Published:Updated:

இயற்கை விவசாயப் பயிற்சி... பாரம்பர்ய பயிர் ரகங்கள் ஆராய்ச்சி!

நேர்காணலில் கீதாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நேர்காணலில் கீதாலட்சுமி

வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேட்டி!

இயற்கை விவசாயப் பயிற்சி... பாரம்பர்ய பயிர் ரகங்கள் ஆராய்ச்சி!

வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேட்டி!

Published:Updated:
நேர்காணலில் கீதாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நேர்காணலில் கீதாலட்சுமி

நேர்காணல்

மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கீதாலட்சுமி. வேளாண் பல்கலைக்கழகத்தில் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். துணைவேந்தராகப் பதவியேற்ற முனைவர் கீதாலட்சுமியைச் சந்தித்துப் பேசினோம். அனைத்துக் கேள்விகளுக்கும் உற்சாகமாகப் பதில் அளித்தார்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர்… எப்படி உணர்கிறீர்கள்?”

“அகில இந்திய அளவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில், இதற்கு முன்பு பெண் துணைவேந்தர்கள் இருந்ததில்லை. எங்களாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதை இந்த மூன்றாண்டுக் காலத்தில் நிரூபிப்பேன். எல்லாத்துறைகளிலும் பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கல்பனா சாவ்லா தொடங்கி ஏராளமான பெண்கள் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளனர். விவசாயத் துறையில் ஒரு சாதனைப் படைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.”

நேர்காணலில் கீதாலட்சுமி
நேர்காணலில் கீதாலட்சுமி

“பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக இருக்கிறீர்கள். பொதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு விவசாயிகள் வந்து ஏதாவது சந்தேகம் கேட்டால் சரியாகப் பதில் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக உள்ளது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பீர்களா?”

‘‘இதைச் சரிசெய்வதற்கான திட்டங்கள் நிறைய உள்ளன. ஏற்கெனவே அந்தந்த ஊர்களில் உள்ள கே.வி.கே மூலம் விவசாயி களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வர உள்ளோம். அதன்படி விவசாயிகளின் தேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.”

“மற்ற மாநிலங்களைப் போன்று இயற்கை விவசாயத்துக்குப் பல்கலைக்கழகம் சார்பில் பெரிய முயற்சிகள் இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க என்னமாரியான முயற்சியை முன்னெடுப்பீர்கள்?”

நேர்காணலில் கீதாலட்சுமி
நேர்காணலில் கீதாலட்சுமி

“தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டிலேயே நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அறிவிக்கப் பட்டு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் மலைப்பயிர்கள், காய்கறிகள் போன்ற இயற்கை சார்ந்த உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தமிழ்நாட்டில் 18 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. தற்போது 2 - 3 லட்சம் ஏக்கர் இயற்கை வேளாண்மைக்கு வந்துவிட்டது. பாரம்பர்ய நெல் ரகங்களையும் கொண்டு வந்து, அதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களுக்கான தேவை அறிந்து, பாரம்பர்ய நெல், இயற்கை விவசாயம்... உள்ளிட்ட பயிற்சியை வழங்கி வருகிறோம். இதுபோக இடுபொருள்களைத் தயாரித்து, அதையும் மானிய விலையில் கொடுத்து வருகிறோம்.”

“பாரம்பர்ய தொழில்நுட்பங்களை மீட்டெடுக்கத் திட்டங்கள் இருக்கின்றனவா?”

“தற்போது பாரம்பர்யமான ரகங்களை மீட்டுக்கொண்டிருக்கிறோம். மாப்பிள்ளைச் சம்பா மாதிரியான ரகங்களின் ஜீன்களை எடுத்து, புதிய ரகங்களில் சேர்த்து பழைய ரகங்களின் நலனுடன், உற்பத்தியைப் பெருக்க நிறைய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்தடுத்து வெளியாகும் புதிய ரகங்களில் அதைக் காண முடியும்.”

நேர்காணலில் கீதாலட்சுமி
நேர்காணலில் கீதாலட்சுமி

“முன்பு நிறைய ஆய்வறிக்கைகள் வந்துகொண்டிருந்தன. தற்போது ஆராய்ச்சி மிகவும் குறைந்து விட்டதே?”

“இப்போதும் ஆய்வறிக்கை சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. புதிய புதிய ஆராய்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். கஜா புயலின்போது எங்களுடைய விஞ்ஞானிகள் ‘டிரோன்’ மூலம் எவ்வளவு தென்னை மரம் விழுந்தன என்பதை முழுமையாகக் கணக்கிட்டோம். கடலோரப் பகுதிகளில், கடல் நீர் எவ்வளவு தூரம் உள்ளே வந்து நிலம் உப்பாகியுள்ளது போன்ற ஆராய்ச்சிகளை எடுத்துள்ளோம். ஊட்டச் சத்தை ‘ஆப்’ மூலம் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் ‘டிரோன்’ தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. ‘டிரோன்’ எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும், அதில் மருந்து, தண்ணீர் எந்தளவு கலக்க வேண்டும், எவ்வளவு வேகத்தில் மருந்து தெளிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து சொல்லியிருக்கிறோம்.”

நேர்காணலில் கீதாலட்சுமி
நேர்காணலில் கீதாலட்சுமி

“மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமா?’’

“மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்குத் தகுந்த மாதிரியான பல திட்டங்கள் உள்ளன. முதுகலையில் ‘அக்ரானமி’ துறை இருக்கிறது என்றால் மாணவர்கள்களை நிர்வாகம், உர நிர்வாகம் என்று அவர்களுக்கு நிறைய விருப்பங்கள் உள்ளன. தொலைநிலைக் கல்வி, இ-கல்வி என்று நிறைய முறைகள் உள்ளன.”

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும், கால்நடைத்துறைக்கும் நிறைய இடைவெளி உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துத் தீவனம் உருவாக்குவது போன்றவற்றில் தொய்வு உள்ளதாகப் புகார் உள்ளதே?”

“புகாரே கிடையாது. தீவனத்துறையே இங்குதான் உள்ளது. கால்நடை பல்கலைக் கழகத்துக்கே தீவனப்பயிர் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வருகிறோம். அவர்களின் பிரதிநிதிகளாக இரண்டு மருத்துவர்கள் எங்கள் கால்நடைத்துறையில் இருக்கின்றனர். மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு என்று அந்தந்த நிலத்துக்குத் தகுந்த திட்டங்களை வைத்திருக்கிறோம்.”

“ஆண்டுக்குச் சராசரியாக 5,000 பேர் வேளாண்மைப் படிப்பு படித்து வெளி வருகின்றனர். ஆனால், 200 பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. அவர்களுக்கு அது சார்ந்த வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறதே?”

“மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க வேண்டும்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக்கும். வேலைவாய்ப்புக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள 4-ம் ஆண்டில் சிறப்புப் பயிற்சிகளை வழங்க உள்ளோம்.”

நேர்காணலில் கீதாலட்சுமி
நேர்காணலில் கீதாலட்சுமி

“உங்களின் நீண்டகாலத் திட்டங்கள் என்ன?”

“மாணவர்கள் இங்கிருந்து வெளியில் செல்லும்போது, அவர்களுக்கு வேலை வாய்ப்பு தயாராக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கு பவர்களாக இருக்க வேண்டும். இப்போது அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய ரகங்களைக் கொண்டு வந்துவிட்டோம். ஆனால், தரமான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக் கேள்விக்குறியாக உள்ளது. அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்.”

‘‘அந்தந்த ஊர்களில் உள்ள கே.வி.கே மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.’’

“நிறைய சவால்களும் இருக்கின்றன. அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறீர்கள்?”

“உங்கள் பசுமை விகடன் இதழிலேயே பல்கலைக்கழகத்தை விமர்சித்து செய்திகள் வருகின்றன. அதுவே பெரிய சவால்தான். நாங்கள் தவறு செய்தால் தாராளமாகச் சுட்டிக் காட்டுங்கள். எதுவாக இருந்தாலும், நீங்கள் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய விளக்கம் கேட்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்னைகள் எதுவுமில்லை. பல்கலைக்கழகத்தால் எது முடியும், முடியாது என்பதைத் தெளிவாகப் புரிய வைத்து அனைவருடனும் நல்லிணக்கத்துடன் கொண்டு செல்வேன். நான் துணைவேந்தராக உள்ள இந்தக் கால கட்டத்தில் பல்கலைக்கழகம் செழிப்பாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுவேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism