Published:Updated:

`எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு!’ - தமிழக விவசாயிகள் சங்கம்

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

ராணிப்பேட்டைக்கு இன்று வந்திருந்த தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது.

ஆரம்பமாகிவிட்டது சட்டமன்றத் தேர்தல் திருவிழா. தேர்தல் விளம்பரத்துக்கு இப்போதே சுவர்களைத் தேடத் தொடங்கிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். இந்த நிலையில், ராணிப்பேட்டைக்கு இன்று வந்திருந்த தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞர் அணித்தலைவர் ஆர்.சுபாஷ், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் ரவீந்திரன், திமிரி ஒன்றியத் தலைவர் ஏகாம்பரம், திருத்தணி சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கமலாகர் மற்றும் பொன் பார்த்தசாரதி ஆகியோர் இந்தப் பட்டியலை தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் வழங்கினர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு...
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு...

விவசாயிகள் கொடுத்த பட்டியலில்,``விவசாயிகளின் அனைத்துவித கடன்களையும் எவ்வித பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, வேளாண் பொருள்களுக்கு உற்பத்தி செலவைக் கணக்கிட்டு அதனடிப்படையில், உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய மின் இணைப்பு கேட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். தட்கல் திட்டத்தைக் கைவிட்டு இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும். அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி இணைக்க வேண்டும்.

முதற்கட்டமாக, தென்னக நதிகளை இணைக்க வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை வனத்துக்குள்ளேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயும், கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 200 ரூபாயும் கொடுக்க வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆர்.சுபாஷ்
ஆர்.சுபாஷ்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை முழுமையாக வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம்தோறும் 3,000 ரூபாய் வழங்க வேண்டும். விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. அத்தியாவசியப் பணிகளுக்கு கையகப்படுத்தும்போது, நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் 3 மடங்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை முற்றிலுமாகச் செயல்படத் தடை செய்ய வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞர் அணித்தலைவர் ஆர்.சுபாஷ் கூறுகையில், ``எங்கள் அமைப்பு கட்சி சார்பற்றது. எங்கள் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதியளிக்கும் கட்சிக்கே 2021 தேர்தலில் ஆதரவு தருவோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு