Published:Updated:

ஓ.என்.ஜி.சி குழாயிலிருந்து கசிந்த கச்சா எண்ணெய்; நாசமான ஒரு ஏக்கர் வயல்; கொந்தளிக்கும் விவசாயிகள்!

கச்சா எண்ணெய் பரவிய வயல்
கச்சா எண்ணெய் பரவிய வயல்

``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிச்சு, தமிழக அரசு சட்டம் இயற்றியாச்சு, இனிமேலும் இங்க எரிவாயு-கச்சா எண்ணெய்க் கிணறுகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. விவசாய நிலங்கள்ல உள்ள குழாய்களையும் உடனே அப்புறப்படுத்தணும்னு வலியுறுத்துறோம்’’

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்ப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனாலும் கூட ஓ.என்.ஜி.சி-யின் கச்சா எண்ணெய்க் குழாய் உடைப்பால், விளைநிலங்கள் பாழ்படுவது இன்றவுளவும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விவசாய நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் ஏற்பட்ட உடைப்பால், சிவக்குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான வயலில் கச்சா எண்ணெய் பரவியதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் டெல்டா பகுதி விவசாயிகளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் பரவிய வயல்
கச்சா எண்ணெய் பரவிய வயல்
Vikatan

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி-யின் எரிவாயு-கச்சா எண்ணெய்க் கிணறுகள் ஏராளமான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, விளைநிலங்களின் வழியாகக் கொண்டு செல்லப்படும் குழாய்களில் அவ்வப்போது ஏற்படும் உடைப்பால், கச்சா எண்ணெய் கசிந்து, நிலத்தில் பல அடி ஆழத்துக்கு நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இப்பகுதிகளில் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

`இது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல், இருக்க, இதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து வலுவான போராட்டங்களை முன்னெடுத்தார்கள், இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கு செயல்பட்டு வரும் எரிவாயு- எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் நேற்று கோட்டூர் அருகே உள்ள மேல பனையூரில் விவசாய நிலத்தின் வழியாகச் சென்ற குழாயில் ஏற்பட்ட உடைப்பால், விவசாயி சிவக்குமாரின் நிலத்தில் கச்சா எண்ணெய் வழிந்தோடியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சிவக்குமார், ``பதினைஞ்சி வருசத்துக்கு முன்னாடி, ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எங்களை அணுகி குழாய் பதிக்க அனுமதி கேட்டாங்க. எங்களால் மறுக்க முடியலை. என்னோட எட்டு ஏக்கர் நிலத்துக்கடியிலயும் குழாய் பதிக்கப்பட்டிருக்கு. குறுவை நெல் சாகுபடிக்காக, நிலத்தை உழுது அடிவுரமெல்லாம் போட்டு, நேரடி நெல் விதைப்பு செஞ்சிருந்தேன். குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கச்சா எண்ணெய் கசிஞ்சி, ஒரு ஏக்கர் பரப்புல படர்ந்திருக்கு.

விவசாயி சிவக்குமார்
விவசாயி சிவக்குமார்

பல அடி ஆழத்துக்கு மண்ணு மலடாகிடுச்சு. இன்னும் அஞ்சாறு வருசத்துக்கு இதுல எதுவுமே பயிர் செய்ய முடியாது. இந்தப் பகுதி விவசாயிகள் ஒண்ணா கூடி போராட்டங்கள்ல இறங்கினதுனால, அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாங்க. இந்த ஒரு ஏக்கர் நிலத்துல எங்கெல்லாம் கச்சா எண்ணெய் படர்ந்து பாதிக்கப்பட்டிருக்கோ, அந்த மண்ணை மட்டும் 6 அடி ஆழத்துக்கு அப்புறப்படுத்திட்டு, புது மண்ணு மாற்றி தர்றதா ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. மூணு போகத்துக்கு இழப்பீடாக ரூ.1.75 லட்சம் நஷ்ட ஈடு தர்றதாகவும் உறுதி அளிச்சிருக்காங்க’’ என்றார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; அதிர்ச்சியில் காவிரி டெல்டா!

பனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவானந்தம், ``இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கு. இதனால் டெல்டா மாவட்டங்கள்ல நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டுக்கிட்டே இருக்காங்க. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிச்சு, தமிழக அரசு சட்டம் இயற்றியாச்சு, இனிமேலும் இங்க எரிவாயு - கச்சா எண்ணெய் கிணறுகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. விவசாய நிலங்கள்ல உள்ள குழாய்களையும் உடனே அப்புறப்படுத்தணும்னு தமிழக அரசை வலியுறுத்துறோம்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு