Published:Updated:

திருவாரூர்: `2 நாள் தாமதம் ஆகியிருந்தாலும்..!' -நெல் கொள்முதலால் நெகிழும் விவசாயிகள்

வேகமடைந்த நெல் கொள்முதல்
வேகமடைந்த நெல் கொள்முதல்

’எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல மட்டுமே சுமார் 8,000 நெல் மூட்டைகள், கொள்முதல் செய்யாமல் கிடந்துச்சு. மற்ற கிராமங்கள்லயும் அதே நிலைமைதான்’.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா அரித்துவாராமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், அலுவலர்களின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனைப்பட்டார்கள். இதனால் வீதிகளில் ஆங்காங்கே நெல் மூட்டைகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

கொள்முதலுக்காக காத்துக்கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டதாக, செய்வதறியாது கண்ணீர்ல் தவித்தார்கள். உயர் அலுவலர்களின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டுசெல்ல முயன்றதோடு, புகைப்பட ஆதாரங்களோடு விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனால், விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்த்துள்ளனர்.

திருவாரூர்: மழையில் நனைந்த நெல் மூட்டைகள்!  -அதிகாரிகளால் கலங்கும் விவசாயிகள்
வீதிகளில் கிடந்த நெல்
வீதிகளில் கிடந்த நெல்

விவசாயிகளின் நலன் காப்பதற்காகவே, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதார்த்தமோ, மிகவும் வேதனையானது. கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல், விரைவாகக் கொள்முதல் செய்யப்படுவதே இல்லை. நீண்டநாள் இழுத்தடிப்புகளால், பல்வேறு விதமான பாதிப்புகளைச் சந்திக்கும் விவசாயிகள், மனம் உடைந்து போகிறார்கள்.

அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற விவசாயி, கடந்த 2-ம் தேதி நம்மைத் தொடர்புக்கொண்டு, ‘இந்தப் பகுதியில கோடை நெல் சாகுபடியில நல்ல விளைச்சல். ஏக்கருக்கு 35 மூட்டை வீதம் மகசூல் கிடைச்சிருக்கு. ஆனால், எங்களால் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை. காரணம், எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல ஒழுங்காவே கொள்முதல் நடக்கலை.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

அரித்துவாரமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு நான் கொண்டு போன நெல் மூட்டைகள், மூணு நாள்களாக அங்கேயே திறந்தவெளியில காத்துக்கிடக்கு. மழையில் நனைஞ்சி, சில மூட்டைகள் சேதமாயிடுச்சி. எனக்கு மட்டுமல்ல, எங்க பகுதி விவசாயிகள் எல்லாருக்குமே இந்த நிலைமைதான். கோயில், பள்ளிக்கூடம், சாலைனு பொது இடங்கள்ல, திறந்தவெளியில ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில நனைஞ்சி கிடக்கு. சாக்குகள் இல்லாததால, இப்ப கொள்முதல் செய்ய முடியாதுனு கொள்முதல் நிலைய ஊழியர்கள் சொல்றாங்க. பக்கத்து ஊர்கள்ல உள்ள கொள்முதல் நிலையங்களுக்காவது, எங்களோட நெல்லை கொண்டுப் போகலாம்னு விவசாயிகள் முயற்சி பண்ணினோம். அங்கேயும் இதே நிலைமை’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் மணிகண்டனிடம் பேச முயன்றோம். அலைபேசியில் பலமுறை முயன்றும் நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. விவசாயிகளின் வேதனை குறித்து வாட்ஸ் அப்பிலும், குறுஞ்செய்தியிலும் அவருக்கு நாம் தகவல் அனுப்பியிருந்தோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடமும் விவசாயிகளின் வேதனையை முறையிட தொடர்ந்து முயன்றோம்.

Vikatan

வெட்டவெளியில் வீதிகளில் கிடந்து நனைந்த நெல் மூட்டைகளின் புகைப்படங்களோடு விகடன் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டோம். இதையடுத்து, மீண்டும் நம்மை தொடர்புக்கொண்ட விவசாயி சசிகுமார், ‘’விகடனுக்கு ரொம்ப நன்றி. எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல மட்டுமே சுமார் 8,000 நெல் மூட்டைகள், கொள்முதல் செய்யாமல் கிடந்துச்சு. எங்க ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல, எட்டுக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள்லயும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீதிகள்ல கிடந்துச்சு.

விகடனில் செய்தி வெளியானதும், உயரதிகாரிகள் இங்க நேரடியாக வந்து எங்களிடம் வருத்தம் தெரிவிச்சாங்க. உடனடியாக சாக்குகள் வரழைக்கப்பட்டு, இங்க உள்ள எல்லா கொள்முதல் நிலையங்கள்லயுமே, இப்ப கொள்முதல் வேகமாக நடந்துக்கிட்டு இருக்கு. எங்களுக்கு உடனடி தீர்வு கிடைச்சிருக்கு. இரண்டு மூன்று நாள்கள் தாமதமாகிருந்தால்கூட, மிகப்பெரிய நஷ்டத்தை சந்திருப்போம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு