Published:Updated:

கானல் நீராக மாறிய காவிரி நீர்! -100 ஆண்டு வேதனையைத் தீர்க்க களமிறங்கிய பட்டதாரி

காவிரி நீர்
காவிரி நீர்

விவசாய நிலங்கள் சூழ்ந்து இயற்கை எழிலோடு இருக்கும் இந்தக் கிராமத்துக்கு அருகில் சந்திரா நதி வாய்க்கால் பயணித்தும், ஊருக்குள் சொட்டு நீர் வர வழியில்லை.

பிரதாபராம்புரத்தில் கானல் நீராக இருந்த காவிரி நீரை மீட்டெடுக்க 100 ஆண்டுகளுக்குப்பிறகு, வாய்க்கால்களை தாங்களே தூர்வாரி ஊரிலுள்ள ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து கிராம மக்கள் சாதனை புரிந்துள்ளனர்.

காவிரி நீர்
காவிரி நீர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்து பிரதாபராமபுரம் என்ற கிராமம் உள்ளது. சுமார் 4,000 குடும்பத்தினர் வசிக்கும் இக்கிராமம் மாவட்டத்தில் மிகப் பெரியதாகும். விவசாய நிலங்கள் சூழ்ந்து இயற்கை எழிலோடு இருக்கும் இந்தக் கிராமத்துக்கு அருகில் சந்திரா நதி வாய்க்கால் பயணித்தும், ஊருக்குள் சொட்டு நீர் வர வழியில்லை. நீண்டகாலமாக வாய்க்கால் தூர்வாரப்படாததால் இப்பகுதியினருக்குக் காவிரி நீர் கனவாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக, ஆங்கிலேயர் காலத்தில்தான் ஊரிலுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் 3 பெரிய ஏரிகளுக்குத் தண்ணீர் வந்து முப்போகம் சாகுபடி நடந்திருக்கிறது. அதன்பின்னர் இதுநாள் வரை நிலத்தடி நீரைக் கொண்டு ஒருபோக சாகுபடிதான் செய்ய முடிகிறது. அதற்கும் 2004-ம் ஆண்டு சுனாமி உருவில் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆழிப்பேரலையால் கடற்கரையோர விளைநிலங்கள் உவர்த்தன்மையாக மாறி விவசாயம் செய்ய பயனற்றுப் போய்விட்டன.

`இதற்காகத்தான் பாடுபட்டோம், நம்பிக்கை வீண் போகவில்லை!' - 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி

இந்த நிலையில், தற்போது இவ்வூரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.வி.எஸ். சிவராசு விவசாயத்தின் மீது அதீத பற்றுக்கொண்ட எம்.பி.ஏ பட்டதாரி. பொதுப்பணித்துறை மூலமாக மறைந்துபோன பாசன வாய்க்கால் மற்றும் பழைய சந்திரா நதி வாய்க்காலை தூர்வாரி மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினார்.

ஆனால், நடப்பாண்டு குடிமராமத்து திட்டத்தின்கீழ் பணிகள் ஏதும் செய்ய முடியாது என பொதுப்பணித்துறை கைவிரித்திருக்கிறது. இருப்பினும் சற்றும் மனம் தளராத ஊராட்சி மன்றத் தலைவர், தன்னம்பிக்கையுடன் தன் கிராம மக்கள், தன்னார்வ இளைஞர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழும் வாய்க்காலை தூர்வாருவது எனத் திட்டமிட்டார். இதற்காக பொதுப்பணித் துறையினரிடமிருந்து அனுமதிக் கடிதம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆர்.வி.எஸ். சிவராசு
ஆர்.வி.எஸ். சிவராசு

ஊராட்சி மன்றத் தலைவர் சிவராசுவிடம் பேசினோம்.

``எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறையாக ஊராட்சித் தலைவராகியுள்ளேன். மீண்டும் கிராமம் செழிக்க விவசாயம் நடைபெற வேண்டும். எனவேதான் ஊர் மக்களின் ஒற்றுமையோடு, இவ்வூரிலுள்ள 3 பெரிய ஏரிகள், 46 குளங்கள் இவற்றுக்கு நீர் கொண்டு செல்லும் சுமார் 7 கி.மீ தூரமுள்ள நீர்வழிப் பாதைகளைக் கண்டறிந்து தூர்வாரும் பணிகளைத் தீவிரமாகச் செய்து முதல்கட்டமாக ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.

அடுத்து குளங்களைத் தூர்வாரி அவற்றில் நீரை நிரப்பினால் நிலத்தடியில் நன்னீர் பாய்ந்து உவர்த்தன்மை அகன்றுவிடும். சுமார் 1,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். மீண்டும் எங்கள் ஊரில் முப்போகம் சாகுபடி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு