Published:Updated:

“ஆட்சியாளர்களே... எப்போது பாடம் கற்பீர்கள்?”

வேலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலூர்

வெள்ளத்தில் மூழ்கிய 2,270 ஏக்கர் பயிர்... கண்ணீரில் உழலும் வேலூர் விவசாயிகள்!

‘நிவர் புயல் கடுமையாகத் தாக்கும்’ என்று கணிக்கப்பட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளிலிருந்து தப்பிவிட, எதிர்பாராதவிதமாகப் பெரும் சேதங்களைச் சந்தித்திருக்கிறது வேலூர் மாவட்டம். குறிப்பாக விவசாயிகளுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் பெருமளவில் தண்ணீரில் மூழ்கியதால், கதிகலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். சுமார் 2,270 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கின்றன. ‘‘நீர்வரத்து கால்வாய்களையும் ஏரிகளையும் தூர்வாராமல்விட்டதுதான் இவ்வளவு பெரிய பாதிப்புக்குக் காரணம்’’ என்று ஆட்சியாளர்களை நோக்கிக் கோபத்தில் கடுகடுக்கிறார்கள் விவசாயிகள்!

மிரட்டும் வெள்ளம்!

வேலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு பாலாற்றிலும், அதன் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப் பதாலும், அவற்றில் அடைப்புகள் ஏற்பட்டிருப்ப தாலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்திருக் கிறது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக, அமிர்தி வனப்பகுதியிலுள்ள கொட்டாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்பரித்துக் கொட்டுகிறது. விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அருவிக்கு முன்பாக கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில், வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அருவியிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளம் மேல் அரசம்பட்டு, சிங்கிரி கோயில், கத்தாழம்பட்டு வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. வரப்புகள் ஆக்கிரமிப்பால், வழிநெடுக உள்ள கிராமங்களில் வெள்ளநீர் புகுந்திருக்கிறது. விளைநிலங்களிலும் முட்டியளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல், குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா அணையும் நிரம்பி, கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடுகிறது. ஆற்றங்கரையோரமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு வாங்கிய, வீட்டிலுள்ள பல்வேறு விலையுயர்ந்த பொருள்கள் பாழாவதைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மடிந்த உயிர்கள்... பாழான பயிர்கள்

வேலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பின் மதிப்பு, 26,70,51,304 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 242 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடிழந்த ஏழைக் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக மொத்தம் 11,17,700 ரூபாய் வழங்கியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதேபோல், ஆடு, மாடு, கோழிகள், பறவை இனங்கள் உட்பட மொத்தம் 6,355 உயிர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்திருக்கின்றன. இவ்வளவு பாதிப்புகளுக்கு மத்தியில், வேலூரைப் பொறுத்தவரை மனித உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல். கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 8,56,200 ரூபாய் நிவாரணமாக வழங்கப் பட்டிருக்கிறது.

பாதிப்பின் உச்சமாக சுமார் 2,270 ஏக்கர் பரப்பளவில் பலவிதமான பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. பலமாக வீசிய காற்றுக்கு 641 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த 916 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியிருக்கின்றன. 51 ஏக்கர் பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 172 ஏக்கர் நிலக்கடலை, 21 ஏக்கர் மக்காச்சோளம், 27 ஏக்கர் துவரை, 19 ஏக்கர் உளுந்து, அரை ஏக்கர் மொச்சை, 121 ஏக்கர் கரும்பு, 24 ஏக்கர் கத்திரி, 247 ஏக்கர் கீரை வகைகள், 6 ஏக்கர் தக்காளி, 7 ஏக்கர் எலுமிச்சை, 1.72 ஏக்கர் கொய்யா, 1.23 ஏக்கர் மாமரம், 3.70 ஏக்கர் சாமந்தி, 2.47 ஏக்கர் கேழ்வரகு, 4.44 ஏக்கர் மஞ்சள் உள்ளிட்ட மொத்தம் 2,270 ஏக்கர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர் பாதிப்பு மட்டுமே 1,24,49,902 ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது மாவட்ட நிர்வாகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோபமும் எதிர்பார்ப்பும்

நிவர், பொதுச்சொத்துகளையும் விட்டு வைக்கவில்லை. 25,26,28,000 ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துகள் மாவட்டம் முழுக்கச் சேதமடைந்துள்ளன. 423 மின்கம்பங்கள் சாய்ந் துள்ளன. 20 டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகியிருக் கின்றன. 162 பெரிய மரங்கள் வேருடன் முறிந்து விழுந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சாலைகள், தரைப்பாலங்கள், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் என ஏராளமான சொத்துகள் நாசமாகியுள்ளன.

“ஆட்சியாளர்களே... எப்போது பாடம் கற்பீர்கள்?”

வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகள் சேதமடைந்து வரும் சூழலில், இதற்கு நேரெதிராக நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாராத காரணத்தால், வேலூர் மாநகராட்சியின் நீர் ஆதாரமான சதுப்பேரி, ஓட்டேரி ஏரிகளுக்கு இதுவரை தண்ணீர் வராத கொடுமையும் நிலவுகிறது. ‘‘மழை வெள்ளக் காலங்களில் பாலாற்றுத் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. புதிய தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்; நீர்வரத்துக் கால்வாய்களின் அடைப்பையும் ஆக்கிரமிப்பையும் அகற்றி ஏரிகளில் தண்ணீரைச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஆட்சியாளர்களுக்கு வருவதில்லை... எத்தனை புயல்கள், எத்தனை வெள்ளங்களைப் பார்த்தாகிவிட்டது. ஆட்சியாளர்களே... எப்போது பாடம் கற்பீர்கள்?’’ என்று கொதிக்கிறார்கள் வேலூர் மக்கள்.

புயல் வெள்ள பாதிப்புகள் குறித்த மாவட்ட நிர்வாகத்தின் கணக்குகளைத் தாண்டியும் பாதிப்புகள் இருக்கலாம். அடுத்தடுத்து புயல் அபாயம் குறித்த எச்சரிக்கைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நடந்தவற்றுக்கு நிவாரணமும் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும் என்பது வேலூர் மக்களின் எதிர்பார்ப்பு!