Published:Updated:

பணம், சாதி, அரசியல்; வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சுழற்றும் பதவி சர்ச்சை!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேளாண்துறைச் செயலர் இந்த நேர்முகத் தேர்வில் ஓர் உறுப்பினராகக் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. இதற்காக நாள் ஒதுக்கும்படி வேளாண்துறை செயலரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பல நாள்களாகியும், வேளாண் செயலர் தேதி கொடுக்காததால் நேர்முகத்தேர்வு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

பணம், சாதி, அரசியல்; வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சுழற்றும் பதவி சர்ச்சை!

வேளாண்துறைச் செயலர் இந்த நேர்முகத் தேர்வில் ஓர் உறுப்பினராகக் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. இதற்காக நாள் ஒதுக்கும்படி வேளாண்துறை செயலரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பல நாள்களாகியும், வேளாண் செயலர் தேதி கொடுக்காததால் நேர்முகத்தேர்வு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

Published:Updated:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

‘தமிழகப் பல்கலைக்கழகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில்?’ என்றொரு பட்டிமன்றம் ஓடிக்கொண்டே இருக்கிறது. `ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசின் சொற்படிதான் அவர் நடக்க வேண்டும்’ என்றும்... `இல்லையில்லை... ஆளுநர்தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர். அவருக்குத்தான் அதிகாரம்’ என்றும் பரபரப்பாகப் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கு நடுவே... பல்கலைக்கழகங்களில் இருக்கும் பதிவாளர், இயக்குநர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நியமனம் செய்வது தொடர்பாகத் துணைவேந்தர்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் இடையே குடுமிப்படி சண்டை நடக்க ஆரம்பித்திருக்கிறது! குறிப்பாக, கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இது உச்சத்தில் இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வேளாண் பல்கலைக்கழகம்
வேளாண் பல்கலைக்கழகம்

வேளாண் பல்கலைக்கழகம், கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, துணைவேந்தர் களாக வருபவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்தில் தான் செயல்பட்டிருக்கின்றனர். தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி, அவர்களைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு அதிகாரிகளாக நியமித்துக்கொண்டு, இஷ்டம்போல் செயல்படுவது என்றுதான் இருந்தனர்.

ஒரு துணைவேந்தர், தனது பதவிக்காலமான ஆறு (3+3) ஆண்டுக் காலத்தில், பல்கலைக்கழக அதிகாரிகள் பொறுப்புக்கு யாரையும் நிரந்தரமாக நியமிக்காமல், கடைசிவரை தற்காலிக அதிகாரிகளை வைத்தே காலத்தை ஓட்டிச் சென்றுவிட்டார். அவருடைய காலத்தில்தான் பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆரச்சி மையத்தின் ஆங்கீகாரத்தை இழந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ``பல்கலைக்கழகம் என்றால் பதிவாளர், டீன்கள், இயக்குநர்கள் போன்ற பதவிகள் மிகமிக முக்கியமானவை. இந்தப் பதவிகளுக்கு மூத்த, திறமையான பேராசிரியர்களை நியமிப்பது வழக்கம். அதாவது, பணி ஓய்வுபெறுவதற்கு மூன்று ஆண்டுகள் உள்ளவர்களைத்தான் பெரும்பாலும் நியமிப்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பதவிகளுக்கு திறமையானவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், பல்கலைக்கழகத்தின் பல்வேறு செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் பல தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாமல் உள்ளன். ஒன்றிய மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதியின் அளவும் வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் உழவர்களோடும், அரசின் கொள்கைகளோடும் தொடர்பின்றியே உள்ளன. ஏறத்தாழ அரசியல் கட்சிகளின் ஆட்சி மாறும்போது எப்படித் திட்டங்களும் மாறுகின்றனவோ... அதேகதிதான் இங்கும்’’ என்று வருத்தம் பொங்கச் சொன்னார்.

வேளாண்மை
வேளாண்மை

பல்கலைக்கழகம் சிறப்புறம் இயங்க வேண்டுமென்றால், அகாடமிக் கவுன்சில் என்பது முக்கியம். துணைவேந்தர், பதிவாளர், முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் எனப் பலரும் இதில் இடம்பெறுவார்கள். பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை இந்தக் குழு மிகமிக முக்கியமானது. பல்கலைக்கழகத்தின் எந்தவொரு நிகழ்வும் இக்குழுவின் முடிவுப்படியே நடக்கும். துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் உறுப்பினர் ஒருவரும் இக்குழுவிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்.

இப்படி சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாக அகாடமிக் கவுன்சில் இருப்பதால், அதில் இடம்பெறும் உறுப்பினர்கள், தமக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு துணைவேந்தரும் நினைப்பார்கள். அதன்படியே தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும், தங்களுக்கு வேண்டிய ஆட்களையே நியமித்துக் கொள்வார்கள். அதாவது, கல்லூரி முதல்வர்கள், துறை இயக்குநர்கள், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேண்டியவர்களை நியமிப்பார்கள். எதிர்காலத்தில் மீண்டும் துணைவேந்தராக ஆசை வந்தால், இவர்கள் மூலமே அதை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்பதும் ஒரு காரணம். இதைத் தவிர, பசையான பல விஷயங்களையும் சாதித்துக் கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படிப்பட்ட சூழலில் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருப்பார்களா என்ன? ஆளும்கட்சி அரசியல்வாதிகள் நேரடியாகவே களத்தில் இறங்குவார்கள். அவர்களுக்காகச் சில பதவிகளைத் துணைவேந்தர்கள் பகிர்ந்தளிப்பார்கள். அதாவது, அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டும் நபர்களை, முதல்வர்கள், பதிவாளர், இயக்குநர்கள் உள்ளிட்ட பதவிகளில் நியமிப்பார்கள். இதில் பலமாக காசு பார்த்து விடுவார்கள் அரசியல்வாதிகள்.

முதல்வர், இயக்குநர், பதிவாளர் பதவிகளைப் பயன்படுத்தி நன்றாகச் சம்பாதிக்க முடியும் என்பதால், சளைக்காமல் பணத்தை அள்ளிவிட்டு பதவிகளைப் பிடிக்க பெரும்போட்டியே நடக்கும். முக்கியமாக இந்த அகாடமிக் கவுன்சில் அமைப்பதில் சாதிக்கு முக்கிய பங்கிருக்கும். அத்துடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் செல்வாக்கான துறைகளில் கோலோச்சுபவர்களின் கைகளும் ஓங்கும். மொத்தத்தில் பணம் முக்கியப் பங்காற்றும்.

கவர்னர் ரவியுடன் துணைவேந்தர் கீதாலட்சுமி
கவர்னர் ரவியுடன் துணைவேந்தர் கீதாலட்சுமி

இந்தப் பின்னணியில், புதிய துணைவேந்தர் கீதாலட்சுமியும் தற்போது அகாடமிக் கவுன்சிலை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதில்தான், வேளாண்துறை மூலமாக அரசியல்வாதிகள் கட்டைபோடுவதாகத் தகவல்.

இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் ஒருவர் நம்மிடம் பேசியபோது, ``தன் முன்னோர்கள் போலவே தனக்கான கூட்டத்தை உருவாக்கும் வகையில்தான் கீதாலட்சுமியும் செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றே கேள்விப்படுகிறோம். ஆனால், அது அத்தனை சுலபத்தில் ஈடேறாது என்றே தோன்றுகிறது’’ என்று சொன்ன பேராசிரியர், அதற்கான காரணங்களையும் எடுத்து வைத்தார்.

``முதல்வர், பதிவாளர், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்து, மதிப்பெண்கள் போட்டு, நேர்முகத் தேர்வு நடத்தும் வரை அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டார் துணைவேந்தர் கீதாலட்சுமி. இதற்கென ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு அதன்மூலமாகவே மதிப்பெண்கள் போடப்படும். இதில் 80 மதிப்பெண்கள் அதிகபட்சம். வேண்டியவர்களுக்கு அள்ளிப்போடுவார்கள். அடுத்து நேர்முகத்தேர்வு இருக்கிறது. இதற்கு 20 மதிப்பெண்கள். இங்கேதான் சிக்கலே. அதாவது, வேளாண்துறை செயலர் இந்த நேர்முகத் தேர்வில் ஓர் உறுப்பினராகக் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. இதற்காக நாள் ஒதுக்கும்படி வேளாண்துறை செயலரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பல நாள்களாகியும், வேளாண் செயலர் தேதி கொடுக்காததால் நேர்முகத்தேர்வு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி, முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி, முதல்வர் ஸ்டாலின்

`சட்டசபைக் கூட்டத் தொடர் நடப்பதால், அவரால் வரமுடியவில்லை’ என்கிற காரணத்தை ஒருசாரார் முன்வைக்கிறார்கள். ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல. தமிழக வேளாண் துறையிலிருந்து ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, அதிலிருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் எனத் துணைவேந்தரிடம் கூறப்பட்டிருக் கிறது. அப்பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே வேளாண்துறையில் கோலோச்சும் குறிப்பிட்ட ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த விஷயத்தில் தன்னால் ஏதும் செய்ய இயலாது என்று துணைவேந்தர் தரப்பிலிருந்து கூறப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே நேர்முகத் தேர்வுக்கான தேதியைக் கொடுக்காமல் வேளாண் துறை செயலர் தள்ளிப்போடுகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

முதலில், வேளாண் மானியக் கோரிக்கை முடிந்ததும் வருகிறேன் என்று செயலாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. பின்னர், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வருவதாகச் சொல்லியிருக்கிறார். கடைசியாக, சட்டசபைக் கூட்டம்முடிந்ததும் வருகிறேன் என்று சொல்லித் தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறார். இதனால் மூன்று முறை நேர்முகத் தேர்வு தள்ளிப்போயிருக்கிறது.

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கும் துணைவேந்தர் தரப்பு, வேளாண் துறையிலிருந்து கொடுக்கப்பட்ட பட்டியல்படி பதவிகளை நிரப்புவதற்காகத் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இயற்கை வேளாண்மை (File Pic)
இயற்கை வேளாண்மை (File Pic)

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, மதிப்பெண்களின்படி பார்த்தாலும் வேளாண் துறையிலிருந்து அனுப்பப்பட்ட பட்டியல்படி பார்த்தாலும் யாருமே தேறமாட்டார்கள். காரணம்... மதிப்பெண்கள் பட்டியல், வேண்டியவர்கள்... வேண்டாதவர்கள் என்று பாரபட்சம் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையின் பட்டியலோ... சாதி பார்த்து மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆகக்கூடி, அந்தப் பட்டியல்களின்படி தேர்வு செய்தால் பல்கலைக்கழகம் தொடர்ந்து பின்நோக்கிதான் செல்லும். காரணம்... அதில்தான் திறமைக்கு இடமில்லையே’’ என்று சொன்ன அந்தப் பேராசிரியர்,

``இப்படி திறமையை மதிக்காமல் வேண்டியவர்கள், சாதிக்காரர்கள் என பணிகளுக்கு ஆள்களை நியமித்தால், திறமையானவர்கள் எல்லாம் வெறுத்துப்போய் ஒதுங்கிவிடுவார்கள். இதனால், பல்கலைக்கழகத்தில் தரமாக எந்தவித பணிகளும் நடக்காது. மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கவே கிடைக்காது’’ என்று வேதனை பொங்கச் சொன்னார். கடைசியாக ஒரு குமுறல் கூற்றையும் எடுத்து வைத்தார்.

``கடந்த `20 ஆண்டுகளுக்கும் மேலாக... யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே சாதிக்காரர்கள்தான் வேளாண்துறைக்கு அமைச்சர்களாக வருகின்றனர். அதனால் அந்தச் சாதிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலானவர்கள், ஒவ்வொருமுறையும் பல்கலைக்கழகத்தின் பசையான பொறுப்புகளைப் பிடித்து விடுகின்றனர். இந்தக் குமுறல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் முழுக்க எதிரொலித்தபடி இருக்கிறது’’

- இதுதான் அந்தக் குமுறல் கூற்று.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

ஆகக்கூடி மதிப்பெண் பட்டியல் மற்றும் வேளாண்துறையின் பட்டியல்படி யாருமே தேறமாட்டார்கள் என்கிற சூழலில், இந்த விஷயம் துணைவேந்தருக்கு மிகமிக சவாலான ஒரு தேர்வாகவே இருக்கப்போகிறது. இதில் அவர் எவ்வாறு தேர்வாகப் போகிறார் என்பதைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், வேளாண்துறை சார்ந்தவர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

உறுதியாக நின்று, திறமை, தலைமைப்பண்பு உள்ளவர்களைத் தேர்வுசெய்து, பல்கலைக்கழகத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்வாரா? இல்லை வழக்கமான துணைவேந்தர்களைப் போல அரசியல் அழுத்தம், சாதி அழுத்தம் போன்ற காரணங்களுக்காக வேண்டியவர்களுக்கு பதவிகளைப் பங்குபோட்டுக் கொடுத்துவிட்டு, தன்னுடைய பதவியைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பல்கலைக் கழக அதிகாரிகளின் தேர்வுக்குப் பிறகு, யார்யார் தகுதியானவர்கள், யார்யார் குறுக்கு வழியில் வந்தவர்கள் என்பதை பட்டியலை வைத்தே முடிவு செய்ய முடியும் என்று ஒரு பேரசிரியர் கூறியுள்ளனர். பட்டியல் வரட்டும் நாமும் பார்ப்போம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

இதுகுறித்து தமிழக வேளாண்துறை தரப்பில் பேசியபோது, "பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் பலரும் பணி மாறுதல் உள்பட எதற்கும் ஒத்துழைப்பதில்லை. அதே ஊரிலேயே பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகம் முழுக்க நிறைய கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன. அங்கெல்லாம் பணிமாறுதல் செய்தால் செல்லவே மறுக்கிறார்கள். இத்துடன் இன்னும் பல பிரச்னைகள் உள்ளன. அதையெல்லாம் மறைப்பதற்காகவே வேளாண்துறை மீதும் அமைச்சர் மீதும் தேவையில்லாமல் சாதி ரீதியில் குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி போடுகிறார்கள். அந்தத் துறையில் அனைத்து சாதியினருமே இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சில சாதிகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். இவர்கள் குற்றச்சாட்டும் சாதியைச் சேர்ந்தவர்கள் தமிழக அளவில் மக்கள்தொகையில் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள்தான் கோலோச்சு கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை மறைப்பதற்காகத்தான்'' என்று சொன்னார்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

இப்பிரச்னை குறித்து வேளாண்மைத்துறை செயலர் சமயமூர்த்தியிடம் கேட்டோம். ``சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் தரப்பிலிருந்து அழைப்பு விடுத்தார்கள். சட்டமன்றம் நடைபெறும்போது, துறையின் செயலர்கள் வெளியூர் செல்லக் கூடாது. ஆகையால், ஆன்லைன் மூலம் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். ஆனால், பல்கலைக்கழகத் தரப்பில் நேரில் வந்துதான் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்கள். தற்போது, சட்டமன்றல் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. இந்த வாரம் சனிக்கிழமை (மே 14) அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளோம். வேறு எந்த காரணமும் இல்லை’’ என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் பேசியபோது, "அரசிடம் இருந்தோ, அதிகாரிகளிடம் இருந்தோ எந்த அழுத்தமும் வரவில்லை. சாதி, பணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தகுதி, திறமை போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள். பிரச்னைகளை படிப்படியாக சரிசெய்து, பல்கலைக்கழகத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.

தற்போதைய நிலவரப்படி இரண்டு தரப்புக்குமிடையே சுமுகமாகப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism