Published:Updated:

வேளாண் சட்டங்கள் பற்றிக் கருத்துகளைப் பதிவு செய்ய நாளை கடைசி நாள்... எப்படிப் பதிவு செய்வது?

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவிடம் கருத்துகளைப் பகிர நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 12-ம் தேதி குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவில் யார் யார் இடம் பெறலாம் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி அந்தக் குழு டெல்லியில் போராடும் விவசாயிகள், விவசாய அமைப்புகளிடம் ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் கருத்துகளைக் கேட்க முன்வந்துள்ளது. இதில் கருத்து தெரிவிக்க விரும்புவோர் இந்த https://farmer.gov.in/SCCommittee/index.html லிங்க்கில் சென்று வேளாண் சட்டங்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நாளை (20.2.2021) கடைசி நாள். அதற்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிவிப்பு
அறிவிப்பு

கருத்துகளைப் பதிவது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞரும் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்தவருமான ஈசன், ''உச்ச நீதிமன்ற கமிட்டி கருத்துகளைக் கேட்டிருக்கு. அதுல அரசுக்கு ஆதரவான ஆட்கள், பி.ஜே.பி-காரங்க சட்டத்துக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிச்சுட்டு இருக்காங்க. விவசாய அமைப்புகளைப் பொறுத்தவரைக்கும் அதுல நாங்க கருத்து சொல்ல விரும்பல. காரணம் என்னன்னா அந்தக் கமிட்டியில இருக்குற 4 பேர் சட்டத்தை உருவாக்கினதுல முக்கிய பங்கு வகிச்சவங்க. அவங்ககிட்ட விவசாயிக சொல்ற கருத்து எடுபடுமா? வேளாண் சட்டத்துனால என்ன தீமைன்னு சில அறிவாளிகள் பரப்புரை பண்ணிட்டு திரியுறாங்க. புதுச்சேரியில இன்னிக்கு ரேஷன் கடை இல்லை. இதுதான் இனி இந்தியா முழுமைக்கும் நடக்கும். அதுக்குதான் அந்தச் சட்டங்கள். வேளாண் சட்டங்களைத் தனியா பார்க்கக் கூடாது. அரசின் திட்டங்களோடு அதை இணைச்சு பார்க்கணும்.

விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்றதுல இருந்து அரசு பின்வாங்குறதுக்குதான் இந்தச் சட்டம்னு நாங்க சொல்றோம். இல்லைன்னு அரசு சொல்லுது. அப்ப கொள்முதல் செய்றதை சட்டமாக்குங்கன்னு சொன்னா, அதை அரசு ஏற்க மறுக்குது. குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்குங்கன்னு சொல்றோம். அதையும் முடியாது. வாய்மொழியா உறுதி கொடுக்குறோம்னு சொல்லுது. இதுதான் பிரச்னை. யூனியன் பிரதேசங்கள்ல ரேஷன் கடைகளை மூடிக்கிட்டு இருக்காங்க. ஒரே நாடு, ஒரே ரேஷன்னு சொல்ற அரசு, அடுத்து என்ன செய்யும். எல்லா மாநிலத்துலயும் ரேஷன் கடைகளை மூடும். ரேஷன் கடை இல்லைன்னா, கொள்முதல் இருக்காது. கொள்முதல் இல்லைன்னா குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது. ஆக, அரசு தன்னோட கடமையிலிருந்து விலகிட்டு, அதையெல்லாம் தனியாருக்கு தாரை வார்க்க முடிவு பண்ணிட்டாங்க. இதுவரைக்கும் அனைத்து மக்களுக்கும் சரிவிகித உணவுகூட கொடுக்க முடியாத அரசாங்கத்துகிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்.

ஈசன்
ஈசன்

வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றம் மூலமா நிறைவேற்ற முடிவு பண்ணிடுச்சு அரசாங்கம். அதுக்காகத்தான் கருத்துக்கேட்பு. இதுனால எந்தப் பயனும் இல்லை. கொஞ்ச நாள்ல போராட்டத்தைக் கலைச்சு விட்டுட்டு, மக்கள் சட்டங்களை ஆதரிக்கிறாங்கன்னு சொல்லி, சட்டத்தை அமல்படுத்தப் போறாங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் அரசுமீதும் கமிட்டி மீதும் நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை'' என்றார்.

வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் இந்த இணையதள இணைப்புக்குச் சென்று பதிவு செய்யலாம்.

லிங்க் https://farmer.gov.in/SCCommittee/index.html

கடைசி தேதி: 20.2.2021

அடுத்த கட்டுரைக்கு