Published:Updated:

விவசாயிகளுக்கு 16 பில்லியன் நஷ்டஈடு வழங்கும் அமெரிக்கா... காரணம் இதுதான்!

பா.கவின்

`விவசாயப் பொருள்களின் விற்பனையில் ஏற்பட்ட இழப்பையும், குறைவான லாபத்தையும் ஈடுகட்ட 1,600 கோடி டாலர் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி அம்மாதம் முடியும் வரை வழங்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

Donald Trump
Donald Trump ( AP )

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்த வியாபாரப் போட்டியால் விவசாயப் பொருள்களின் விற்பனையில் ஏற்பட்ட இழப்பையும், குறைவான லாபத்தையும் ஈடுகட்ட 1,600 கோடி டாலர் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி அம்மாதம் முடியும் வரை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

US Farmers
US Farmers
NPR

உலக மிகப்பெரிய வணிக நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் இந்த அமெரிக்க விவசாயிகள்தான் அதிக பாதிப் குள்ளானார்கள். அமெரிக்க விவசாயிகள் பெரும்பாலும் டொனால்டு ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் என்கின்ற உள்ளூர் பத்திரிகைகள். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்க வழி செய்ய வேண்டும், இவ்வாறு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள்.

அமெரிக்கா சீனாவுக்கான வியாபாரப் போட்டியில் அமெரிக்க விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உதவித் தொகை நியாயமான ஒன்றே என்று அமெரிக்காவின் விவசாயச் செயலாளர் சோனி பெர்ட்யூ கூறினார். ட்ரம்ப் அமெரிக்க விவசாயிகள் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு இதன் மூலம் வெளிப்படுகின்றது. கடந்த ஆண்டு என்ன பயிரிடப்பட்டது என்பதற்கேற்ப உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்வாண்டு விவசாயிகள் பயிர் செய்த நிலத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற தகவலின் அடிப்படையில் பருத்தியை விளைவிக்கும் மிசிசிபி விவசாயிகளுக்கு அதிக தொகை கிடைக்கும் எனத் தெரிகிறது. அலபாமா மாநிலத்தில் ஏக்கருக்கு 95 டாலரும் மிசிசிப்பி மாநிலத்தில் 87 டாலரும் லூசியானா மாநிலத்தில் 70 டாலரும் வழங்கப்படும். நடு மேற்குப் பகுதியில் குறைந்த அளவில் ஏக்கருக்கு 69 டாலராக இல்லினாய்ஸ் மாநிலத்துக்கு வழங்கப்பட உள்ளது. இது சோயாபீன்ஸ் விளையும் பகுதி ஆகும்.

US Farmers
US Farmers
WGBH

மக்காச்சோளம் விளைவிக்கும் மாநிலத்துக்கு சராசரியாக ஏக்கருக்கு 66 டாலர் வழங்கப்படுகிறது இந்த உதவித்தொகை 29 விவசாயப் பொருள்களுக்கு வழங்கப்பட உள்ளது. மாட்டுப் பண்ணை நடத்தும் விவசாயிகளுக்கும் பாதாம் பருப்பு, பிஸ்தா, வால்நட், கிரான்பெர்ரி, ஸ்வீட் செர்ரி உற்பத்தி செய்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 6 வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்க விவசாயத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கூடுதல் மானியம் நவம்பர் முதல் ஜனவரி வரை வழங்கப்படும் என்றும், ஆனால் இது வர்த்தக மோதல்கள் இன்னும் உள்ளனவா என்பதைப் பொறுத்தே அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.