Published:Updated:

`அப்போ கஜா புயல்... இப்போ கொரோனா வைரஸ்!' - கலங்கும் திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள்

நேந்திரம் வாழை
நேந்திரம் வாழை

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அறுவடைக்குத் தயாராக உள்ள நேந்திரம் வாழைப் பழங்கள் வீணாகிப் போகும் சூழல் நிலவுகிறது. இதனால், திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி பாய்ந்தோடும் முசிறி, ஸ்ரீரங்கம், அந்தநல்லூர் மற்றும் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் அதிகம். குறிப்பாக குழுமணி, வயலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், நேந்திரம் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நேந்திரம் வாழை அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் நேந்திரம் வாழை பெருமளவு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குக் அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகக் கேரள மாநிலத்திலுள்ள கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டுள்ளது.

வாழை
வாழை

இதனால், திருச்சியில் விளையும் நேந்திரம் வாழைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும், கேரள வியாபாரிகள் வாழைக் கொள்முதலை நிறுத்தியுள்ளனர். இதனால் விளைந்த வாழை, அறுவடை வயலிலேயே தேக்கமடைந்துள்ளது.

பொதுவாக அறுவடைக் காலங்களில், திருச்சியிலிருந்து தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் நேந்திரம் வாழைப் பழம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அது 30-க்கும் குறைவான லாரிகளாகக் குறைந்துள்ளது.

இதனால், திருச்சியில் விளையும் நேந்திரம் வாழைப்பழத்தின் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பேரிழப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாகத் திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

லாரியில் நேந்திரம் வாழை
லாரியில் நேந்திரம் வாழை

அந்தப் பாதிப்புகளுக்கு தமிழக அரசு முறையான இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேந்திரம் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக நீதி பேரவை திருச்சி மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், ``திருச்சி மாவட்டத்தில் வாழை விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் கேரளா மாநிலத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளதால், நேந்திரம் வாழையின் மொத்த கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புல்லட், கேக்; பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி! - போலீஸ் ரேடாரில் ஸ்ரீரங்கம் ரவுடி

இதனால், இதுநாள் வரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நேந்திரம் வாழை, தற்போது 10 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏக்கருக்கு 2.5 லட்சத்துக்கும் மேல் செலவு செய்த வாழை விவசாயிகள், அதில் பாதி பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் நேந்திரம் வாழையை மொத்த கொள்முதல் செய்து, நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு