Published:Updated:

மக்காச்சோளத்திற்கு இந்தமுறை நல்ல விலை கிடைக்குமா? விடைசொல்லும் வேளாண் பல்கலைக்கழகம்

maize
maize

வேளாண் அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி காரீப் 2020-21-ம் ஆண்டுக்கான மக்காச்சோளத்தின் உற்பத்தி 19.88 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயிருக்கும் எதிர்காலத்தில் விலை என்னவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிந்துகொண்டால், விற்பனையில் பிரச்னையே இருக்காது. அந்த வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் விவசாயிகளுக்குப் பயிர்களின் எதிர்கால விலையை அறிவித்து வருகிறது. அந்த மையம் இப்போது மக்காச் சோளத்துக்கு எதிர்வரும் காலத்தின் சந்தை விலையை அறிவித்திருக்கிறது. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் மக்காச்சோளம் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் பங்களிக்கிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை இந்தியாவில் மக்காச்சோளம் பயிரிடும் முக்கிய மாநிலங்கள். இந்த மாநிலங்கள் இந்தியாவின் மொத்த மக்காச்சோளத்தின் உற்பத்தியில் 78 சதவிகிதம் பங்களிக்கின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேளாண் அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி காரீப் 2020-21-ம் ஆண்டுக்கான மக்காச்சோளத்தின் உற்பத்தி 19.88 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிடக் கொஞ்சம் அதிகம். தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டில் மக்காச்சோளம் 3.90 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 2.83 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மக்காச்சோளம் பயிரிடப்படுவதில் முக்கியமானவை.

வர்த்தக மூலங்களின்படி, தமிழ்நாட்டில் உள்ள கோழிப்பண்ணை நிறுவனங்களின் பாதிக்கும் மேலான மக்காச்சோளத்தின் தேவையைக் கர்நாடகா, பீகார், ஆந்திராவிலிருந்து வரும் மக்காச்சோளம் பூர்த்தி செய்கிறது. இந்தப் பருவத்தில் குறைந்த விலை காரணமாக உடுமலைப்பேட்டை பகுதியில் மக்காச்சோள உற்பத்தி 40 சதவிதம் குறைந்துள்ளது. அதே சமயம், கர்நாடகாவின் அதிக உற்பத்தி எதிர்வரும் மாதங்களில் தமிழக கோழி நிறுவனங்களின் மக்காச்சோளத் தேவையைப் பூர்த்தி செய்யும். முசிறி, பெரம்பலூர், துறையூர் ஆகிய பகுதிகளில் பயிர்கள் படைப்புழு தாக்கம் இல்லாமல் நன்றாக உள்ளது. மேலும், கர்நாடகாவிலிருந்து வரும் மக்காச்சோளம் வரத்தானது டிசம்பர் மாதம் இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

இச்சூழ்நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், நல்ல தரமான மக்காச்சோளத்தின் விலையானது வரும் நவம்பர் முதல் ஜனவரி 2021 வரை குவிண்டாலுக்கு 1,400 ரூபாய் முதல் 1,600 ரூபாய் வரை இருக்கும் எனக் கணித்துள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். மக்காச்சோளம் கடந்த சில நாட்களாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டாலுக்கு 1,600 ரூபாய் வரை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்காச்சோளத்தின் ஒரு குவிண்டால் விலை கடந்த ஆண்டைவிட 400 ரூபாய் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

மேலும் விவரங்களுக்கு,

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயமுத்தூர்- 641 003,

தொலைபேசி - 0422-2431405.

தொழில்நுட்ப விவரங்களுக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

சிறு தானிய துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயமுத்தூர்- 641 003,

தொலைபேசி - 0422-2450507.

அடுத்த கட்டுரைக்கு