Election bannerElection banner
Published:Updated:

முடக்கிய திட்டத்தை மீண்டும் தொடங்கிய எடப்பாடி... கல்லணைக் கால்வாய் புனரமைப்பு இனி என்னாகும்?

கல்லணைக் கால்வாய்
கல்லணைக் கால்வாய்

தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது என்பதாலேயே, இத்திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டது அ.தி,மு.க அரசு.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அப்பாவி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது வேதனையான விஷயம். இதற்கு ஓர் கசப்பான எடுத்துக்காட்டு கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது என்பதாலேயே, இத்திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டது அ.தி,மு.க அரசு. இதனால் விவசாயிகள் சந்தித்த பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்தவாறு, காணொலிக் காட்சி மூலம் கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 2,639 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம், இன்னும் மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் காட்டமான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கல்லணைக் கால்வாய் கட்டுமானங்கள்
கல்லணைக் கால்வாய் கட்டுமானங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாயின் மொத்த நீளம் 148 கிலோமீட்டர். இது கல்லணையில் தொடங்கி, தென்னங்குடி, சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வழியாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மும்பாலையில் நிறைவடைகிறது. 2,27,472 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், 697 ஏரிகள் மூலம் 82,000 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசனம் பெறும் வகையில் இக்கால்வாய் வடிவைக்கப்பட்டது. இதன் கரைகள் மற்றும் கட்டுமானங்கள் நீண்டகாலமாக மறு சீரமைப்பு செய்யப்படாததால், சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனால் தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ``பாசனத்துக்கு கடைமடை வரை தண்ணீர் வந்து சேராததால், வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடிவதில்லை. கல்லணைக் கால்வாய் முழுமையாகப் புனரமைக்கப்பட்டால்தான் இப்பிரச்னைக்கு ஓர் நிரந்தரத் தீர்வு காண முடியும்" என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வந்தார்கள்.

இந்நிலையில்தான், கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டு, 2009-2011-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்கான முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்தன. அதற்குப் பிறகு, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் 2,639 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``எங்க பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கல்லணைக் கால்வாயைத்தான் நம்பியிருக்கோம். இதைவிட்டால், எங்களுக்கு பாசனத்துக்கு வேற வழியே இல்லை. இதோட கரைகள், மதகுகள், சருக்கை உள்ளிட்ட கட்டுமானங்கள் சிதிலமடைஞ்சி போனதால், கடைமடை வரைக்கும் முழுமையா தண்ணீர் வந்து சேர மாட்டேங்குது. கல்லணைக் கால்வாயோட முழு கொள்ளளவு 4,000 கன அடி.

கல்லணைக் கால்வாய்
கல்லணைக் கால்வாய்

ஆனால், பல இடங்கள்ல அடிக்கடி உடைப்பு ஏற்படுறதுனால, பெரும்பாலான ஆண்டுகள்ல 2,000 கன அடிக்கும் குறைவாதான் தண்ணீர் திறப்பாங்க. ஒரு சில ஆண்டுகள் மட்டும் 2,800 கன அடி தண்ணீ திறந்திருக்காங்க. தண்ணீர் திறக்குறதே ரொம்ப குறைவான அளவு. இதுவும் ஒழுங்கா வந்து சேராததுனால, விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுறோம். பயிரைக் காப்பாத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க. விவசாயிகள் உயிரிழக்கக்கூடிய அவலமும் நிகழ்ந்திருக்கு. இதனால் கல்லணைக் கால்வாய் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படணும்னு விவசாயிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை வச்சிக்கிட்டே இருந்தாங்க. இந்த நிலையில்தான் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஏற்பாட்டில், நபார்டு வங்கி நிதி உதவியோடு, 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் மறுசீரமைப்புத் திட்டம் உருவாக்கப்படது.

2006-2011-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி இருந்தது. 200 கோடி ரூபாய் செலவுல முதல்கட்ட பணி 2009-ல் தொடங்கப்பட்டு 2011-ல நிறைவடைஞ்சது. அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சி அதைத் தொடர்ந்திருந்தால், சுமார் 200, 300 கோடி ரூபாயில அப்போதே முழுமையாக சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் பணிகளை முடிச்சிருக்கலாம். ஆனால், தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கிறதுனாலயே, அரசியல் காழ்ப்புணர்ச்சியினால, கடந்த பத்தாண்டுகளாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்ப 2,639 கோடியில இத்திட்டத்தை உருவாக்கி இருக்காங்க. மக்களோட வரிப்பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுது. சீரமைப்பு பணிகள் தாமதமானதால, விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வாழ்வாதரம் இழப்பு.

கல்லணைக் கால்வாய் கட்டுமானங்கள்
கல்லணைக் கால்வாய் கட்டுமானங்கள்

இது ஏதோ புது திட்டம் போல காண்பிச்சு, திறந்து வைக்குறாங்க. இதையாவது நேர்மையாக, தரமாக, விரைவாக செஞ்சு முடிக்கணும். ஏற்கெனவே பல ஆண்டுகள் காலதாமதம் ஆயிடுச்சு. இன்னும் மூன்று ஆண்டுகள்ல மூன்று கட்டமா இந்தப் பணிகள் நடக்கும்னு தமிழக அரசு அறிவிச்சிருக்கு. இப்பவுள்ள நவீன காலத்துல இவ்வளவு நாள்கள் தேவையே இல்லை. இதுக்கான டெண்டர் விட்டு முடிச்சிட்டாங்க. இப்ப பணிகள் நடக்கப்போகுது. அரசுத்துறை அதிகாரிகள் எல்லாரும் தேர்தல் பணிகள் மும்முரமாயிடுவாங்க. கல்லணைக் கால்வாயில் நடக்கப்போகுற பணிகள் எந்தளவுக்கு தரமாக இருக்கப்போகுதுனு தெரியல. தர நிர்ணய அதிகாரிகள், அக்கறையோடு இதுல கவனம் செலுத்துவாங்களா?’’ என கவலையோடு தெரிவித்தார்.

விவசாயிகளின் கவலையையும் சந்தேகங்களையும் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. நேர்மையாகவும் விரைவாகவும் பணிகள் நடைபெற தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு