Published:Updated:

இலவச மரக்கன்றுகள், மாடித்தோட்டங்களுக்கு பரிசு!அசத்தும் வத்தலக்குண்டு பேரூராட்சி!

சுற்றுச்சூழல்

பிரீமியம் ஸ்டோரி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், ஒரு காலத்தில் வெற்றிலை விவசாயம் வெகு பிரபலம். இங்கு விளைவிக்கப்படும் காரம் நிறைந்த கிராம்பு, சிறுமணி ஆகிய வெற்றிலை ரகங்களும், சுவை மிகுந்த நாட்டு வெற்றிலை வகையும் மிகவும் பிரபலம். ஆனால், காலப்போக்கில் வெற்றிலை விவசாயம் மறைந்துபோனது. இதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி.

பாலசுப்பிரமணி
பாலசுப்பிரமணி


‘‘வெற்றிலைக் குண்டு என்ற பெயரே மருவி வத்தலக்குண்டுனு ஆகிடுச்சுனு சொல்வாங்க. அந்தளவுக்கு வெற்றிலைக்குப் பெயர்போன ஊர். இங்க விளையுற வெற்றிலையில நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்னு சொல்வாங்க. அந்த வெற்றிலையெல்லாம் மறைஞ்சுபோச்சு. அதை மீட்டெடுக்கும் முயற்சியை எங்க அளவுல தொடங்கியிருக்கோம். பேரூராட்சி சார்பா அனைத்துக் குடியிருப்பு வாசிகளுக்கும் வெற்றிலைக் கொடியை கொடுத்துட்டு வர்றோம். முதல் கட்டமா 400 செடிகளை பதியம் போட்டு கொடுத்திருக்கோம். மறுபடியும் பதியம் போட்டிருக்கோம். வத்தலக்குண்டு பேரூராட்சியில 30,000 குடியிருப்பு கள் இருக்குது. அத்தனை குடியிருப்பு களுக்கும் தூய்மைப் பணியாளர்கள் மூலமா வெற்றிலைக் கொடியை கொடுக்கப்போறோம்.

நாற்றுப் பண்ணை
நாற்றுப் பண்ணை
வெற்றிலை நாற்றுகள்
வெற்றிலை நாற்றுகள்

பேரூராட்சியின் சார்பில் நாற்றுப்பண்ணை

அரசு விழாக்கள்ல பேரூராட்சி கள் சார்பா மரக்கன்றுகளை நடணும்னு 2019-ம் வருஷம் அரசு உத்தரவு போட்டிருக்குது. அதையடுத்து மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி பள்ளிகள், அரசு கட்டட வளாகங்கள், பொது இடங்கள்ல நடவு பண்ணிட்டு வந்தோம். ஒரு கன்றோட விலை 10 முதல் 15 ரூபாய். இதுக்குன்னு தனியா நிதி எதுவும் ஒதுக்க முடியாத நிலையில, பேரூராட்சி சார்பா நாங்களே ஒரு நாற்றுப் பண்ணை தொடங்கிட்டோம்.

வீட்டுத்தோட்டங்கள், வீட்டு வாசல்கள்ல மரக்கன்றுகளை வளர்க்க விரும்புறவங்களுக்கும் இலவசமா கன்றுகளைக் கொடுத்துட்டு இருக்கோம்.


இதுக்காகப் பேரூராட்சியில இருக்க தூய்மைப் பணியாளர்கள் மூலம் தினசரி சந்தையில வீணாகுற காய்கறிக் கழிவுகளைச் சேகரிச்சு தரம் பிரிச்சோம். காய்கறிகள்ல விதை எடுக்குறதுக்காக ஒரு பகுதி, பயோ கேஸ் தயாரிக்க ஒரு பகுதினு தனித்தனியா கழிவுகளைக் கையாண்டோம்.

தூய்மைப் பணியாளர்கள்ல விவசாயத்துல ஈடுபாடும், அனுப வமும் கொண்ட 6 பேரை தேர்ந் தெடுத்து நாற்றுப் பண்ணையைப் பராமரிக்குற வேலை கொடுத்தோம். பேரூராட்சி வாகன ஓட்டுநர் கண்ணன் தலைமையில, தூய்மைப் பணியாளர்கள் விதைகளை எடுத்து பதியம் போட்டு, பாக்கெட்கள்ல செடிகளை வளர்க்க ஆரம்பிச்சாங்க.

நாற்றுப்பண்ணை பராமரிப்பு
நாற்றுப்பண்ணை பராமரிப்பு
நாற்றுப்பண்ணையில் அழகுச் செடிகள்
நாற்றுப்பண்ணையில் அழகுச் செடிகள்
இயற்கை உரம்
இயற்கை உரம்


பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல தூய்மைப் பணி யாளர்கள் மூலமா 20,000 மரக் கன்றுகளை நட்டுருக்கோம். வீட்டுத்தோட்டங்கள், வீட்டு வாசல்கள்ல மரக்கன்றுகளை வளர்க்க விரும்புறவங்களுக்கும் இலவசமா கன்றுகளைக் கொடுத்துட்டு இருக்கோம். பல மாவட்டங்கள்ல இருந்து கேக்குற தொண்டு நிறுவனங்களுக்கும் இலவசமா மரக்கன்றுகளைக் கொடுத்துட்டு வர்றோம்’’ என்றவர், வீட்டுத்தோட்ட விவசாயிகளுக்கு பரிசு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாற்று உற்பத்தி
நாற்று உற்பத்தி
காய்கறிக் கழிவுகளைத் தரம்பிரித்தல்
காய்கறிக் கழிவுகளைத் தரம்பிரித்தல்

5 பேருக்குப் பரிசு

“வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புற மக்களுக்கு இலவசமா விதைகள், செடிகள், மரக்கன்றுகளைக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதோட, தேவையான இயற்கை உரம், மண்புழு உரத்தை நாங்களே தயாரிச்சு இலவசமாக கொடுக்குறோம். மாடித்தோட்டம் அமைக்குறதை ஊக்குவிக்கும் விதமா, சிறந்த மாடித்தோட்டத்துக்கு 5 பரிசுகளை அறிவிச்சிருக்கோம். முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 4,000 ரூபாய், மூன்றாம் பரிசு 3,000 ரூபாய், நான்காம் பரிசு 2,000 ரூபாய், ஐந்தாம் பரிசு 1,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை பரிசாகக் கொடுக்கப் போறோம். ஒவ்வொருத்தரும் வீட்டை அழகாகவும் தூய்மையாகவும் வெச்சுகிட்டா போதும். தெருவில் குப்பை சேராது. அதுக்காகத்தான் பேரூராட்சி சார்பா இந்தப் பணிகளைத் தொடர்ந்து செஞ்சுகிட்டு வர்றோம்’’ என்றார்.



தொடர்புக்கு, துப்புரவு ஆய்வாளர்,

வத்தலக்குண்டு பேரூராட்சி,

செல்போன்: 84897 52352

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு