Published:Updated:

மா, பலா, வாழை... பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கி வரும் அமைச்சர்!

 பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கும் பணி

பாரம்பர்யம்

மா, பலா, வாழை... பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கி வரும் அமைச்சர்!

பாரம்பர்யம்

Published:Updated:
 பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கும் பணி

ன்னியாகுமரி மாவட்டத்தில் மா, பலா, வாழை இனங்களில் பல பாரம்பர்ய ரகங்கள் இருக்கின்றன. அவற்றில் பல அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில ரகங்கள் ஒருசில பகுதிகளில் மட்டுமே விளைகின்றன. குறிப்பாக வாழைக்குப் பெயர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய வாழை ரகங்கள் இருக்கின்றன. அதில் சில ரகங்கள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. சில ரகங்களின் கன்றுகள் அனைத்து பகுதியிலும் கிடைப்பதில்லை. தற்போது அந்த ரகங்களின் வாழைக் கன்றுகள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் வகையில், அதைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தமிழகத் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

இவர் அமைச்சராவதற்கு முன்பே இயற்கையைக் காக்கவும், குளங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

இயற்கை ஆர்வலரான அமைச்சர் மனோ தங்கராஜ் முயற்சியால் ஒருசில பகுதிகளில் மட்டும் கிடைத்து வந்த 20 வகையான பாரம்பர்ய வாழை இனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைப் பெருக்கி அரசு தோட்டக்கலை பண்ணைமூலம் விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் வாழை இனங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதுண்டு. காரணம் மா, பலா, கொய்யா போன்ற மற்ற பயிர்களைப் போல், வாழைக் கன்றுகளை அரசு மற்றும் தனியார் நாற்றுப்பண்ணைகளில் விற்பனை செய்வதில்லை. இந்நிலையில், முதன் முறையாகக் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைத்துறை பழத்தோட்டத்தில் பாரம்பர்ய வாழை இனங்களை உருவாக்கி, விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தொடக்க விழாவில் அமைச்சர்
தொடக்க விழாவில் அமைச்சர்


இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசினோம். “கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் பல தனித்தன்மைகள் இருக்கு. உதாரணமாக இங்க இருக்கக்கூடிய முக்கனிகள். குறிப்பாக வாழையில் எக்கச்சக்கமான வகைகள் இருக்கு. மட்டி, செம்மட்டி, செந்துளுவன், வெள்ளைத்துளுவன், பேயன், நெய்க்கதலி, கூம்பில்லா வாழைன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இதில நிறைய இனங்கள் அழிஞ்சுகிட்டே வருது. இதை யாரும் கவனிக்கிறது இல்ல. இதை மேம்படுத்திக் கொண்டுவர்றதும் ரொம்ப சவாலா இருந்துகிட்டிருக்கு. அதனாலதான் நம்முடைய மண்ணுக்கான பயிர்களான வாழை, மா, பலா போன்றவற்றைப் பாதுகாக்கணும்னு முடிவு பண்ணினேன். அதற்காக நான் முயற்சி பண்ணி தோட்டக்கலைத்துறையில சொல்லிக் குமரி மண்ணிற்குச் சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட வாழை இனங்களைக் கண்டறியச் செய்தேன். அதைத் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான பண்ணையில் நடவு செய்துள்ளோம். அவை அங்கு விளையும். இனி அரியவகை வாழைக்கன்றுகளை யாராவது கேட்டால்கூட அந்தக் கன்றுகளைக் கொடுக்க முடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்து மண்ணின் பாரம்பர்ய மட்டி வாழைப்பழம் மருத்துவக் குணம் உடையது. புளிப்புத்தன்மை இல்லாததுனால மட்டிப்பழம் சாப்பிட்டால் சளி கட்டாது. அதனால குழந்தைகளுக்கும் இந்தப் பழத்தைக் கொடுப்பாங்க. கதலி வாழைப்பழமும் மருத்துவக் குணம் உடையதுதான். சித்த மருத்துவத்தில சேரக்கூடிய முக்கியமான வாழை இனங்கள் நிறைய இந்த மண்ணுல இருக்கு. கன்னியாகுமரி மாவட்டத்தில பரவலா உள்ள வாழை இனங்களில் 20 இனங்களை இப்ப எடுத்து அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கோம். இன்னும் தேடுதல் நடந்துட்டுதான் இருக்கு” என்றவர் பாரம்பர்ய மா மரத்தின் விதைகள் சேகரிப்பு பற்றிப் பேசினார்.

பாரம்பர்ய வாழை இனங்களைப் பண்ணையில் வளர்க்கும் தொடக்க விழா
பாரம்பர்ய வாழை இனங்களைப் பண்ணையில் வளர்க்கும் தொடக்க விழா


வெள்ளரி மாங்காய்

“கன்னியாகுமரி மாவட்டத்தில பாரம்பர்ய மா, பலா ஆகியவற்றில் பல வகைகள் இருக்கு. ஒட்டு ரகங்களைத் தேடி மக்கள் போனதுனால நிறைய இனங்கள் அழிஞ்சி போச்சு. உதாரணத்துக்கு ‘வெள்ளரி மாங்காய்’ன்னு ஒரு ரகம் உண்டு. அந்த மாங்காயைப் பச்சையா சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அந்த மாங்காயைச் சாப்பிட்டா வெள்ளரிக்காய் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். புளிப்பே இருக்காது. அந்த மாங்காய் அளவுலயும் சின்னதா இருக்கும். இதை யாருமே நம்ம கண்ணுலயே காட்டல.

‘கலையம் தூக்கி’ன்னு ஒரு மாங்கா உண்டு. அது கலையம் மாதிரி ரொம்பப் பெருசா இருக்கும். ‘கற்கண்டு’ன்னு ஒரு மாங்கா இனம் உண்டு. கப்ப-ன்னு ஒரு மாங்கா உண்டு. இப்பிடி எக்கச்சக்கமான ரகங்கள் இருந்தன. இப்ப பாரம்பர்ய இனங்கள் எல்லாமே அழியுது. இதுக்கு மிகப்பெரிய காரணம் வீரிய ரகங்கள் புழக்கத்துக்கு வர்றதுதான்.

வீரிய ரகங்களால நோய்கள் அதிகம் வரும். இயற்கை சீற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்காது. இப்படி அதுக்கு நிறைய பிரச்னைகள் இருக்குது. நம்ம மண்ணுக்கான மரங்கள் அப்படி அல்ல. உதாரணத்துக்குச் சொல்லணும்னா வீரிய ரகம் 3 வருஷத்துல காய்க்கும்னா, பாரம்பர்ய மரங்கள் 7 வருஷத்துலதான் காய்க்கும். ஆனா பாரம்பர்ய மரங்கள் ரொம்ப வருஷம் நிற்கும். ரொம்பக் காய்க்கும். பாரம்பர்ய மரங்களுக்கான சிறப்புகள் இன்னும் நிறைய இருக்கு. எல்லா இனங்களையும் கண்டுபிடிச்சு பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு இந்த இனங்கள் எல்லாத்தையுமே கொடுக்கணும்” என்றவர் பலா மரத்தின் வகைகளைப் பற்றி விவரித்தார்.

அரசுத் தோட்டக்கலைப் பண்ணை
அரசுத் தோட்டக்கலைப் பண்ணை

முண்டாஞ்சக்க பலா

‘‘பலா மரத்தில ‘செம்பருத்தி வருக்க’ன்னு ஒரு இனம் உண்டு. அந்தப் பலாச்சுளை நல்ல சிவப்பா இருக்கும். சாப்பிட நல்ல சுவையாகவும் இருக்கும். ‘முண்டாஞ் சக்க’ன்னு ஒரு இனம் உண்டு. ரொம்பச் சின்னதா இருக்கும். அதில ‘வருக்கச்சக்க’, ‘கூழன் சக்க’ன்னு ரெண்டு வகை உண்டு. இப்படி நிறைய வகைகள் பலா மரத்திலேயே உண்டு. எனக்குத் தெரிஞ்ச இனங்கள் எல்லாம் அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். வேறு பாரம்பர்ய இனங்கள் இருந்தாலும் அதையும் தேடச் சொல்லியிருக்கேன்” என்றவர் நிறைவாக,

“அதுபோலக் காடுகளில் உள்ள பாரம்பர்ய மரங்களின் விதைகளைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த விதைகள் கிடைச்ச உடனே காட்டுலயே விதைக்கப்போறோம். காட்டுல நிறைய காலி இடங்கள் இருக்கு. அதுமட்டுமல்லாம ஓகி புயல் சமயத்தில எக்கச்சக்கமான மரங்கள் விழுந்துபோச்சு. அங்க மரங்கள் நடுவதற்காக லட்சக்கணக்கான விதைகள் சேகரிக்கச் சொல்லியிருக்கிறேன். அது சம்பந்தமா வனத்துறை அதிகாரிகள்கிட்ட பேசியிருக்கேன். விதைகள் சேகரிக்கப்பட்டதும் விரைவில் காட்டில் நடவு செய்வோம்” என்றார் உற்சாகத்துடன்.

பழத்தோட்டம் அரசுப் பண்ணையில் வாழை இனங்களைப் பராமரித்துக்கொண்டிருந்த தோட்டக்கலை அலுவலர் சந்திரலேகாவிடம் பேசினோம். “திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்ட நிலப்பரப்பில் பாளையங்கோட்டை, படத்தி, சக்கைப் பேயன் போன்ற வாழை இனங்கள் கிடைக்கும். அதே மாதிரி கேரள எல்லையில் செவ்வாழை, நேந்திரன், மட்டி, தேன் மட்டி, செம்மட்டி, கருமட்டின்னு நிறைய ரகங்கள் இருக்கு.

ஆண்டுக்கு இரண்டு போகம் மா மகசூல்

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுமே சிறப்பாக வளரக்கூடியது. இங்க மட்டும்தான் மா மரங்கள்ல ரெண்டுபோகம் மகசூல் கிடைக்கும். கேரளா சார்ந்த வாழைகளும், தமிழ்நாட்டு வாழைகளும் இங்கு வளரும். முக்கனிகளில் நிறைய ரகங்கள் மாவட்டத்தில இருக்கு. ஆனா மக்களுக்கு அது என்ன இனம்னு தெரியாது. அதனால எல்லாவகை இனங்களையும் ஒன்றிய அளவுல அலுவலர்கள் சேகரிச்சுட்டு இருக்காங்க. அந்த இனங்களை அரசுப் பண்ணையில் பெருக்கினால் மக்களுக்குப் பாரம்பர்ய இனங்கள் எளிதில் கிடைக்கும்.

அரசு பழப்பண்ணையில் நீலம், பெங்களூரா ஆகிய ரெண்டு வகை மா மரங்கள்ல ரெண்டு போகம் விளையும் இனங்கள் இருக்கு. அதுமட்டுமில்லாம பங்கனப்பள்ளி, காலாப்பாடு, பஞ்சவர்ணம், பைரி, கல்காய்ச்சி, மல்கோவா, சேலம் பெங்களூரா, சொர்ண ரேகா, சொர்ண ஜஹாங்கீரானு பல வகைகள் இருக்கு.

பலா வகைகளைப் பொறுத்தவரை பி.டி.ஐ-1, வியட்நாம் சூப்பர் யாளி, சூர்யா, செம்பருத்தி, உள்ளூர் ரகமான சேதுபதி, முட்ட வருக்கை மாதிரியான வகைகள் இருக்கு. இப்ப நம்ம நாட்டு வகைகளைச் சேகரிச்சுட்டு இருக்கோம். வாழைகளைப் பொறுத்தவரை அரசு பண்ணைகளில் பெருக்கம் செய்வதும், விற்பனை செய்வதும் இல்லை. இப்போதுதான் முதன் முறையாக அதற்கான பணி தொடங்கியிருக்கிறது. வாழையைப் பொறுத்தவரை ஒருமுறை வாங்கி நட்டால் போதும். வாழையடி வாழையாகக் கன்றுகள் வந்துகிட்டே இருக்கும். வேறு யாராவது தேவை என்றாலும் மாறி மறி வாங்கிக்கொள்வார்கள். அதனால வாழைக் கன்றுகள் பண்ணைகளில் பெரிய அளவில் விற்பனைக்கு வைப்பதில்லை. ஆனால் இப்ப பாரம்பர்ய வாழைகள் இங்க வைக்கத் தொடங்கியதும் பலரும் கேட்கத் தொடங்கிட்டாங்க.

எல்லாமே உள்ளூர் விவசாயிகளிடம் இருந்துதான் சேகரிச்சு இருக்கோம். இப்ப 20 வகைகள் கிடைச்சிருக்கு. இன்னும் புதிய ரகங்கள் கிடைத்தால் இங்கேயே விரிவாக்கம் பண்ணி நடுறதுக்கு முடிவு பண்ணியிருக்கிறோம்” என்றார்.



தொடர்புக்கு, ஷீலாஜான்,

செல்போன்: 99942 23496

மனோ தங்கராஜ், ஷீலாஜான், சந்திரலேகா
மனோ தங்கராஜ், ஷீலாஜான், சந்திரலேகா

13 ரக மா ரகங்கள்

மா வகைகள் தொடர்பாகத் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலாஜானிடம் பேசினோம். “மா வகைகளில் காசி கோல்டு, பால்வாடி, வாழைப்பூ, கிளி மூக்கு, சாம்பிராணி, லட்டு, ஜலால், சக்கரைக் கட்டி, சதங்கை, செங்கவருக்கை, மாயில பூ, புளிச்சி மா, நீலம் ஆகிய 13 வகைகளைச் சேகரித்துள்ளோம். பலா வகைகளில் முண்டன் வருக்கை, நெட்டு வருக்கை, நாட்டு வருக்கை, தேன் வருக்கை, செம்பருத்தி வருக்கை, பண்ருட்டி வருக்கை, வியட்நாம் சூப்பர் யாளி, நெட்டடி வருக்கை, டேங் சூர்யா (Daeng Surya) ஆகிய 9 வகைகளின் விதைகள் சேகரித்துள்ளோம். இதில் நான் கேட்டிராத வகைகள் நிறைய உள்ளன. இன்னும் அதிகபடியான விதைகளைச் சேகரிக்க மகளிர் திட்டச் சுய உதவிக்குழுவினரிடம் கேட்டிருக்கிறோம்.

இப்போது கிடைப்பதைச் சேகரித்து முளைக்க வைத்து 100 நாள் வேலைத் திட்டம் மூலமாகச் சாலையோரங்களில் நடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். நாட்டு ரக மரங்களின் விதைகளை நடவு செய்தால் ஓகி போன்ற புயல்கள் வந்தாலும் விழுந்துவிடாமல் நிற்கும். ஓகி புயல் சமயத்தில் விழுந்தது ஒட்டு ரக மரங்கள்தான். அதுபோல காட்டுப்பகுதியில் இந்த வகை மா, பலா மரங்களை நடவு செய்தால் வனவிலங்குகளுக்குத் தேவையான உணவுகள் கிடைக்கும். அதன் மூலம் காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கப்படும்.

இது ஒரு சிறந்த செயல்முறை என்பதால் உடனடியாகச் செயல்படுத்தினோம். வாழை இனங்களில் கல்மட்டி, மலை வாழை போன்றவற்றை மோதிர மலை, மணலோடை பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து சேகரித்தோம். ஜூன் மாதம் 5-ம் தேதி அமைச்சர் மனோ தங்கராஜ், அதிகாரிகள் கூட்டத்தில் பாரம்பர்ய மா, பலா, வாழை இனங்களைப் பரவலாக்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். ஜூன் 20-ம் தேதி முதற்கட்டமாக வாழைக் கன்றுகளைச் சேகரித்து நடவு செய்துவிட்டோம். இப்போது மா, பலா வகைகளின் விதைகள் சேகரித்துள்ளோம். அதில் ஆயினிச் சக்கை விதைகளையும் சேகரித்துள்ளோம். விரைவில் நடவு செய்து பெருக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

20 வகை வாழை இனங்கள்

கற்பூரவள்ளி, மட்டி, கருமட்டி, செம்மட்டி, படத்தி, ஆயிரம் காய்ச்சி, மொந்தன், நேந்திரன், சக்கை பேயன், நெய்பூவன், செந்துளுவன், வெள்ளை துளுவன், மலை வாழை, ரசகதலி, பேயன், பாளையன்கோட்டை, பூங்கதலி, நெய்கதலி, சிங்கன், கூம்பில்லா சிங்கன் ஆகிய 20 வகை வாழை இனங்கள் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் நடப்பட்டுள்ளன.

மா மரத்துக்குப் பெயர்போன
அரசு பழத்தோட்டம்

கன்னியாகுமரி பழத்தோட்டம் மொத்தம் 30.64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 15 ஏக்கரில் இயற்கை பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 15.64 ஏக்கர் நிலத்தில் பல வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. மா, பலா, கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்ற பழ மரக்கன்றுகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். இந்தப் பண்ணையில் உள்ள மாங்கன்றுகளை வாங்குவதற்கு பிற மாவட்டங்களிலிருந்தும் வருகிறார்கள்.