Published:Updated:

‘முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள்! - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்...

கோவணாண்டி கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டி கடிதம்

கடிதம்

‘முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள்! - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்...

கடிதம்

Published:Updated:
கோவணாண்டி கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டி கடிதம்
நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 73 வருஷங்கள் ஆகிடுச்சு. ஆனாலும் கோவணாண்டிங்க முகத்துல சிரிப்பே இல்ல. ‘குளத்துல தண்ணியில்லே... கொக்குமில்லே மீனுமில்லே’னு சொல்ற மாதிரி விவசாயிங்க வாழ்வு வறண்டு கெடக்குது. நாங்களும் கரடியாகக் கத்தி பார்த்துட்டோம். இன்னும் எங்க பொழப்பு விடியவே இல்ல. ஆட்சியாளர்கள்கிட்ட, அரசியல்‘வியாதி’கள்கிட்ட கேட்டுக்கேட்டு அலுத்துப் போச்சு. அதனால இந்த வாட்டி கடவுளிடம் கையேந்துறதுனு முடிவு பண்ணிட்டேன். அதனால இறைவா உனக்கு இந்தக் கடுதாசி எழுதுறேன்.

எல்லாம் வல்ல, எல்லா மதத்து இறைவனுக்கும் கோவணாண்டியின் வணக்கமுங்க. எனக்குத் தமிழ்தான் எழுதபடிக்கத் தெரியும். அதை மனசுல வெச்சுக்கோ. சம்ஸ்கிருதத்தில எழுதினாதான் படிப்பேனு எங்க மந்திகளாட்டம், மன்னிக்கணும் மந்திரிகளாட்டம் ஒதுக்கிடாத சாமீ!

‘முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள்! - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுப் படியான விலை கிடைக்கல. முட்டுவளிச் செலவு (உற்பத்திச் செலவு) மூச்சு முட்டுது, தங்கம் விலை மாதிரி வெள்ளாமை செலவு கூடிகிட்டே இருக்கு. ஆனா வெளைச்சலாகுற பொருளுக்கு விலை கூடுறதில்லை. அதே அஞ்சுக்கும் பத்துக்கும்தான் விக்க வேண்டியிருக்குது. இதுல, வேலையாளுக்குத் தட்டுப்பாடு. அப்படியே ஆள் கிடைச்சாலும் கூலிக் காசு கூடிப்போச்சு.

இதுக்கு இடையில காத்து, மழை, வெயில், வறட்சி, நோய் தாக்குதல்னு எவ்வளவோ இருக்கு. அத்தனையும் கடந்து விளையுற பொருளைச் சந்தைக்குக் கொண்டு வர்றோம். வித்துட்டுப் பார்த்தா சாக்குக்கூட மிஞ்சுறதில்லை சாமீ. இதை நான் சொல்லத் தேவையில்ல... உனக்கே நல்லாத் தெரியும்.

இந்த நிலைமையில ‘கட்டுப்படியான விலை கொடுங்க, எங்களைக் காப்பாத்துங்க’னு கேட்டா, மூணு சட்டத்தை எடுத்து நீட்டுறாங்க சாமீ. ‘விவசாயியின் பாதுகாப்புக் கவசம் மோடி’னு பொய் சொல்லுறானுங்க. உற்பத்தியான பொருளை விக்குறதுக்குக் கஷ்டப்படத் தேவையில்லை. இனிமே தடையற்ற வணிகம் செய்யலாம். தமிழ்நாட்டுல விளையுற சுண்டக்காயை, குஜராத்துல கொண்டுபோய் விற்கலாம். எந்தத் தடையும் இல்லை. மாவட்ட எல்லைகள்ல இருக்க எல்லை சாமிகள் கமிஷன் கேட்க மாட்டாங்க. ‘செஸ் வரியை நீக்கிட்டோம்’னு சொல்லுது ஒரு சட்டம்.

அத்தியாவசிய சட்டத்திலிருந்து தானியங்கள், வெங்காயம், பருப்பு வகைகளை நீக்கிவிட்டோம்’னு சொல்லுது ஒரு சட்டம். விலை கிடைக்காத நேரத்துல இருப்பு வெச்சு விவசாயிக விக்கலாம்’னு சொல்லுது இன்னொரு சட்டம். ‘இடைத்தரகர்கள் தொல்லை இருக்காது. நேரடியா கார்ப்பரேட் முதலாளிகளோட ஒப்பந்தம் போட்டுக்கலாம்’னு சொல்லுது மற்றொரு சட்டம்.

குறைந்தபட்ச ஆதார விலைக்குப் பொருள்கள் வாங்குறதை அரசு நிறுத்தாது’னு சொல்றாரு மோடிஜி. இது அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு. ‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள்தாம்’னு தேசப்பிதா காந்திஜி சொன்னாரு. இந்த முதுகெலும்பை உடைக்கும் வேலை, இந்த சட்டங்கள் செய்யப்போகுது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டத்தைக் கொண்டு வருபவர்களே கொஞ்சம் கோவணாண்டிகளையும் பாருங்க. உள்நாட்டு குட்டி குட்டி கார்ப்பரேட்டுகளான கரும்பு மில் முதலாளிகளே, வாங்குன கரும்புக்குக் காசு கொடுக்க 5 வருஷம், 6 வருஷம் இழுத்தடிக்கிராய்ங்க. தமிழ்நாட்டுல மட்டும் இன்னும் 1,800 கோடி கரும்பு பாக்கி இருக்கு. இதை வாங்கிக் கொடுக்க வக்கில்லாத மத்திய, மாநில அரசுகள், ‘பன்னாட்டு கார்ப்பரேட்காரங்க வருவாங்க. விவசாயிகள் வயித்துல பால் வார்ப்பாங்க’னு சொல்றாங்க. இவங்களுக்கெல்லாம் நீ அறிவை வெக்காம விட்டுட்டியா ஆண்டவா? கவர்மென்ட் கொடுக்காத விலையை கார்ப்பரேட் காரன் கொடுப்பான்னு சொல்றாங்க. இது எவ்வளவு பெரிய மடத்தனம். இவனுங்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு மாதிரி அறிவு கட்டுப்பாடு பண்ணி விட்டுட்டயா?

ஹர்சிம்ரத் கவுர்
ஹர்சிம்ரத் கவுர்

2-8 சதவிகிதம் இருந்த செஸ் வரி இனி இல்லையாம். பலே... பலே... ஆக இனி குஜராத், மகாராஷ்டிராவுல இருந்து தானாகப் பறந்து வந்து தமிழ்நாட்டு மில்கள்ல பருத்தி நூலாக மாறிடுமா? லாரியிலதான கொண்டு வரணும். பருத்தியைக் கொண்டு வர லாரிகள் தேவையில்லை’னு சொல்ற மாதிரி இருக்கு இவங்க சொல்றது. குஜராத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு லோடு பஞ்சு கொண்டு வர வாடகை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல ஆகும். அதுல டீசல் வரி, டோல்கேட் வரி மட்டும் 70,000 ரூபாய்க்கு மேல ஆகும். ஒரு லோடு பஞ்சுக்குச் செஸ் வரி மிஞ்சிப் போனா ரூ.2,000 இருக்கும். 70,000 ரூபாயை உருவிக்கிட்டு 2,000 ரூபாயைக் குறைச்சிட்டோம்னு பெருமை யடிச்சுக்குறாங்க. இதுல விவசாயிகளைக் குபேரர்களா ஆக்கிவிடுவோம்னு கதை வேற... முடியலடா சாமீ!

‘குறைந்தபட்ச ஆதார விலைக்குப் பொருள்கள் வாங்குறதை அரசு நிறுத்தாது’னு சொல்றாரு மோடி ஜி. இது அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு. ‘உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, எம்.எஸ்.பி விலை கொடுத்து உணவுப்பொருள்களை வாங்குறது தவறு. சந்தை விலையில்தான் வாங்க வேண்டும்’னு ஏற்கெனவே உலக வணிக அமைப்புல அமெரிக்கா புகார் சொல்லியிருக்குது. இன்னிக்கு நிலையில, ஒரு குவிண்டால் மக்காச் சோளத்தோட குறைந்தபட்ச ஆதார விலை 1,850 ரூபாய். ஆனா, வெளிமார்க்கெட்டுல விவசாயிங்ககிட்ட 1,000 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை. அரசாங்கமும் வாங்கல. இந்த நிலைமையில நாளைக்கு கார்ப்பரேட் கம்பெனிக்காரன் வாங்குவானு இவங்க சொல்றதை எப்படிச் சாமீ நம்புறது. ஒட்டுமொத்தமா மோடி அரசு விவசாயிகளைக் கைகழுவிவிடத் திட்டம் போட்டுருக்கு. இருந்தாலும் விவசாயம் என்பது மாநில அரசு கட்டுப்பாட்டுல இருக்குது. அதுக்கும் ஆப்பு வெச்சுட்டாரு மோடி ஜி. கூட்டாட்சி தத்துவத்தைக் குழித் தோண்டி புதைச்சிட்டாரு. அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிற உரிமைக்கும் கொள்ளி வெச்சுட்டாரு. ஆனா அது தெரியாம, நானும் ஒரு விவசாயிதான்னு சொல்லிக்கிற எங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி, ஆமாம் சாமி... போட்டுக்கிட்டு இருக்குறது அதைவிடக் கேவலம்.

‘இந்த மூணு சட்டங்களைப் பத்தியும் மந்திரிகளுக்கும் கொஞ்சம் உண்மையைப் புரிய வெச்சு, கார்ப்பரேட் முதலைகளிடமிருந்து எங்களைக் காப்பாத்துங்க சாமீ..’’

இனிமே விவசாயிக பொருளை இந்தியா முழுக்க விற்கலாமாம்; சுதந்திர சந்தையாம்; தடையற்ற வணிகமாம். இதுல ஏதோ சதி இருப்பதாகவே தெரிகிறது. பன்னாட்டுப் பொருள்களுக்குத் தடையற்ற வணிகத்தைத் திறந்துவிட முன்னோட்டமாக இருக்குமோ... இன்று இந்தியா முழுக்கத் தடையற்ற வணிகம்னு சொல்றவங்க, நாளைக்கு உலகம் முழுக்கத் தடையற்ற வணிகம்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.

மோடி
மோடி

சுதந்திர வணிகம்னு சொல்றாங்களே... இவங்க கொடுக்குற சுதந்திரம் எப்படி இருக்குதுன்னு தெரியுமா? ஒரு குளத்துல முதலைக் குட்டிகள், மீன் குஞ்சுகள் எல்லாம் இருந்துச்சாம். சின்ன வயசுல எல்லாம் ஓடிப் பிடிச்சு சந்தோஷமா விளையாடுவாங்களாம். முதலை குட்டிங்க, பெரிய முதலைகளா வளர வளர, தன்னோட ஓடி விளையாடுன மீன்களைப் பிடிச்சு திங்க ஆரம்பிச்சுடுச்சாம். மீன்களுக்கு ஒண்ணும் புரியல. யாருகிட்டப் போய் நியாயம் கேட்குறதுனு முழிச்சாங்க. அப்ப அங்க வந்த ஒரு சாமியார், ‘இந்தியாவுல மோடி ஜினு ஒரு மாமன்னர் இருக்காரு. அவருகிட்ட அறிவாற்றல் மிகுந்த மந்திரிகள், அதிகாரிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்ககிட்ட சொன்னா, நீதி கிடைக்கும்னு சொன்னாராம்.

மீன்கள் எல்லாம் கூடிப் பேசி, மோடிஜி தரப்புல நியாயம் கேட்டாங்களாம். ‘அதெப்படி குளத்தில் முதலை மட்டும் நாட்டாமை செய்யலாம். உங்களுக்கும் வாழச் சம உரிமை இருக்கிறது. இனிமே முதலை குறும்பு செய்யக் கூடாது. மீன்களையும் வாழ அனுமதிக்க வேண்டும்’னு சட்டம் போட்டாங் களாம். இப்ப போட்டுருக்கப் புது வேளாண் சட்டங்கள் மாதிரி. மீன்களும் ஆனந்த கூத்தாடி குளத்துக்குள்ள துள்ளி குதிச்சு விளையாண்டுச்சு.

ரெண்டு நாள்கள் பசியோட நீலிக்கண்ணீர் வடிச்ச முதலை, பிறகு ‘மீன் நண்பர்களே குளத்தில் வாழ எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை உங்களுக்கும் இருக்கிறது. எனவே நான் உங்களைக் கொன்று தின்பதுபோல, நீங்களும் என்னைக் கொன்று திங்கலாம்’னு சொல்லிச்சாம்.

மீன்களுக்கு ரொம்பச் சந்தோஷம். முதலையைச் சுத்தி சுத்தி வந்து இஷ்டத்துக்குக் கடிச்சதுங்க. ஆனா, ஒரு செதிலைக்கூடச் சிமிட்ட முடியலையாம். கடைசியில முதலை எல்லா மீன்களையும் கபளீகரம் செஞ்சிடுச்சாம். எங்களது மோடி ஜி, போடுற சட்டமும் இப்படித்தான் இருக்கப்போகுது. இந்தச் சுதந்திர சந்தை ஒரு நாளைக்கு கார்ப்பரேட்காரனுக்கு இரையாக மாறிடுமோன்னு சந்தேகமா இருக்குது.

இந்தச் சந்தேகம் எனக்கு மட்டுமில்லீங்க. மோடிஜி அரசாங்கத்துல இருந்த பெண் மந்திரிக்கும் வந்திருச்சு. மத்திய அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர், ‘இந்தச் சட்டம் விவசாயிகளைக் காப்பாத்தாது. கடனில் தள்ளி கொன்றுவிடும்’னு சொல்லி மந்திரி பதவியைத் தூக்கி எறிஞ்சுட்டாங்க. அந்த பெண்மணிக்கு இருக்க அக்கறைக்கூட விவசாயிக மேல மத்த மந்திரிகளுக்கு இல்லை. ஏன் எங்க ஊரு ‘விவசாயி’ எடப்பாடியாருக்கே இல்லை. என்னோட வேண்டுகோள் இதுதான் சாமீ. ‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகம் தான்’னு தேசப்பிதா காந்திஜி சொன்னாரு. அந்த முதுகெலும்பை உடைக்கும் இந்த மூணு சட்டங்களைப் பத்தியும் மத்த மந்திரிகளுக்கும் கொஞ்சம் உண்மையைப் புரிய வெச்சு, கார்ப்பரேட் முதலைகளிடமிருந்து எங்களைக் காப்பாத்துங்க சாமீ.

இறைவா, நம்பியவர்களைக் கைவிட்ட மோடிஜி, மாதிரி நீங்களும் எங்களைக் கைவிட்டுடாதீங்க சாமீ!

இப்படிக்கு

கோவணாண்டி.