Published:Updated:

கோவையிலிருந்து இடம் மாற்றப்படும் விதை & அங்ககச் சான்றளிப்புத்துறை; விவசாயிகளுக்குப் பாதிப்பா?

ஏற்கெனவே வேளாண்மை அலுவலர்கள் வயலுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. இப்போது விதைகளையும், இயற்கை விவசாயத்தையும் கண்காணித்து வரும் இந்தத் துறையையும் சென்னைக்கு மாற்றிவிட்டால் இழப்பு இந்தத் துறைக்கு இல்லை. விவசாயத்துக்குத்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசு விதைப்பண்ணையிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்படும் விதைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விற்கும் விதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, விற்பதற்கும் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கும் உதவி வருகிறது விதைச் சான்றளிப்புத் துறை. இதோடு இயற்கை விவசாயம் செய்யப்படும் நிலங்களுக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவதற்கு அங்ககச் சான்றளிப்புத் துறை செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு துறைகளும் சேர்ந்து விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநரகம் (Directorate of Seed Certification and Organic Certification) என்ற பெயரில் கோயம்புத்தூரிலிருந்து செயல்பட்டு வந்தது. வேளாண்மைத் துறையின் சகோதர துறையான இது தற்போது சென்னைக்கு மாற்றப்படும் என்று வேளாண் மானிய கோரிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அங்ககச் சான்றளிப்புத் துறை
அங்ககச் சான்றளிப்புத் துறை
தமிழக வேளாண் பட்ஜெட் 2021-22 -  
பசுமை விகடன் எடுத்த முயற்சி... விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!

1979-ம் ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது இந்தத் துறை. காரணம் விவசாயத்தில் விதை என்பது மிகவும் முக்கியமானது. விதையில்லையேல் விவசாயம் இல்லை. வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கும் விதைகளை வயலில் விதைத்து அது தரமான விதையா, விவசாயிகளுக்கு விநியோகிக்கலாமா போன்ற விவரங்களை இந்தத் துறைதான் பரிசோதித்து விவசாயிகளுக்கு வழங்க ஆவண செய்யும். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இதற்கென்றே மிகப்பெரிய விதைப் பரிசோதனைக்கூடம் இயங்குகிறது. இங்கே அடிக்கடி சென்று விதைகளை ஆய்வு செய்து அதை வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியை வழங்கும். விதை சம்பந்தமான எந்த சந்தேகம் என்றாலும் அருகிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடி அதற்கான சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பணியையும் இந்தத் துறை செய்யும்.

இன்னொன்று விதைகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் பலவும் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில்தான் அதிகம் இருக்கின்றன. மற்ற வேளாண்மை அலுவலகம் போன்று வெறும் அலுவலகத்தில் இருந்து மட்டும் பணியாற்றும் பணி அல்ல. விதைச் சான்று, இயற்கை விவசாயச் சான்றிதழ்களுக்காக விண்ணப்பிப்பவர்களின் நிலங்களுக்கு நிறைய வயல் ஆய்வு மேற்கொள்ள வேண்டி வரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் துறைக்கான அலுவலர்கள் இருந்தாலும், கோயம்புத்தூரில் உள்ள விதைச்சான்று அலுவலர்களும் அடிக்கடி வயல் ஆய்வு நடத்துவார்கள். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அலுவலகம் மாற்றப்பட்டால் அலுவல் ரீதியான பணிகளே சரியாக இருக்கும். ஏற்கெனவே வேளாண்மை அலுலவர்கள் வயலுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. இப்போது விதைகளையும், இயற்கை விவசாயத்தையும் கண்காணித்து வரும் இந்தத் துறையையும் சென்னைக்கு மாற்றிவிட்டால் இழப்பு இந்தத் துறைக்கு இல்லை. விவசாயத்துக்குத்தான்.

வயல் ஆய்வு
வயல் ஆய்வு
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

இன்னொன்று 40 ஆண்டுகளாக விவசாயிகள் மனதில் இந்தத் துறை கோயம்புத்தூரில்தான் செயல்பட்டு வருகிறது என்பது பதிந்துவிட்டது. அதைத் திடீரென்று மாற்றுவது விவசாயிகளுக்கு இழப்புதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது அனைத்தையும் சென்னைக்கு மாற்றுவது இந்தத் துறை அலுவலர்களுக்கு மனதளவில் கஷ்டத்தை உருவாக்கும். நிர்வாகக் காரணங்களுக்காகவும், ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட விஷயங்களுக்காகவும் இந்தத் துறையை சென்னைக்கு மாற்றுவதாக அரசு சொல்கிறது. இன்னொன்று வேளாண்மை சம்பந்தமான எல்லா துறைகளும் சென்னையிலிருந்தே பணியாற்றும்போது, இந்தத் துறை மட்டும் ஏன் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதா என்பது தெரியவில்லை.

சுபி.தளபதி
சுபி.தளபதி

இந்த அறிவிப்பு கொங்கு மண்டல விவசாயிகளிடையே சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதியிடம் பேசியபோது, ``40 ஆண்டுகளாக இந்த விதைச் சான்றளிப்புத்துறை கோவையில் செயல்பட்டு வருகிறது. கோவையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. முன்னோடியான பல விஷயங்களைச் செயல்படுத்தி பார்ப்பதும் இந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகள்தாம்.

கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் இருப்பதால் தொழில்நுட்பங்கள் எளிதாக விவசாயிகளுக்கு கிடைத்து வந்தன. வேளாண்மை சம்பந்தப்பட்ட ஒரு துறை, இப்போது விவசாயத்துக்கு சம்பந்தமே இல்லாத சென்னைக்கு மாற்றுவதால் என்ன பலன் காணப் போகிறது தமிழக அரசு. இந்தத் துறையின் உதவியை நாட வேண்டுமென்றால் 400 கி.மீ பயணம் செய்ய வேண்டி வரும். இது ஒரு எளிய விவசாயியால் முடியாத காரியம். அதனால் அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

 மனுநீதி மாணிக்கம்
மனுநீதி மாணிக்கம்

கோயம்புத்தூரைச் சேர்ந்த மனுநீதி மாணிக்கம், ``வயல் ஆய்வு, இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளை செய்து வரும் இந்த அமைப்பை சென்னைக்கு மாற்றுவதைவிட, இந்தத் துறையால் விவசாயிகளுக்கு ஆக்கபூர்வமாக என்ன நடக்க வேண்டும் என்பதை அரசு ஆராய வேண்டும். இயற்கை விவசாயச் சான்றிதழ் வாங்குவதால் ஏற்படும் நன்மையையும், சான்றிதழ் வழங்கப்பட்ட பொருள்களின் விற்பனையையும் அதிகரிக்க வேண்டும்.

இதுபோன்ற முயற்சிகளை செய்யாமல் இடமாற்றம் எதற்கு செய்ய வேண்டும். நான் கோயம்புத்தூர்காரனாக இந்த அலுவலகம் இங்கேதான் இருக்க வேண்டும் என்பேன். அதையே கோயம்புத்தூர் பகுதி விவசாயிகளும் விரும்புவார்கள்” என்றார்.

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் பேசியபோது, ``இப்போதெல்லாம் எல்லாமே இணையம் (ஆன்லைன்) என்றாகிவிட்டது. எந்தத் துறை அலுவலகத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. அப்படியிருக்கும்போது இதை மாற்றுவதால் எந்தப் பாதிப்பும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. ஆனால், நிர்வாக காரணங்களைக் காட்டி சென்னைக்குக் கொண்டு போவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் அமைத்தால்கூட பயனுள்ளதாக இருக்கும். வேளாண்மை பல்லைக்கழகம் போன்ற உயர் அமைப்புகள் கோயம்புத்தூரில் இருக்கும்போது இந்தத் துறையை மட்டும் சென்னைக்கு மாற்றுவது ஏன்? ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல கூட்டங்களை ஆன்லைன் வழியாக நடத்த வாய்ப்பிருக்கும்போது இதற்கென அமைக்கப்பட்ட அலுவலகத்தை சென்னைக்கு மாற்றுவது அவசியமில்லை” என்றார்.

இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பேச முயன்றோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் தரும் பட்சத்தில் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு