Published:Updated:

`மோடி பதவியேற்ற மே 26 எங்களுக்கு கறுப்பு தினம்!' - வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிய விவசாயிகள்

கறுப்புக் கொடியுடன் விவசாயிகள்
கறுப்புக் கொடியுடன் விவசாயிகள்

``கொட்டும் பணி, கடுமையான வெயில், மழை... இவற்றையெல்லாம் விட கொரோனா பேராபத்துக் காலத்துலயும் போராட்டத்தைத் தொடர்ந்துகிட்டு இருக்காங்க."

`இந்திய விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மற்றும் அரசு கொள்முதலுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தைக் கைவிட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, இன்றுடன் ஏழாவது ஆண்டு நிறைவுற்று, எட்டாவது ஆண்டியில் அடியெடுத்து வைக்கிறது. இதை இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கண்டித்தும், இதைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோச்சா]) அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தங்களது விளைநிலம் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, கறுப்பு தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கறுப்புக் கொடியுடன் விவசாயிகள்
கறுப்புக் கொடியுடன் விவசாயிகள்

மத்திய அரசு கடந்த ஆண்டு, விவசாய விளைபொருள்கள் ஊக்குவிப்புச் சட்டம், பண்ணை உறுதியளிப்பு சேவைச் சட்டம், அத்தியாவசியப் பண்டங்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இந்த மூன்று சட்டங்களும் தங்களை வஞ்சிக்கக்கூடியது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த மூன்று சட்டங்களையும் உடனடியாகக் கைவிடக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில், கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். கடும் குளிர், கனமழை, சுட்டெரிக்கும் வெயிலிலும் இவர்களது போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இதில் ஏராளமான விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கல்நெஞ்சு கொண்டவராக, பிடிவாதமாக இருந்துகொண்டு, இந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்க மறுக்கிறார். இந்நிலையில்தான் பிரதமர் மோடி அரசு மத்தியில் பதவியேற்று, இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டெல்லியில் கடும் இன்னல்களோடு நீண்ட நாள்களாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஆறு மாதம் நிறைவடைகிறது. இதைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடித்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் தங்களது விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக் கொடி ஏந்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``இதுவரை உலக வரலாற்றுல வேற எங்கயுமே இப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடந்திருக்காது. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களோட உயிரைப் பணயம் வச்சு, பல மாதங்களாகப் போராட்டக் களத்திலேயே இருக்காங்க.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

இது மிகப் பெரிய தியாகம். கொட்டும் பணி, கடுமையான வெயில், மழை... இதையெல்லாம் விட கொரோனா பேராபத்துக் காலத்துலயும் போராட்டத்தைத் தொடர்ந்துகிட்டு இருக்காங்க. இது மிகப்பெரிய அர்ப்பணிப்பு. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, கொஞ்சம் கூட கண்ணியம் இல்லாமல், டெல்லியில் போராடுபவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல. இவங்க எல்லாரும் இடைத்தரகர்கள்னு சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்துறார். இந்தப் போராட்டத்துல இதுவரைக்கு 300 விவசாயிகள் உயிர்த் தியாகம் செஞ்சிருக்காங்க. இடைத்தரகர்களா இப்படி உயிர்த் தியாகம் செய்வாங்க. பிரதமர் நரேந்திர மோடிக்கு கொஞ்சம்கூட விவசாயிகள் மேல ஈவு இரக்கமில்லை. இவர் தலைமையிலான மத்திய அரசு, இன்னைக்கு எட்டாவது வருஷத்துல அடியெடுத்து வைக்குது. இவர் இந்திய பிரதமராகப் பதவியேத்த மே 26-ம் தேதி விவாயிகளுக்கு கறுப்பு தினம்’’ எனக் கடுமையாகச் சாடினார்.

அடுத்த கட்டுரைக்கு