடிநீர் பிரச்னை ஒருபுறம் தீர்ந்தாலும், மறுபுறம் கம்பம், கூடலூர் மக்களின் குடிநீர் பிரச்னை உருவாகும் சூழல் நிலவுகிறது. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு