Published:Updated:

இப்போதைய கேள்வி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இப்போதைய கேள்வி!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

காவிரியை அபகரிப்பதுபோலவே தென்பெண்ணையாற்றையும் தகிடுதத்தமாக அபகரிக்கும் வேலையைச் சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது கர்நாடகத்தை ஆளும் பி.ஜே.பி அரசு. தென்பெண்ணையாற்றின் கிளையாறான மார்க்கண்டேய நதி கர்நாடக மாநிலத்தில் உருவாகிறது. அங்கிருந்து வந்து தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி அணைக்கு முன்பே தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இந்தத் தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து, விவசாயிகளை வாழவைத்து வங்கக் கடலில் கலக்கிறது. மார்க்கண்டேய நதியின் குறுக்கே ‘யார்கோள்’ என்ற இடத்தில் அணையைக் கட்டியுள்ளது கர்நாடகா.

இந்த விஷயத்தைக் கர்நாடகா முன்னெடுத்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஆய்வுகளைக்கூட மேற்கொள்ளக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா. பிறகு முதல்வராக வந்தமர்ந்த எடப்பாடி பழனிசாமி, இந்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டவில்லை, திறமையான வழக்கறிஞரையும் நியமனம் செய்யவில்லை. விளைவு, வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘நடுவர் மன்றம் அமைக்கலாம்’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டது.

இந்தப் பிரச்னையில் மத்தியஸ்தர், மத்தியில் ஆட்சி செய்துவரும் பி.ஜே.பி. அதன் ‘அன்புப்பிடியில்’ கட்டுண்டுகிடந்த எடப்பாடி பழனிசாமியால் ஓரடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. மேடைதோறும் ‘நானும் ரவுடிதான்’ என்பதுபோல, ‘நானும் விவசாயி’ என்று ஒருபக்கம் முழங்கிவந்த எடப்பாடி... ஆள், படை, அம்பாரியெல்லாவற்றையும் தூங்கப்போட, இதுபோன்ற விஷயங்களைக் கையில் எடுத்து, ஆளும் அரசை எச்சரிக்கவேண்டிய பெரும்பொறுப்பைக் கையில் வைத்திருந்த எதிர்க்கட்சியான தி.மு.க தாலாட்டுபாட... ஒட்டுமொத்தமாகத் தமிழக விவசாயிகள் நலன் பறிபோயிருக்கிறது. இதெல்லாம் தமிழக விவசாயிகளைத் தொன்றுதொட்டு தொடரும் சாபக்கேடாகவே மாறிக் கிடப்பதுதான் வேதனை!

ஆளுங்கட்சியாக மாறிவிட்ட தி.மு.க, இனியாவது விழித்துக்கொண்டு தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டுமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

-ஆசிரியர்

இப்போதைய கேள்வி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism