Published:Updated:

25 சதவிகித மானியம்; குறைவான பராமரிப்பு; நிறைவான லாபம்! தமிழ்நாட்டிலும் அஸ்வகந்தா சாகுபடி செய்யலாம்!

அஸ்வகந்தா சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
அஸ்வகந்தா சாகுபடி

அழைக்கும் ஆராய்ச்சி மையம்

25 சதவிகித மானியம்; குறைவான பராமரிப்பு; நிறைவான லாபம்! தமிழ்நாட்டிலும் அஸ்வகந்தா சாகுபடி செய்யலாம்!

அழைக்கும் ஆராய்ச்சி மையம்

Published:Updated:
அஸ்வகந்தா சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
அஸ்வகந்தா சாகுபடி

மூலிகை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையம் செயல் பட்டு வந்தது. தற்போது வணிக வேளாண்மை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. இந்நிறுவனம் அஸ்வகந்தா மூலிகை, மஞ்சள், மிளகாய், ஆமணக்கு சாகுபடி மற்றும் வணிகம் தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அஸ்வகந்தா மூலிகையைச் சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதற்கு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது இந்நிறுவனம்.

ஆராய்ச்சி நிலையம்
ஆராய்ச்சி நிலையம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்த நிறுவனத்தின் தலைரும் விஞ்ஞானியுமான முனைவர் மணிவேல், ‘‘இந்தியாவில் பல வகையான மூலிகைப் பயிர்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது அஸ்வகந்தா. இதில் 18 வகையான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இது ‘அமுக்குரான் கிழங்கு’ எனவும் அழைக்கப்படுகிறது. நூறு ஆண்டு களுக்கும் மேலாக வட இந்தியாவில் அஸ்வகந்தா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

‘சைனீஸ் ஜின்ஸெங்’ என்ற பெயரில் சீனாவில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த அஸ்வகந்தாவுக்கு உலகச் சந்தையில் வரவேற்பு உள்ளது. மிகவும் தரமாக சக்தி வாய்ந்த அஸ்வகந்தா இந்தியாவில்தான் விளைகிறது. ஆனால், நம் நாட்டில் பெரிய அளவில் சாகுபடி செய்யப்படுவது இல்லை.

அஸ்வகந்தா செடி
அஸ்வகந்தா செடி

மனித உடலில் ஏற்படும் 18 விதமான பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது அஸ்வகந்தா. இதில் 36 விதமான வேதிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் 18 வேதிப்பொருள்கள் மருத்துவக்குணம் நிறைந்தவை. இத்தகைய அரிய மூலிகைப் பயிரை தமிழக விவசாயிகளுக்கு அறிமுகச் செய்யும் பணியைக் கடந்த ஆண்டு எங்கள் நிறுவனம் தொடங்கியது. வட இந்தியாவில் மட்டுமே பயிரிடப்பட்டு வரும் அஸ்வகந்தா, தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலையிலும் வெற்றிகரமாக வளரும் என்பதை ஆய்வுகள் மூலம் உறுதி செய்த பின்னர், முதற்கட்டமாக 100 ஏக்கர் அளவில் பயிரிட்டோம்

விஷக்கடி முதல் விந்தணு உற்பத்தி வரை

விஷக்கடி, தோல்வியாதி, விந்தணு உற்பத்தி, மாதவிடாய் பிரச்னைகள், கேன்சர் உள்ளிட்ட வைக்கு நிவாரணியாகத் திகழ்கிறது. ஆயுர் வேதம், சித்தா, யுனானி மருந்துகள், ஆலோபதி மருந்துகள் அனைத்திலும் அஸ்வகந்தா ஏதோ ஒரு விகிதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்வகந்தா வேர்
அஸ்வகந்தா வேர்

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் அஸ்வகந்தாவுக்கு உண்டு. இதன் காரணமாக, கொரோனா காலத்தில் அஸ்வகந்தாவின் தேவை உலக அளவில் அதிகரித்தது. இந்நிலையில்தான் வட இந்தியாவைப்போல் தமிழகத்திலும் அஸ்வகந்தா சாகுபடியை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.

எந்தப் பருவத்தில் சாகுபடி செய்யலாம்?

இதைச் சாகுபடி செய்வதற்கான பருவ காலம், வட இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் மாறுபடும். வடநாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பயிரிட தொடங்குவார்கள், தமிழகத்தில் மழைக்காலம் முடிவுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கினால் வெற்றிகரமாக விளையும். குறிப்பாக வயலில் தண்ணீர் தேங்காத நிலமாக இருக்கு வேண்டும் அவ்வளவுதான்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா

இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியம்

இயற்கை வழி விவசாயம் செய்பவர்கள் அஸ்வகந்தா சாகுபடி மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஏனென்றால், அஸ்வகந்தா சாகுபடிக்கு ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே ரசாயன உரம் போட்டு விவசாயம் செய்திருக்கும் நிலத்தைக்கூட இதற்குத் தேர்வு செய்யக் கூடாது. பெரும் பாலும் மருத்துவப் பயன்பாட்டுக்கு அஸ்வகந்தா வேர் பயன்படுத்தப்படுவதால், ஆய்வுக்கு உட்படுத்திதான் கொள்முதல் செய்வார்கள். அதனால் ரசாயன உரம் மண்ணில் கலந்திருந்து அது வேருக்கு சென்றால், ஆய்வில் தெரிந்துவிடும். எனவே ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத நிலத்திலேயே அஸ்வகந்தா வைப் பயிரிட வேண்டும்.

அஸ்வகந்தா 5 மாத கால பயிர். நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தில் பயிர் செய்ய வேண்டும். பகலில் வெப்பம் அதிக மாகவும், இரவில் வெப்பம் குறைவாகவும் இருந்தால் பயிர் நன்றாக வளரும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடையே 5 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்தால், ஆணிவேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வரிசை முறையில் நடவு செய்தால் களையெடுக்க எளிதாக இருக்கும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் எள்ளு, தெளிப்பதுபோல் அதிக அளவு விதையைத் தூவிவிடுகின்றனர்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா

ஏக்கருக்கு 3 கிலோ விதையே போதுமானது. நாட்டுமாட்டுக் கோமியத்தில் விதையை ஊறவைத்து விதை நடவு செய்தால் நல்லது. அடியுரமாக ஆட்டு, மாட்டு எரு போடலாம். ரசாயன உரங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

விதைப்பு செய்த பிறகு தரையில் ஈரம் இருக்கும்படியாக 20 நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாள் களையெடுக்க வேண்டும். அதன்பிறகு வாரத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாளுக்கு ஒரு முறை என நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகளில் புள்ளி வண்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பஞ்சகவ்யா, மீன் அமிலம் தெளித்து அதைக் கட்டுப்படுத்தலாம். களையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து 90 முதல் 150 நாள்களில் வேர் நன்றாக வளர்ந்திருக்கும். செடியைப் பிடுங்கி, வேரை ஓடித்துப்பார்க்க வேண்டும். நன்றாக ஒடிந்தால் அறுவடையைத் தொடங்கிவிடலாம்.

அறுவடை இரண்டு விதமான முறையில் செய்யலாம் ஒன்று செடியில் உள்ள இலை, பூ, பழங்களை உருவி எடுத்துவிட்டு, பிறகு செடியை வேருடன் பறிக்கலாம். மற்றொரு முறை அப்படியே வேருடன் பறித்து வேர்களை நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

அஸ்வகந்தா சாகுபடி வயல்
அஸ்வகந்தா சாகுபடி வயல்

மானாவாரியாகவும் பயிரிடலாம்

வட இந்திய மாநிலங்களில் மானாவாரி பயிராக அஸ்வகந்தா பயிரிடப்படுகிறது. அதேபோல தமிழகத்திலும் மானாவாரியாகப் பயிரிடலாம். ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். இறவைப் பாசனத்தில் முறை யாகத் தண்ணீர் பாய்ச்சி பராமரித்தால் 500 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். வேர்களின் தரத்துக்கு ஏற்ப, கிலோவுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை விலை கிடைக்கும். 15,000 - 30,000 ரூபாய் வரை செலவாகும். 5 மாதங்களில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

மதிப்புக்கூட்டுதல்

வேரை அரைத்து பவுடராகவோ, மாத்திரையாகவோ மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், கிலோவுக்கு 600 ரூபாய் விலை கிடைக்கும். இப்போது சந்தைகளில் அஸ்வகந்தா 100 கிராம் 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.

விதைகள்
விதைகள்

மறுசாகுபடிக்கான விதை

விதைப்பு செய்த 5-ம் மாதம் அஸ்வகந்தா செடிகளில் நிறைய பழங்கள் பழுத்திருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 20 - 40 விதைகள் இருக்கும். பழங்களைப் பறித்து வெயிலில் காய வைத்து, விதைகளைப் பிரித்தெடுத்து, அவற்றில் தரமான விதைகளைத் தேர்ந் தெடுத்து, மறுசாகுபடிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எச்சரிக்கை

வடிகால் வசதி இல்லாத பகுதியிலோ, அதிக நீர்ப்பிடிப்புள்ள நிலத்திலோ அஸ்வகந்தா பயிரிட்டால் செடி நன்றாக வளரும். ஆனால், கீழே வேர் நன்றாக வளராது. மத்திய பிரதேசத்தில் அஸ்வகந்தா செடி 15 செ.மீ முதல் 1 அடி வரைதான் இருக்கும். ஆனால், வேர் கீழே 1 அடிக்கு இருக்கும்.

முனைவர் மணிவேல்
முனைவர் மணிவேல்

ஒரு விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இதைப் பயிரிடுவதைவிட, கூட்டாக ஒன்று சேர்ந்து சாகுபடி செய்வது நல்லது. இதற்கு மத்திய அரசின் மானியம் கிடைக்கிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் ஏக்கருக்கு 25 சதவிகித மானியம் கிடைக்கும். அஸ்வகந்தாவில் வேர் பகுதிதான் முக்கியம், இருப்பினும், தண்டு இலைப்பகுதியிலும் மருத்துவக் குணம் இருப்பதால் அதையும் விற்பனை செய்ய முடியும். விதையை மாட்டுத்தீவனமாகக் கொடுத்தால் மாடுகள் நிறைய பால் கொடுக்கும். அஸ்வகந்தா மூலிகையைப் பயிரிட்டு விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டலாம். இதற்கான வழிகாட்டல் வழங்க எங்கள் மையம் காத்திருக்கிறது’’ என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்புக்கு: முனைவர் மணிவேல், செல்போன்: 94295 43209.

ஏக்கருக்கு 45,000 ரூபாய்

திண்டுக்கல் அருகே பூதிபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருபவர் சுகுமார். இவர் தற்போது அஸ்வகந்தா சாகுபடி செய்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகுமார், ‘‘நான் எம்.டெக் படிச்சிருக்கேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஈடுபாடு அதிகம். 20 ஏக்கர்ல ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்கி இருக்கேன். இங்க தென்னை, வாழை, பழவகைகள், காய்கறிகள் சாகுபடி செய்றேன். மாடு, கோழி எல்லாம் வளர்த்துக்கிட்டு இருக்கேன். என்னோட நண்பர் மூலமாதான் அஸ்வகந்தா மூலிகை சாகுபடியைப் பத்தி கேள்விப்பட்டேன்.

சுகுமார்
சுகுமார்

வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மணிவேலை சந்திச்சு ஆலோசனை கேட்டு, 2 ஏக்கர்ல அஸ்வகந்தா பயிரிட்டேன். இதுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. தண்ணியும் அதிகம் தேவைப்படாது. எனக்கு ஏக்கருக்கு 250 கிலோ வேர் மகசூல் கிடைச்சது. கிலோவுக்கு 300 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு போக ஏக்கருக்கு 45,000 ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு. 2 ஏக்கர்ல 90,000 ரூபாய் லாபம். போதுமான இடைவெளி விட்டு விதைப்பு செஞ்சு, கூடுதல் கவனம் செலுத்தி முறையா பராமரிச்சிருந்தா இன்னும் கூடுதல் லாபம் கிடைச்சிருக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு, சுகுமார், செல்போன்: 94430 33280