Published:Updated:

தரமற்ற விதைக்காக 1,42,800 ரூபாய் இழப்பீடு! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

விதைப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
விதைப் பிரச்னை

நீதி

தரமற்ற விதைக்காக 1,42,800 ரூபாய் இழப்பீடு! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதி

Published:Updated:
விதைப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
விதைப் பிரச்னை

திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான இவர் கடந்த 11 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவருக்குத் திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோட்டில் நாலரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எலுமிச்சை, கொய்யா சாகுபடி செய்திருப்பதோடு, பருவத்துக்கு ஏற்றவாறு தக்காளி, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் பாகற்காய் விதைகளை செய்திருக் கிறார். விதைகள் துளிர்விட்ட அடுத்த சில வாரங்களிலேயே, மஞ்சள் நிறமாகி இலை சுருட்டல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பாதிப்பு குறித்து விதை விற்பனை நிலையத் தின் உரிமையாளரிடம் கவலையோடு தெரிவித்த திருவேங்கடத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

திருவேங்கடம்
திருவேங்கடம்

இது தொடர்பாக, விவசாயி திருவேங்கடத்தை நேரில் சந்தித்துப் பேசினோம். “பாகற்காய் சாகுபடி செய்றதுக்காக, 2021-ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில உள்ள வெங்கட சுப்ரமண்யா ஸ்டோர்ல பாகல் விதை வாங்கினேன். ஒரு ஏக்கருக்கு 6 பாக்கெட் விதைகள் தேவைப்பட்டுச்சு. ஒரு பாக்கெட் விலை 650 ரூபாய். மொத்தம் 3,900 ரூபாய் விலை கொடுத்து 6 பாக்கெட் விதை வாங்கினேன். நிலத்தை உழுது, அடியுரமா எரு போட்டு, விதைப்பு செஞ்சேன். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினேன். விதைகள் முளைவிட்டு வளர ஆரம்பிச்ச 15 நாள்லயே இருந்து இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி சுருண்டுடுச்சு.

விதை வாங்கின கடைக்குப் போயி, விவரத்தைச் சொன்னேன். ‘பஞ்சகவ்யா தெளிச்சுப் பாருங்க’னு அந்தக் கடைக்காரர் சொன்னார். அதைச் செஞ்சு பார்த்தும்கூட சரியாகலை. வேறு சில பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் தெளிச்சு பார்த்தேன். பயிர்ல எந்த முன்னேற்றமும் ஏற்படலை. இனிமே தேறி வர வாய்ப்பே இல்லைனு உறுதியா தெரிஞ்சு போயிடுச்சு. தரமில்லாத விதையை விதைச்சதுனாலதான், இந்தப் பாதிப்புனு காய்கறி சாகுபடியில அனுபவமுள்ள விவசாயிங்க சொன்னாங்க. தனிப்பட்ட முறையில் தோட்டக்கலைத்துறை அலுவலர் களும்கூட இதை உறுதிப்படுத்தினாங்க. விதைக் கடைக்காரர்கிட்ட இழப்பீடு கேட்டேன். அவர் முறையா பதில் சொல்லவே இல்லை. விதை உற்பத்தி செஞ்ச நிறுவனத்தோட விற்பனை பிரதிநிதியை சந்திக்க முயற்சி பண்ணினேன். ஆனா முடியலை. தொடர்ச்சியா அலைக்கழிக்கப் பட்டேன். வங்கி மேலாளரா பல வருஷம் வேலைபார்த்து ஓய்வுபெற்ற எனக்கே இந்த நிலைனா, பாவம், அதிகம் படிக்காத விவசாயிகளோட நிலைமையை நினைச்சுப் பாருங்க.

விதை பாக்கெட்ல இருந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கும் தொடர்புகொள்ள முயற்சி பண்ணினேன். அதுவும் முடியலை. இப்படி ஏமாந்து போயிட்டோமேனு எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுடுச்சு. இதைச் சும்மா விடக்கூடாதுனு முடிவு பண்ணினேன்.

தரமற்ற விதையால்தான் பாதிப்பு ஏற்பட்டுச்சுங்கறதை காந்தி கிராமம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் உறுதிப்படுத்திக்கிட்டு, திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன்.

இழப்பீடு வாங்கணும்ங்கறது மட்டுமே என் நோக்கமில்லை. இனிமேல் வேறு எந்த விவசாயும் பாதிக்கக் கூடாது. தரமில்லாத விதைகளை விவசாயிகள்கிட்ட வித்துட்டு, ஈஸியா சமாளிச்சிக்கலாம்னு விதை விற்பனை யாளர்கள் நினைக்கக் கூடாது. இது சம்பந்தமா விவசாயிங்க மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கற நோக்கத்துனாலயும்தான் நுகர்வோர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன். விசாரணை நடந்து முடிஞ்சு இப்ப தீர்ப்பு வெளியாகி இருக்கு. தரமில்லாத விதையால பாகல் சாகுபடியில் ஏற்பட்ட இழப்புக்கும், இதனால் நான் அடைஞ்ச மன உளைச்சலுக்காகவும் 1,42,800 ரூபாய் இழப்பீடு வழங்கணும்.

விதை
விதை

இந்த வழக்குக்காக ஏற்பட்ட செலவுகளுக்கு 5,000 ரூபாய் வழங்கணும்னு விதை நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புச்சிருக்கு. இந்த உத்தரவால், ஆறுதல் அடைஞ்சிருக்கேன். விதை மோசடி யில ஈடுபடக்கூடியவங்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாவும் அமைஞ்சிருக்கு’’ என்றார்.

இதுகுறித்துத் திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமியிடம் பேசியபோது, ‘‘தரமற்ற விதை விற்பனையைத் தடுக்க, இந்த மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை கடைகளில் விதை ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

விவசாயிகள் தனியார் விதைக் கடைகளில் விதைகள் வாங்கும்போது, அவை தரமானது தானா என உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் வாங்க வேண்டும். விதை சான்று பெற்றுள்ளதா, எப்போது உற்பத்தி செய்யப் பட்டது, காலாவதி தேதி, ஏதேனும் சந்தேகம் இருந்தால் விசாரிப்பதற்கான தொடர்பு எண் உள்ளதா, நம்பகமான நிறுவனம்தானா என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொண்டுதான் அந்த விதையை வாங்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விதை ஆய்வாளரை அணுகலாம்.

தரமான விதைகள் வாங்குவது குறித்து விவசாயிகள் மத்தியில் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று சொல்லி முடித்தார்.

விவசாயிகளே... திண்டுக்கல் விவசாயி திருவேங்கடம் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்துள்ளார். விதை, உரம் என்று என்ன பிரச்னையாக இருந்தாலும், சட்டப்போராட்டம் நடத்தத் தயங்காதீர்கள். அதற்கு தோதாக, உரிய ஆவணங்களை கண்டிப்பாக ஆரம்பம்முதல் சேமித்து வையுங்கள் விதை வாங்கிய ரசீது, அதற்காக பணம் கொடுத்ததற்கான ரசீது என்று அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். அதேபோல உரிய ஆய்வாளர்களை அழைத்துவந்து ஆய்வுகள் மேற்கொண்டு அதையும் பதிவு செய்து வையுங்கள்.

ஏமாந்து கொண்டே இருந்தது ஒரு காலம்... இனியும் அது தொடர வேண்டாம்.