Published:Updated:

`பணத்தை சாப்பிட முடியாது; விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்!’ - நாடாளுமன்றக் குழுவிடம் கொதித்த விவசாயிகள்

நாடாளுமன்ற நிலைக்குழு
நாடாளுமன்ற நிலைக்குழு

``உரத்துக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறையுங்கள். உங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தாலும், அதைச் சாப்பிட முடியாது. விவசாயம் செய்தால்தான் சோறு கிடைக்கும்’’ என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், விவசாயிகள் வருத்தமாகக் கூறினர்.

ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி, வேலூர் ரங்காபுரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, நிலைக்குழு தலைவரான கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.

நிலைக்குழு தலைவரான கனிமொழி எம்.பி-யுடன் உறுப்பினர்கள்
நிலைக்குழு தலைவரான கனிமொழி எம்.பி-யுடன் உறுப்பினர்கள்

நிலைக்குழு உறுப்பினர்களான வசந்தகுமார், கதிர் ஆனந்த் உட்பட 9 எம்.பி-க்களும், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, ``இது, அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி என்பதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கையை ஒளிவுமறைவின்றி தெரிவிக்கலாம்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து, பேசிய விவசாயிகள் பலர், ``உரங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அதனால், பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. உரத்துக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை.

கலந்துரையாடும் விவசாயிகள்
கலந்துரையாடும் விவசாயிகள்

அதிகாரிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை `அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன்’ என்று பேசிவிட்டு செல்கிறார்களே தவிர அவர்கள் மீண்டும் வருவதில்லை. விவசாயம் தரைமட்டமாகிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகளில் விவசாயி, சோறு சாப்பிட முடியாது.

உங்களிடம் ரூ.100 கோடி பணம் இருந்தாலும், அதை உங்களால் உண்ண முடியாது. விவசாயம் செய்தால்தான் சோறு கிடைக்கும். விவசாயத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். நிலைக்குழுவில் வடமாநில உறுப்பினர்களும் இருந்ததால், அவர்களிடமும் விவசாயி ஒருவர் இந்தியில் பேசி கோரிக்கைகளை முன்வைத்தார்.

நிலைக் குழு தலைவரான கனிமொழி எம்.பி-யுடன் உறுப்பினர்கள்
நிலைக் குழு தலைவரான கனிமொழி எம்.பி-யுடன் உறுப்பினர்கள்

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ``இங்குள்ள விவசாயிகளின் பிரச்னைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அறிக்கை தயார்செய்து மத்திய அரசிடம் கொடுப்போம்’’ என்றார்.

பின் செல்ல