Published:Updated:

`திருப்பூர் முழு இயற்கை விவசாய மாவட்டமாக மாறும்’ - பசுமை விகடன் பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் பேச்சு!

மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

ஒவ்வொரு வீடும் ஒரு வேளாணகமாக மாற வேண்டும். வீட்டைச் சுற்றிலும் காய்கறிகள் வளர்க்கலாம் எனத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் பசுமை விகடனுக்கு முக்கிய இடமிருக்கிறது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், ஜீரோபட்ஜெட் பிதாமகன் பாலேக்கர் ஆகியோர் மூலம் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்றது பசுமை விகடன்.

பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்

இலவசப் பயிற்சிகள், கட்டணப் பயிற்சிகள் எனப் பல்வேறு பயிற்சிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக `இனியெல்லாம் இயற்கையே' என்ற தலைப்பில் மூன்று நாள்கள் களப்பயிற்சி ஒன்று திட்டமிடப்பட்டது. பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து நடத்தும் களப்பயிற்சி, இன்று திருப்பூரில் தொடங்கியிருக்கிறது.

இப்பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், ``ஒவ்வொரு வீடும் ஒரு வேளாணகமாக மாற வேண்டும். வீட்டைச் சுற்றிலும் காய்கறிகள் வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டிகளில் காய்கறிகளை வளர்க்கலாம். அதைத் திருப்பூர் மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்வது அவசியம். அதற்காகத் தோட்டக்கலைத்துறை மூலம் விதைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பசுமை விகடன் உதவியாக இருக்கிறது.

விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவை எடுத்துச் செல்வது அவசியம். திருப்பூர் மாவட்டத்தை முழுமையான இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றுவதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. முன்னரே கோவில்பட்டியில் துணை ஆட்சியராக இருந்தபோதே பசுமை விகடன் நடத்திய நிகழ்வைத் தொடங்கி வைத்திருக்கிறேன். இப்போது இரண்டாம் முறையாக பசுமை விகடன் நிகழ்வைத் தொடங்கி வைக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சந்தை ஆரம்பிக்க வேண்டும். அதை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்." என்றார்.

வழக்கமான பயிற்சியாக இல்லாமல் இந்தப் பயிற்சியில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. பயிற்சியில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குழுவாக வாட்ஸ்அப்பில் இணைக்கப்படுவார்கள். பயிற்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அந்தக் குழுவில் பகிரலாம். அது தொடர்பான வல்லுநர்கள், தேவையான விளக்கங்களை அளிப்பார்கள். இது மூன்று நாள்கள் மட்டுமான பயிற்சியாக இல்லாமல் ஒரு இயக்கமாகத் தொடர்ந்து பயணிக்க இருக்கிறது.

பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்

பஞ்சகவ்யா சித்தர், மருத்துவர் நடராஜன், கால்நடை மூலிகை மருத்துவம் தொடர்பாக மருத்துவர் புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் செல்வம், நீர்மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ், சித்த மருத்துவர் மைக்கேல் ஜெபராஜ், தோட்டக்கலை விஞ்ஞானி முனைவர் செந்தூர்குமரன், விதைகள் யோகநாதன், இயற்கை வேளாண்மை ஆலோசகர் ஏகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்கள் பயிற்சியளிக்க இருக்கிறார்கள்.

பின் செல்ல