Published:Updated:

`ஸ்வீட் சார்லி; கேமரோசா; 100 கிலோ வாழைத் தார்!' - நீலகிரி தோட்டக் கலையின் அசாத்திய சாதனை

Sathish R
கே.அருண்

தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு சார்பில் ஊட்டியில் உள்ள திசு வளர்ப்புக்கூடத்தில் வீரிய ரக வாழை, ஸ்வீட் ஸ்ட்ராபெரி மற்றும் ஆர்க்கிட் நாற்றுகளை திசு வளர்ப்பு மூலம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழை
திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழை

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திசு வளர்ப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த ஆய்வகம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தோட்டக்கலை அதிகாரிகளின் முயற்சியால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திசு வளர்ப்புக் கூடம் சீரமைப்பு செய்யப்பட்டு கருவிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.

திசு வளர்ப்பு ஆய்வகம்
திசு வளர்ப்பு ஆய்வகம்

புதிதாகத் தாவரவியலாளர்கள் நியமிக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்யத் தொடங்கினர். தோட்டக்கலைத்துறை மூலம் கடந்த 6 மாதமாக சோதனை அடிப்படையில் இந்தக் கூடத்தில் கிரேண்ட் 9 [g9] எனப்படும் வீரிய ரக வாழை, இரண்டு வகை ஸ்ட்ராபெரி நாற்றுகள், (Sweet Charlie, Camarosa) ஆர்க்கிட் மலர் நாற்றுகள் (Phalaenopsis Orchids) ஆகியவை திசு வளர்ப்பு மூலம் உருவாக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நாற்றுகளை உற்பத்தி செய்துவருகின்றனர்.

தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், ``விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாழை, ஸ்ட்ராபெரி போன்ற நாற்றுகள் கிடைக்கவும் அதிக மகசூல் பெறவும் வழிவகை செய்யும் வகையில் திசு வளர்ப்பு ஆய்வகத்தைப் புதுப்பித்து சோதனை முயற்சியில் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டோம். நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது'' என்றார்.

வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட வாழை
வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட வாழை
கே.அருண்

பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தோட்டக்கலைத்துறை மூலம் திசு வளர்ப்புக்கூடத்தில் தற்போது ஜி9 எனப்படும் வீரிய ரக வாழை உருவாக்கப்பட்டது. இவை தற்போது பூங்கா பசுமைக் குடிலில் நடவு செய்யப்பட்டுள்ளது.

சில வாரங்களில் இவை நன்கு வளர்ந்து தயாராகிவிடும். இவ்வகை வீரிய ரக வாழை, தனியார் நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக தோட்டக்கலைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை வாழை 10 மாதத்தில் முழு விளைச்சலை தந்து விடும். 6 அடி உயரம் வளரும். இவ்வாழை 6 அடி உயரத்திற்கு தார் போடும்.

உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன்
உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன்

இதுதவிர ஸ்வீட் சார்லி, கேமரோசா என இருவகை ஸ்ட்ராபெரி பழ நாற்றுகளும் பெலோனோபிசிஸ் எனப்படும் ஆர்க்கிட் மலர் நாற்றுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி ஸ்ட்ராபெரிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதேபோல் ஆர்க்கிட் மலருக்கும் கிராக்கி உள்ளது. தற்போது சோதனை முயற்சியாக இவை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தி அதிகரிக்கப்படும். இதன் மூலம் அதிகளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள். உற்பத்தி விலையில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்" என்றார் .