Published:Updated:

`மேட்டூர்- சரபங்கா திட்டம்... டெல்டா விவசாயம் பாதிக்கப்படும்!’ - திருவாரூர் விவசாயிகள் அச்சம்

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயம் அழிந்துப் போகும் என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என அவர் உறுதி அளித்திருந்தார்.

மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய மேட்டூர்-சரபங்கா திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், டெல்டா விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என டெல்டா விவசாயிகள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தின்போது, இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என குரல்கள் ஓங்கி ஒலித்தது. இதுகுறித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

டெல்டா
டெல்டா

இக்கூட்டத்தில் உரையாற்றிய விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், ``மேட்டூர் - சரபங்கா திட்டம் சட்டவிரோதமானது. இத்திட்டம் குறித்து தமிழக அரசு, டெல்டா விவசாயிகளிடம் எந்தவித கருத்தும் கேட்கவில்லை. இது ஜனநாயக படுகொலையாகும். இத்திட்டம் செயல்படுத்தினால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல், இங்குள்ள விளைநிலங்கள் முற்றிலும் பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

இத்திட்டம் குறித்து பேசிய முன்னோடி விவசாயி மன்னார்குடி ரங்கநாதன், ``2015-ம் ஆண்டு 1500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேட்டூர்- சரபங்கா திட்டத்தை அப்போதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயம் அழிந்துப் போகும் என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என அவர் உறுதி அளித்தார்.

காவிரி மற்றும் மேட்டூர் அனையில் எந்த ஒரு புதிய நீர்ப்பாசன திட்டத்தையும், காவிரியின் கீழ்ப்பாசன விவசாயிகளான டெல்டா விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது என காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே டெல்டா விவசாயிகளின் நலனையும், சட்ட விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால், கர்நாடாகாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரி பிரச்னையை தீர்க்க நடுவர் மன்றம் அமைத்தது போல், சேலத்திற்கும் டெல்டாவுக்கு இடையே இப்பிரச்னையை தீர்க்க நடுவர் அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிடுமோ என கவலையாக உள்ளது” என தெரிவித்தார்.

மேட்டூர்-சரபங்கா திட்டம் என்பது, வெள்ளக்காலங்களில் மேட்டூர் அணையில் அளவுக்கதிகமாக தேக்கி வைக்க முடியாத உபரி நீரை, சேலத்தின் வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடிய திட்டம்தான். இதனால் டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு