Published:Updated:

தக்காளி விலை குறைந்தால் வீதியில் வீசத் தேவையில்லை! தேடி வருகிறது, மதிப்புக்கூட்டும் வாகனம்!

மதிப்புக்கூட்டும் வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
மதிப்புக்கூட்டும் வாகனம்

நேரடி நடவடிக்கை

தக்காளி விலை குறைந்தால் வீதியில் வீசத் தேவையில்லை! தேடி வருகிறது, மதிப்புக்கூட்டும் வாகனம்!

நேரடி நடவடிக்கை

Published:Updated:
மதிப்புக்கூட்டும் வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
மதிப்புக்கூட்டும் வாகனம்

வெங்காயம், தக்காளி இந்த இரண்டு விளைபொருள்களின் விலை, சில நேரங்களில் விண்ணுக்கு உயரும்... பல நேரங்களில் பாதாளத்துக்குப் போய்விடும். கடந்த ஒரு மாதமாகத் தக்காளி விலை அதலபாதாளத்தில் இருக்கிறது. விலையில்லாததால் சாலையோரங் களில் தக்காளியைக் கொட்டுகிறார்கள் விவசாயிகள். தமிழகம் முழுவதுமுள்ள தக்காளி விவசாயிகள் பிரச்னையை அரசின் கவனத் துக்குக் கொண்டு சென்று தீர்வுகாணும் முயற்சியில் இறங்கியது பசுமை விகடன்.

சென்னையில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தாதேவியிடம் பேசினோம். பிரச்னையைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவர், “விலை குறைவான நேரத்தில் தக்காளியை அரைத்துக் கூழாக்கலாம். தக்காளியைக் கூழாக்கும் நடமாடும் வாகனங்கள் எங்கள் துறையில் இருக்கின்றன. அதன் மூலமாக இந்தப் பிரச்னையைத் தற்காலிகமாகச் சமாளிக் கலாம். எதிர்காலத்தில் இந்தச் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்வது எனத் தீவிரமாக யோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’’ என அக்கறையுடன் பேசியவர், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குநர் கண்ணனை நியமித்தார்.

திண்டுக்கல்லில் தக்காளி மதிப்புக்கூட்டும் வாகனம்
திண்டுக்கல்லில் தக்காளி மதிப்புக்கூட்டும் வாகனம்


நம்மைத் தொடர்புகொண்ட கூடுதல் இயக்குநர் கண்ணன், ‘‘தற்போது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாகனங்கள் இருக்கின்றன. எந்த மாவட்டத்தில் தொடங்கலாம்?’’ எனக் கேட்டார். அன்றைக்கு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளியை விவசாயிகள் சாலையில் கொட்டிய செய்தி வந்துகொண்டிருந்தது. அதனால், ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளியைக் கூழாக்கலாம்’’ என்று தெரிவித்தோம். உடனடியாகக் களத்தில் இறங்கிய கண்ணன், திண்டுக்கல் தோட்டக் கலை துணை இயக்குநர் பெருமாள் சாமியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கோயம் புத்தூரிலிருந்து மதிப்புக்கூட்டும் வாகனம் திண்டுக்கல் மாவட்டம் வந்து சேர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5,500 ஏக்கர் பரப்பில் தக்காளிச் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரம், பழநி, அய்யலூர், வடமதுரை, தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், வேடசந்தூர் பகுதிகளில் தக்காளிச் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மாவட்டத் தில் சராசரியாக ஆண்டுக்கு 56,000 டன் தக்காளி மகசூலாகக் கிடைக்கிறது. இதில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரை மட்டுமே அதிகபட்சமாக 25,000 டன் தக்காளி விளைச்சல் நடைபெறும். கடந்த 2 மாதங் களுக்கு முன்பு தொடர் மழை காரணமாகத் தக்காளிச் செடிகள் சேதமடைந்ததால் வரத்து குறைந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது.

தக்காளி
தக்காளி


இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாத இறுதியில் தக்காளி விளைச்சல் அதிக மானதால் வரத்து அதிகரித்து, விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால் பிப்ரவரி மாதம் முழுவதும் தக்காளி கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது.

தக்காளியைப் பறிப்பதற்கான கூலி, அதை ‘மார்க்கெட்’டுக்குக் கொண்டு செல்வதற்கான வாகன வாடகைகூடக் கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியைப் பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டனர். சில இடங்களில் மார்க்கெட்டுக்குக் கொண்டு சென்ற பிறகு போதிய விலை கிடைக்காததால் சாலை யோரங்களில் கொட்டிச் செல்லும் நிலை. மார்ச் மாத தொடக்கம் முதல் கிலோ 2 ரூபாய்க்கு விற்றாலும்கூட தக்காளி விற்பனையாகவில்லை. சில வியாபாரிகள் நேரடியாகத் தோட்டத்துக்குச் சென்று விவசாயிகளிடம் தக்காளியை வாங்கி, சிறிய வாகனங்களில் தெருத்தெருவாகக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தக்காளி கூழாக்கும் நடமாடும் வாகனத்திலுள்ள இயந்திரம் மூலம் தக்காளியைக் கூழாக்கலாம். அதை எங்கு சந்தைப்படுத்துவது? என்ற கேள்வியைக் கண்ணனிடம் முன்வைத்தோம். “இது தொடர்பாக இயக்குநரிடம் கலந்து பேசினோம். தக்காளிக் கூழை வாங்கும் சில தனியார் நிறுவனங்கள் தக்காளி ரகம், தரம் உள்ளிட்ட சில விதிமுறைகள் அடிப்படையில்தான் கூழ் வாங்குவதாகச் சொல்கிறார்கள். உடனடியாக இதைச் சந்தைப்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த முறை, நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் மூலமாகத் தக்காளி விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கலாம். அந்தக் கருவியை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாங்கி, அவர்களே விலை குறைவான நேரங்களில் தக்காளியைக் கூழாக்கி விற்பனை செய்யலாம்.

 தக்காளி மதிப்புக்கூட்டும் வாகனத்தில்
தக்காளி மதிப்புக்கூட்டும் வாகனத்தில்

தக்காளி கூழை, வேளாண் விற்பனைத்துறை மூலம், கொள்முதல் செய்து, ஒரே பிராண்டு பெயரில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன் பிறகு, இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். தோட்டக்கலைத்துறை இயக்குநர் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்த நடமாடும் தக்காளி கூழாக்கும் வாகனம் மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்தூர், அய்யலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தக்காளியைக் கூழாக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள்.

இயந்திரம் மூலம் தக்காளி கூழாக்கும் முறை குறித்துப் பேசிய திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி, ‘‘இந்த வாகனம் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. தக்காளியை வேகவைத்தல், அரைத்தல், பதப்படுத்துதல் என 3 பிரிவுகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு டன் தக்காளி வரை அரைத்து கூழாக்க முடியும். ஒரு டன் தக்காளியைக் கூழாக்கினால் 500 கிலோதான் தரமான கூழ் கிடைக்கும். தக்காளியாகக் கணக்குப் பார்த்தால் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் முதல் 9 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை குறைவுதான். ஆனால், கிலோ 2 ரூபாய்க்கு விற்பனையாகும்போது, சாலையில் கொட்டுவதைவிடக் கூழாக்கு வதால் விவசாயிகளுக்கான நஷ்டம் குறையும் என்பதுதான் இதன் நோக்கம்.

செயல் விளக்க வாகனத்தில் உள்ள இயந்திரத்திலேயே இந்த அளவுக்கு வருவாய் ஈட்ட முடியும். இதைவிடப் பெரிய அளவில் அமைத்தால் அதிக அளவு தக்காளியைக் கூழாக்கிச் சேமித்து வைக்க முடியும். இந்தக் கூழ் 3 மாதங்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இந்தக் கூழை சாஸ், ஜாம், ஜெல்லி உள்ளிட்ட பொருள்களாக மாற்ற முடியும்.

மதிப்புக்கூட்டும் வாகனங்கள் தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ளன. தோட்டக்கலைத்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், இந்த வாகனம் முதன்முறையாகத் திண்டுக்கல் மாவட்டத் துக்கு வந்துள்ளது.

திண்டுக்கல்லில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் எங்களை அணுகினால் இந்த வாகனத்தையே வாடகைக்குக் கொடுப்போம். அவர்களுக்குப் பயிற்சி வழங்கவும் தயாராக இருக்கிறோம். இந்த இயந்திரம் மூலம் தக்காளி மட்டுமல்லாமல் பப்பாளி, திராட்சை, கொய்யா உள்ளிட்ட சதைப்பற்றுள்ள பழங்களைக் கூழாக்கி மதிப்புக்கூட்டி வருவாய் ஈட்டலாம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism