Published:Updated:

ஒரு காடு காணாமல் போன கதை... மீட்டெடுத்த இளைஞரின் பசுமை பயணம்!

ஶ்ரீகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாந்த்

காடு

ஒரு காடு காணாமல் போன கதை... மீட்டெடுத்த இளைஞரின் பசுமை பயணம்!

காடு

Published:Updated:
ஶ்ரீகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாந்த்

காடும் மலையும் இயற்கையின் கொடை. இதைப் பாதுகாப்பது மனிதனின் தலையாயக் கடமை. இதைச் செய்யத் தவறினால், மனிதகுலம் கடும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட சிலர்தான் இதில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் தொண்டாற்றுகிறார்கள். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பல ஏக்கரில் பரந்து விரிந்து காட்சி அளித்து, ஒரு கிராமத்தையே வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்த சமூகநல காடு ஒன்று காலப் போக்கில் காணாமல்போன கதையும், அதை மீட்டெடுக்க, ஓர் இளைஞர் நடத்திய அர்ப்பணிப்பு மிக்கப் பயணமும் நம்மை நெகிழ வைக்கிறது. தனி ஒருவராக இந்த இளைஞர் செய்த பசுமை சாதனையைப் பாராட்டி, 75-வது சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவருக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கி பெருமைப் படுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் காந்த். இவர் தான் அந்தக் காணாமல்போன சமூகநல காடு இருந்த இடத்தை மீட்டெடுத்து, உயிர்ப்பித்துக் கொண்டிருப்பவர். மணல் மாஃபியாக்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆற்றிய எதிர் வினைகளுக்குக் கொஞ்சமும் அஞ்சாமல், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, மீண்டும் பசுமைப் படர்ந்த காட்டை உருவாக்கியிருக்கிறார். இங்கு ஏராளமான பறவைகள் மறுபயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

மீட்டெடுக்கப்பட்ட காடு
மீட்டெடுக்கப்பட்ட காடு

இவருடைய சாதனையை முழுமையாக அறிந்துகொள்ள... 39 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்கிறார்கள் குடியாத்தம் அருகே அமைந்துள்ள உள்ளி கிராம மக்கள். ‘‘பாலாற்று கரையிலதான், எங்களோட கிராமம் அமைஞ்சிருக்கு. நல்ல விளைச்சல் தரக்கூடிய பூமி இது. நெல்லு, கரும்பு, வாழைனு எல்லாப் பயிர்களுமே இங்க நல்லா செழிப்பா விளையும். ஆனா, இதுல என்ன ஒரு வேதனையான விஷயம்னா, ஆத்துல வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் ஊருக்குள்ளே தண்ணி புகுந்துடும். புள்ள குட்டிங்களைத் தூக்கிக் கிட்டு வீட்டுலருந்து தள்ளிப்போய் மேடான பகுதியில தங்கியிருப்போம். தண்ணி முழுசா வடிஞ்ச பின்னாடிதான் வீட்டுக்கு வருவோம். எங்க கஷ்டத்தைப் பார்த்த வனத்துறை அதிகாரி ஒருத்தரு... ஊருக்குள்ள வெள்ளம் வராம தடுக்குறதுக்கும், மணல் அரிப்பை தடுத்து ஆத்தங்கரைய பலப்படுத்தவும், முக்கியமான ஒரு யோசனை சொன்னாரு. அவர் சொன்ன யோசனையாலதான் 1983-ம் வருஷம் உள்ளி பாலாத்தங்கரையில சுமார் 25 ஏக்கர் பரப்பளவுல ‘சமூகக் காட்டை’ உருவாக்குனாங்க.

ஏழெட்டு வருஷத்துலயே அடர்த்தியான காடு உருவாகிடுச்சு. ஆத்துல வெள்ளம் வந்தாலும் ஊருக்குள்ள தண்ணி புகாது. நாங்களும் புள்ள குட்டிங்களோட நிம்மதியா வீட்டுக்குள்ள இருந்தோம். அடுத்த சில வருஷங்கள்லயே மணல் திருடக்கூடிய கும்பல், எங்க ஊரு பாலாத்துல இருந்து மணலை கொள்ளையடிக்க ஆரம்பிச்சது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மரங்களை யும் வெட்டி அழிச்சானுங்க. ஒரு கட்டத்துல ஒட்டுமொத்த காடும் அழிஞ்சிடுச்சு. காடு இருந்த இடத்துல படிப்படியா ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க ஆரம்பிச்சது. இங்க சமூகநலக் காடு இருந்ததுக்கான அடையாளமே இல்ல.

மீட்டெடுக்கப்பட்ட காடு
மீட்டெடுக்கப்பட்ட காடு

‘சிட்டிசன்’ திரைப்படத்துல அத்திப் பட்டிங்கற கிராமம் அரசு ஆவணங்கள்ல இருந்து காணாம போன மாதிரிதான் இங்கேயும் நடந்துச்சு. உள்ளி பாலாற்றாங் கறையில சமூகக் காடு இருந்ததுக்கான குறிப்புகள் அரசு ஆவணங்கள்ல மாய மாகிடுச்சு. இந்தச் சூழல்லதான் எங்க ஊர் ஶ்ரீகாந்த், காட்டை மீட்டெடுக்கும் முயற்சியில இறங்கினாரு. காடு இருந்ததுக்கான ஆதாரங் களைத் தேடி பல இடங்களுக்கு அலைஞ்சாரு. ஒருவழியா வாணியம்பாடி சமூகக் காடுகள் சரகத்துக்கு உட்பட்ட மாதனூர் அலுவலகத் துல இருந்த ஒரு வரைப்படத்துல உள்ளி காட்டுக்கான ஆதாரத்தைக் கண்டு பிடிச்சிட்டார். உடனடியா சட்டபூர்வமான நடவடிக்கைகள்ல இறங்கினார். மறுபடியும் அதே இடத்துல காடு உருவாக்கும் முயற்சியில காந்த் தீவிரமா இறங்கினதுனால, ஆற்று மணல் கொள்ளையர்கள், சமூகக் காடு இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிருந்த வங்க, அவங்களுக்கு ஆதரவா இருந்து ஆதாயம் அடைஞ்சுகிட்டு இருந்த அரசு அதிகாரிகள் எல்லாரும் கூட்டு சேர்ந்துகிட்டு, ஶ்ரீகாந்துக்குக் கொலை மிரட்டல் விடுத்தாங்க. ஆனாலும்கூட, காடு மீட்டெடுப்புல காந்த் உறுதியா இருந்தார்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க மாவட்ட கலெக்டரா இருந்த சண்முகசுந்தரம், ஶ்ரீகாந்த்துக்குப் பாதுகாப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாம, மறுபடியும் இங்க சமூகக் காடு உருவாகுறதுக்கும் உதவிகள் செஞ்சார். ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி விட்ட பின்னாடி, மாவட்ட நிர்வாகத்தோட உதவி யோடு, காந்த் இங்க 7,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். மூணு வருஷத்துலயே இங்கவுள்ள மரங்கள் நல்லா செழிப்பா வளர்ந்து, மறுபடியும் இங்க காடு உருவாகி கிட்டு இருக்கு’’ என்று சொன்ன ஊர்மக்கள், நம்மை அக்காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

மீட்டெடுக்கப்பட்ட காட்டில் ஶ்ரீகாந்த்
மீட்டெடுக்கப்பட்ட காட்டில் ஶ்ரீகாந்த்

ஏராளமான பறவைகள், மகிழ்ச்சி ஆராவாரத்தோடு குரல் எழுப்பின

இக்காட்டை மீட்டெடுத்து, ஊர்மக்களை நெகிழ வைத்த ஶ்ரீகாந்த்தை சந்தித்தோம். ‘‘நான், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.சி.ஏ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன். திரைப்பட இயக்குநர் ஆகணும்ங்கற கனவுல 10 வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்குப் போனேன். 2014-ம் வருஷம் வெளியான ‘நளனும் நந்தினியும்’ படத்துல உதவி இயக்குநரா பணிபுரிஞ்சேன். டைட்டில் கார்டுல என்பேரும் வந்துச்சு. சினிமாவுலயே தொடர்ந்து பயணிச்சேன். இந்தச் சூழல்ல தான், 2017-ம் வருஷம், எங்க குடும்பத்தையே நிலை குலைய செஞ்ச, அந்தத் துயரச் சம்பவம் நடந்துச்சு.

என்னோட அண்ணன் ஶ்ரீதர் வாகன விபத்துல சிக்கி, இறந்து போயிட்டார். குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டிய இடத்துல நான்தான் இருந்தேன். அதனால சினிமா கனவை மூட்டைக்கட்டி வெச்சிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டேன். அப்பாவோடு சேர்ந்து விவசாயத்துல இறங்கினேன். என் அண்ணனோட முதலாம் வருஷ நினைவுநாள்ல ஆயிரம் மரக்கன்று களை வாங்கி எங்க ஊர் சாலையோரங்கள்ல நட்டு பராமரிச்சேன். அது நல்லா வளர ஆரம்பிச்சதும் மரம் வளர்ப்புல ஆர்வம் அதிகமாச்சு.

இந்தச் சூழ்நிலையிலதான் எங்க ஊர் பாலாற்றங்கரையில காணாமல் போன சமூகக் காட்டை மீட்டெடுக்கும் முயற்சியில இறங்கினேன். எனக்கு கடுமையான மிரட்டல்கள் இருந்துச்சு. மாவட்ட ஆட்சியரா இருந்த சண்முகசுந்தரம் இதுல எனக்கு நிறைய உதவிகள் செஞ்சார்.

சமூகக் காடு இருந்த இடத்தை நேர்ல பார்வையிட்டு, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிச்சதோட மட்டுமல்லாம... மரக் கன்றுகள் வாங்கி, நடவு செய்றதுக்காகவும், தண்ணீர் வசதி ஏற்படுத்துறதுக்காகவும் 13 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். புங்கன், ஆலம், வேம்பு, நீர் மருது, இலுப்பை, அத்தி, கொய்யா, நெல்லி உட்பட இன்னும் பல வகைப்பட்ட சுமார் 7,000 மரக்கன்றுகளை இங்க நட்டு வளர்க்க ஆரம்பிச்சேன்.

ஒரு வருஷத்துல ஆள் உயரத்துக்கு நல்லா வளர்ந்துடுச்சு. அதுக்குப் பிறகு, புதுசா ஒரு பிரச்னை கிளம்பிடுச்சு’’ என்று சொல்லி நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார்.

‘‘கலெக்டர் சண்முகசுந்தரம் பணியிட மாறுதல்ல போய்ட்டாரு. மறுபடியும் ஆக்கிரமிப்பாளர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பிச்சாங்க. 2021-ம் வருஷம் கடைசியில திடீர்னு பாலாத்துல பெருவெள்ளம் வந்து, காட்டுக்கு முன்னாடியிருந்த தரைப்பாலம் உடைஞ்சு போச்சு. மத்த ஊர்கள்ல எல்லாம் தண்ணி புகுந்துடுச்சு. இங்க மட்டும் பாதிப்பு ஏற்படல. சமூகக் காடு இருக்குற இடம்னு நீர்வழித் தடம்னு சொல்லி ஆக்கிரமிப் பாளர்கள் புதுசா ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பினாங்க. அரசு அதிகாரிகளோட ஒத்துழைப்போடு, இங்கவுள்ள மரங்களை அப்புறப்படுத்த முயற்சி பண்ணினாங்க.

இது நீர்வழித் தடம் கிடையாது... தமிழ் நாட்டுல பல ஊர்கள்ல ஆத்தங்கரையில சமூகக் காடுகள் உருவாக்கப்பட்டுருக்கு. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனை நேர்ல சந்திச்சு இந்த விளக்கத்தைச் சொன்ன தோடு, இங்க ஏற்கெனவே சமூகக் காடு இருந்ததுக்கான ஆதாரத்தைக் காட்டின பிறகுதான் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்து, காடு காப்பாத்தப்பட்டுருக்கு’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

விருதுபெறும் ஶ்ரீகாந்த்
விருதுபெறும் ஶ்ரீகாந்த்

பசுமை முதன்மையாளர் விருது!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்மாதிரியாகச் செயல்படும் தனிநபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்குத் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்டு வரும் ‘பசுமை முதன்மை யாளர் விருது’ கடந்த ஜூன் மாதம் ஶ்ரீகாந்த்துக்கு வழங்கப்பட்டது.

மேலும், கடந்த 75-வது சுதந்திர தின விழாவில் சிறந்த இளைஞருக்கான விருதையும் 1,00,000 ரூபாய் பரிசையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஶ்ரீகாந்துக்கு வழங்கினார்.

முடிவுக்கு வந்த மணல் கொள்ளை!

``எங்க ஊர் பாலாத்துல மணல் கொள்ளை அதிகமா நடக்கும். ஶ்ரீகாந்த்தோட விடா முயற்சினாலதான் இப்ப அது முற்றிலுமா தடுக்கப்பட்டிருக்கு’’ என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.