Published:Updated:

ஆராய்ச்சி, பயிற்சி, விதை உற்பத்தி... விவசாயிகளை அழைக்கும்... வாகரை மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!

மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!
பிரீமியம் ஸ்டோரி
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!

அரசு

ஆராய்ச்சி, பயிற்சி, விதை உற்பத்தி... விவசாயிகளை அழைக்கும்... வாகரை மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!

அரசு

Published:Updated:
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!
பிரீமியம் ஸ்டோரி
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வாகரையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், இம்மாவட்ட விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் சேவையாற்றி வருகிறது.

மக்காச்சோளத்துக்கு மட்டுமல்ல...

மற்ற பயிர்களுக்கும் ஆலோசனை...

சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஒரு பகல் பொழுதில் இங்கு நேரில் சென்றோம். நம்மிடம் பேசிய இந்நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வகுமார், ‘‘எங்கள் நிலையத் தின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு முன்பு, ஒரு முக்கியத் தகவலை பசுமை விகடன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மக்காச்சோளம் தொடர்பான ஆராய்ச்சிகள்தான் எங்கள் நிலையத்தின் முதன்மை நோக்கமாக இருந்தாலும்கூட, நெல், வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களுக்கும் இங்கு விவசாயிகள் ஆலோசனை பெறலாம்... சாகுபடி தொழிநுட்பங்கள், பூச்சி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழி காட்டுகிறோம்.

மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப் பயிற்சி

நீர் மேலாண்மை, களை மேலாண்மை, இடுபொருள் மேலாண்மை, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கிறோம். எங்கள் நிலையத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்த விவசாயிகள் பலர், பல்வேறு தேவைகளுக்கும் எங்களை அணுகி, பலன் அடைகிறார்கள். குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பயன் பெற எங்கள் நிலையத்தில் பயிற்சி அளிக்கிறோம். அதிக மகசூல் தரக்கூடிய பழனி வட்டாரத்தில் ஆயக்குடி, கணக்கன்பட்டி மற்றும் எரமநாயக்கன்பட்டி கிராமங்களிலும்... குறைவான மகசூல் கிடைக்கக்கூடிய குஜிலியம்பாறை வட்டாரத்தில் பாளையம், கருங்கல் மற்றும் கூடலூர் ஆகிய கிராமங்களிலும் விவசாயிகளின் வயல்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் இந்தப் பகுதிகளில் தங்கி இருந்து தினமும் விவசாயிகளின் பண்ணைக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். வாரம் ஒரு முறை விஞ்ஞானிகள் இங்கு சென்று ஆய்வுகள் மேற்கொள்வதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். எங்கள் நிலையத்தில் உயிர் உரங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப் படுகின்றன’’ என்று தெரிவித்தவர், மக்காச்சோளம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

செல்வகுமார்
செல்வகுமார்

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிலையத்தில் உழவியல், பயிரியல், பயிர் இனப் பெருக்கம், மரபியல், பூச்சியியல், நோய் எதிர்ப்பியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய மக்காச்சோள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மானாவாரி பகுதிகளில் பயிரிடக்கூடிய மக்காச்சோள ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். வீரிய ஒட்டு ரகங்களை... மானாவாரி மற்றும் இறவைப் பயிராகச் சாகுபடி செய்வற்கு ஏற்ற வகையில் உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்தியா முழுவதுமிருந்து சேகரிக்கப்பட்ட மக்காச்சோள விதைக் கருவூலம் வைத்திருக்கிறோம். இதைப் பயன் படுத்திதான் புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. சாகுபடி முறைகளில் அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறோம்.

டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்
டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்

மக்காச்சோளம் விதை உற்பத்தித் திடல்

இந்நிலையத்தின் வளாகத்திலேயே மக்காச்சோளம் விதை உற்பத்தித் திடல் உள்ளது. இங்கு விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கிறோம். தரமான விதை உற்பத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கிறோம். இப்பயிற்சிகளில் கலந்துகொள்ள விவசாயிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

25 நாள்களுக்கு முன்பு...

25 நாள்களுக்குப் பின்பு...


இந்நிலையத்தின் வளாகத்தில் உள்ள விதை உற்பத்தித் திடலில் நாங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் மக்காச்சோளம் பயிரிட முடியாது. இப்பகுதி விவசாயிகளைச் சார்ந்துதான் இந்த விஷயத்தில் நாங்கள் முடிவெடுக்க முடியும். இந்நிலையத்தில் விதை உற்பத்தித் திடலில் நாங்கள் மக்காச்சோளம் விதைப்பு செய்வதற்கு 25 நாள்களுக்கு முன்பு வரையிலும் 500 மீட்டர் தூரத்துக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த ஒரு விவசாயியும் தங்களுடைய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கக் கூடாது.

டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்
டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்

இது மட்டுமல்ல... எங்களுடைய விதை உற்பத்தித் திடலில் நாங்கள் மக்காச்சோளம் விதைப்பு செய்ததிலிருந்து 25 நாள்கள் வரை சுற்று வட்டாரப் பகுதிகளில் எந்த ஒரு விவசாயியும் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கக் கூடாது. இந்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகளில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இதைக் கடைப்பிடிக்கிறோம். இந்த விஷயத்தில் இப்பகுதி விவசாயிகளை எந்தவிதத்திலும் நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம். ஆனால், அதேசமயம் இந்தப் பகுதி விவசாயிகளிடம் முன்கூட்டியே கலந்தாலோசித்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கிறோம். விவசாயிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்
டிரேக்களில் வளர்க்கப்படும் மக்காச்சோள நாற்றுகள்

கோ-6, கோ-8

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப் பட்ட கோ- 6, கோ- 8 மக்காச்சோள ரகங்கள் தமிழ்நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்ற ரகங்கள். நம்முடைய விவசாயிகளுக்கு இந்த ரகங்களைப் பரிந்துரைத்து வருகிறோம். இதற்கான விதைகளை இங்கேயே உற்பத்தி செய்து உண்மை நிலை விதை, கிலோ 220 ரூபாய், சான்று நிலை விதை, கிலோ 250 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோள விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டவையாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு வாங்கிச் சென்று பலன் அடைகிறார்கள்.

பழங்குடியினருக்கான பயிற்சி

மக்காச்சோளம் பயிரிட பழங்குடி யினருக்குப் பயிற்சிகள் அளிப்பதோடு விதை, இடுபொருள்கள் உள்ளிட்டவற்றை இலவச மாகக் கொடுக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த 50 நபர் களுக்கு ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு தேவையான விதை மற்றும் இடுபொருள்கள் கொடுத்து வருகிறோம். கொடைக்கானல், நாமக்கல் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மக்காச்சோள விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செயல் விளக்கம்
செயல் விளக்கம்

வயல்வெளி செயல்விளக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்பங்களை, வயல்வெளி செயல்விளக்கம் மூலமாக விவசாயிகளிடம் கொண்டு செல்கிறோம். மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படக்கூடிய அனைத்து இடுபொருள் களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என அழைப்புவிடுத்தார்.


தொடர்புக்கு:

மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்,

வாகரை, திண்டுக்கல் மாவட்டம்.

தொலைபேசி: 04545 295989, அலைபேசி: 98420 79240

ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி
ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி

தமிழ்நாட்டுக்கு பொருந்தவில்லை
உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசாவுக்கு பலன்!


‘‘வி.ஜி.ஐ.ஹெச்-1 என்ற பெயரில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளத்தை 2018-ம் ஆண்டு இங்கு உருவாக்கினோம். பல்வேறுகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இந்த ரகம் தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்றதாக இல்லை என்பதை அறிந்தோம். ஆனால் அதேசமயம், உத்தரப்பிரேதசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்த ரகம் வெற்றிகரமாக விளைந்து நல்ல மகசூல் தருகிறது. இது மத்திய கால ரகம். விதைப்பு செய்ததிலிருந்து 105 முதல் 110 நாள்களில் அறுவடை செய்யலாம்.

ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி
ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி

இந்த ரகம் நீண்ட கதிர்கள் மற்றும் அதிக எண்ணிக்கை உடைய மஞ்சள் நிற மணிகளைக் கொண்டவை. இந்த ரகக் கதிர்கள் அதிகபட்சமாக 12 முதல் 14 மணி வரிசைகளைக் கொண்டதாகவும், ஒரு வரிசைக்கு 40 மணிகளைக் கொண்டதாகவும் இருக்கும். இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கான எதிர்ப்புத் திறன் இதில் உள்ளது. இலைக் கருகல், தண்டு அழுகல்... ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த ரகத்தில் 75.50 சதவிகித மாவுச்சத்து, 10.85 சதவிகித புரதம், 0.44 மில்லி கிராம் பீட்டா கரோட்டின், 4.05 சதவிகித கொழுப்புச் சத்து, 1.33 சதவிகித நார்ச்சத்து உள்ளது’’ என்கிறார் முனைவர் செல்வகுமார்.

ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி
ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி

அதிக இடைவெளி அவசியம்

‘‘பொதுவாக மக்காச்சோளம் சாகுபடியில் பூச்சி நோய்த்தாக்குதல் இல்லாமல், நல்ல மகசூல் பெற பயிர் இடைவெளி மிகவும் முக்கியமானது. வரிசைக்கு வரிசை 60 செ.மீ... செடிக்குச் செடி 25 செ.மீ இடைவெளி இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களுடைய மண்ணின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தியும், தட்பவெப்ப நிலையை அறிந்தும் அதற்கு ஏற்ற அங்கீகரிக்கப்பட்ட மக்காச்சோள ரகத்தைச் சாகுபடி செய்தால் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்கலாம்.

இங்கு மானாவாரி... அங்கு இறவை...

தமிழகத்தில் திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. பிற மாவட்டங்களில் இறவைப் பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி
ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி

பூக்கும் தருணத்தில் அதிக வெப்பம் இருக்கக் கூடாது

மக்காச்சோளம் பூ பூக்கும் தருணத்தில் வெப்பம் அதிகமாக இருந்தால் மகசூல் குறையும். ஆண் பூ பூத்தவுடன் பெண் பூ 2 நாள்களில் பூத்தால் மணி நன்றாக பிடிக்கும். வெப்பம் அதிகமாகும்போது பூக்கள் பூப்பதில் இடைவெளி ஏற்பட்டு மணிப் பிடிக்காமல் போய்விடும். எனவே, சீதோஷ்ண நிலையை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றவாறு மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் இறங்க வேண்டும்.

மாணவர்களுக்குச் செயல்விளக்கம்
மாணவர்களுக்குச் செயல்விளக்கம்

மக்காச்சோளத்தின் எதிரி படைப்புழு

மக்காச்சோள சாகுபடியைப் பொறுத்தவரை, படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது சவாலானது. மக்காச்சோளம் விதைப்புச் செய்வதற்கு முன்பு... அடியுரமாக ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் எருவுடன் 250 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து போட வேண்டும். அவ்வாறு செய்தால் படைப்புழு தாக்குதல்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். மேலும், தோட்டத்தின் வரப்பு ஓரங்களில்... எள்ளு, தட்டைப்பயறு, சூரியகாந்தி செடிகளையும், கோ.எஃப்.எஸ் ரகத் தீவன சோளத்தையும் வளர்ப்பதன் மூலம், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம்.

ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி
ஆராய்ச்சி நிலையத்தில் மக்காச்சோள சாகுபடி

பயிரிடும் முறை

மக்காச்சோளம் சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள நிலம் மிகவும் அவசியம். எல்லா வகையான மண்ணிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். ஆடி, புரட்டாசி, தை பட்டங்கள் விதைப்புக்கு ஏற்ற காலம். ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. 4 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். மண்ணின் தேவைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். களைக்கட்டுப்பாடு மிகவும் முக்கியும்’’ என்கின்றனர் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

40,000 ரூபாய் லாபம்!

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜிடம் பேசினோம். ‘‘கடந்த 5 வருஷமா மக்காச்சோளம் சாகுபடி செஞ்சு வெற்றிகரமா மகசூல் எடுத்துக்கிட்டு இருக்கேன். இதுக்கு எங்க பகுதியில உள்ள மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்தோட பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம். இங்கதான் விதைகள் வாங்குறேன். இங்கவுள்ள விஞ்ஞானிகள் சொல்லிக் கொடுத்த தொழிநுட்பங்களைக் கடைப்பிடிச்சுதான் சாகுபடி செய்றேன். ஏதாவது பூச்சி, நோய்த்தாக்குதல்கள் தென்பட்டா, உடனடியா இங்கவுள்ள விஞ்ஞானிகளுக்குத் தெரியப்படுத்திடுவேன். அதைக் கட்டுப்படுத்த உடனடியா வழிமுறைகளைச் சொல்லிடுவாங்க.

மக்காச்சோளச் சாகுபடியில, எனக்கு ஏக்கருக்கு சராசரியா 30 மூட்டை (100 கிலோ) மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இப்ப ஒரு மூட்டைக்கு 2,550 ரூபாய் விலை கிடைக்குது. எல்லா செலவும் போக, ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 40,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என மகிழ்ச்சியாக சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, மோகன்ராஜ், செல்போன்: 63797 97510