Published:Updated:

வறட்சியை வென்று வாகை சூடிய வேப்பங்குளம்..! - சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர் #MyVikatan

சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சிக்கு மத்தியிலும் தனித்து வெற்றி கண்டுள்ளது வேப்பங்குளம் பஞ்சாயத்து.

Veppankulam
Veppankulam

கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள். வரத்துக் கால்வாய்கள் எல்லாம் மணல் மேடுகள். வயல்காடுகள் எல்லாம் வறட்சியின் வெடிப்புகள். இப்படி வறட்சியின் வெறுமைக்குள் தள்ளப்பட்டிருந்தது சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள வேப்பங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஏழு கிராமங்கள். ஆனால், புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல், தெம்மாவயல் ஆகிய அந்த ஏழு கிராமங்களும், கடந்த ஆண்டில் அந்த வெறுமையை விரட்டி, கண்மாய்களைத் தூர்வாரி, வயல்வெளிகளை நெல் விளையும் பூமியாய் சொந்த செலவில் மாற்றிக் காட்டி சாதித்துள்ளனர். இங்கு 600 ஏக்கர் விவசாய நிலங்களுடன் சுமார் 2,000 பேர் வசித்து வருகின்றனர்.

Veppankulam
Veppankulam

சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சிக்கு மத்தியிலும் தனித்து வெற்றி கண்டுள்ளது வேப்பங்குளம் பஞ்சாயத்து. இக்கிராம பஞ்சாயத்தின் கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியை சிவகங்கை கலெக்டரின் சுதந்திர தின விருது வெகுவாய் அலங்கரித்துள்ளது.

இந்தப் பஞ்சாயத்தைச் சேர்ந்த கா.நாச்சியப்பன், அ.காளிதாஸ், சொ.கணேசன், ச.செந்தில், க.மணிகண்டன், சே.முருகதாஸ், சி.சந்திரன், ராம.திருச்செல்வம் மற்றும் ச.கார்வண்ணன் ஆகிய ஒன்பது விவசாயிகளுக்கும் நீர்நிலை மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றியதற்காக சுதந்திரதின விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டி இருக்கிறார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.

விவசாய நிலங்களை மறுபடியும் எப்படி விளைவிப்பது? என்று வேப்பங்குளம் கிராம பஞ்சாயத்து மக்கள் யோசித்தனர். அதற்கு அவர்கள் எடுத்த கூட்டு முயற்சிதான் நீர்நிலைகளைத் தூர்வாருவது. மழை நீரைச் சேகரிப்பது. நீர்நிலை மேலாண்மையைக் கையாளுவது. இதை முறையாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது வேப்பங்குளம். அந்த வெற்றிதான் அவர்களை விருது பெற வைத்திருக்கிறது. அந்த வெற்றிக் கதையை விவரிக்கிறார் - இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்களில் ஒருவரும் வேளாண் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியலாளருமான திருச்செல்வம் ராமு.

farmers who got awards
farmers who got awards
Collector in Independence Day Festival Stage
Collector in Independence Day Festival Stage

“இந்தக் கிராமம் என்னோட தாயார் பிறந்த ஊர். ஒரு காலத்துலே நெல் விவசாயம் பூத்துக் குலுங்கிய செல்வச் சீமை. ஆனால், காலப்போக்கில் வறட்சி இங்கேயும் வாட்டத் தொடங்கியது. வயல்காடுகளில் வேலிக் கருவைகள் முளைக்கத் தொடங்கின. கண்மாய், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் எல்லாம் கருவைக் காடுகளாய் மாறின. நீர்நிலை மேலாண்மை தொழில்நுட்பத்தை ஆந்திர மாநில அரசுடன் இணைந்து இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நான் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. என் தாயாரின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவர்கள் பிறந்த அந்தக் கிராமத்தின் விவசாயத்தை மேம்படுத்த எனக்குத் தெரிந்த நீர்நிலை மேலாண்மையை இங்குள்ள கிராம மக்களின் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு செய்தோம். அதில் இப்போது வெற்றியும் கண்டுள்ளோம்.

வானம் வஞ்சித்துவிட்டது. இயற்கை ஏமாற்றிவிட்டது. மழை அளவு குறைந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், பெய்யும் மழை நீரை நாம் சரியாகச் சேகரித்து வைக்க என்ன செய்திருக்கிறோம்? மழை நீரை சேகரித்து பயன்படுத்த இங்கு கண்மாய்களும் குளங்களும், ஊரணிகளும் ஏராளம் இருக்கின்றன. ஆனால், பராமரிப்பு இல்லாத காரணத்தால்தான் அந்த நீர் நிலைகள் எல்லாம் மேடுகளாய், வெற்று மைதானங்களாய், வேலிக் கருவை காடுகளாய் கிடக்கின்றன. எனவே, நீர் நிலைகளைச் சரிசெய்வதுதான் இதற்குச் சரியான தீர்வு என்று எங்கள் வேப்பங்குளம் பஞ்சாயத்து மக்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்தோம்.

thiruselvam ramu
thiruselvam ramu

இந்தப் பஞ்சாயத்தில் உள்ள ஏழு கிராமங்களிலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு கண்மாய்களும், நான்கு ஊராட்சி ஒன்றியக் கண்மாய்களும், ஒரு குடிநீர் ஊரணியும் உள்ளன. முதலில் கண்மாய்களைச் சீரமைப்பதென முடிவு செய்தோம். அதற்காக ஒரு குழுவை அமைத்தோம். முதலில் இதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்தோம். அதற்கு முதல் கட்டப் பணிகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அந்த ஐந்து லட்ச ரூபாயைக் கிராம மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும், சகநண்பர்களிடமும்தான் நன்கொடையாகப் பெற்றோம். நான்கு மாத காலத்துக்குள் கண்மாய்களைத் தூர்வாரிச் சீரமைத்தோம். கண்மாய்கள் சீரமைக்கப்பட்ட இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், இதை நேரில் பார்வையிட எங்கள் கிராமத்துக்கே வந்து விவசாயிகளை வெகுவாகப் பாராட்டிச் சென்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு மிகக் குறைவுதான். ஆனாலும், கடந்த ஆண்டில் பெய்த குறைந்த அளவு மழையிலேயே எங்கள் கண்மாய்கள் முக்கால்வாசிக்கு மேல் நிரம்பின. தூர் வாரியதன் பலனை உணர்ந்து எங்கள் பஞ்சாயத்தே சந்தோஷத்தில் மிதந்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு, வறண்டு கிடந்த வயல்கள் எல்லாம் நெல் நாற்றுகளால் நிரம்பின. கண்மாயின் மடைகளில் நீர் ஓடத் தொடங்கின. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் எல்லாம் முழுவீச்சுடன் செயல்பட்டன. எங்கள் விவசாயம் செழித்தது. வேளாண் அதிகாரிகளின் துணையுடன் நேர்த்தியான முறையில் ஒற்றை நெல் சாகுபடி உட்பட 250 ஏக்கரில் நல்ல நெல் விளைச்சலைக் கண்டோம். அதாவது, ஐந்து லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலை மேலாண்மையால் வேப்பங்குளம் கிராமத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் உற்பத்தியை ஈட்டித் தந்தது. இது விசாயத்தின்மீது ஒரு புதிய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் எங்கள் கிராமத்துக்குத் தந்துள்ளது.

Veppankulam
Veppankulam

எங்களின் உற்பத்தித் திறனும் வருவாயும் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். இந்த ஆண்டில் இரண்டு கோடி ரூபாய்க்கு விவசாயத்தில் உற்பத்தி செய்வோம். நெல் மட்டுமல்லாமல் எலுமிச்சை, நார்த்தை, தென்னை போன்றவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும். அதற்கான முழு நம்பிக்கையை எங்கள் நீர் நிலை மேலாண்மை பெற்றுத் தந்துள்ளது. உற்பத்திப் பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பதற்கும் ஏற்பாடு செய்ய உள்ளோம். எனவே, எங்கள் விவசாயம் எங்களை நிச்சயம் கைவிடாது என்ற புதிய நம்பிக்கை எங்களுக்கு முளைத்துள்ளது” என்று உற்சாகமுடன் பேசிய திருச்செல்வம் ராமுவிடம் இதில் கிராம மக்களின் பங்களிப்பு பற்றிக் கேட்டதற்கு,

``கிராமத்தின் கூட்டு முயற்சியும் நீர்மேலாண்மையும் மட்டுமே விவசாயத்தை செழிக்க வைக்கும். ஜெயிக்க வைக்கும். அதைத்தான் எங்கள் வேப்பங்குளம் பஞ்சாயத்து கடந்த ஆண்டில் செய்து வெற்றி பெற்றுள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் தயங்காமல் உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டியது ஒவ்வொரு கிராமத்தின் கடமை. நீர்நிலைகளை மேம்படுத்தும்போது முக்கியமான மூன்று பணிகளைச் செய்ய வேண்டும். ஒன்று திட்டமிடுதல். அடுத்து நடைபெறும் பணிகளைக் கண்காணித்தல். மூன்றாவது தூர்வாரும் பணிகள் முடிந்தபின் பெய்யும் முதல் மழையின்போது நீர்வரத்துக் கால்வாய்களில் அடைப்புகள் மற்றும் தடைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தல். இந்த மூன்றையும் கிராம மக்கள் செய்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். இது அரசாங்கத்தின் பணி என்று விவசாயிகள் எட்டி நிற்காமல் இது நம் கிராமத்தின் நமக்கான, நம் வாழ்வாதாரத்தின் மிக முக்கியமான பணி என்பதை ஒவ்வொரு விவசாயியும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மனநிலைக்கு ஒவ்வொரும் வந்துவிட்டாலே கிராம நீர் நிலைகளின் மேம்பாட்டை நாம் சிறப்பாகவும் குறைந்த செலவிலும் செய்து முடிக்க முடியும். அப்போதுதான் மிகச் சரியான முறையில் நீர்நிலைகளைத் தூர் வாரி, அதற்கான நல்ல பலனை நாம் நேரடியாகப் பெற முடியும். இது எங்கள் கிராமத்தின் அனுபவபூர்வமான உண்மையும் வெற்றியும்" என்கிறார்.

Veppankulam
Veppankulam

“உங்களின் இந்தப் பணிகளைப் பார்த்துவிட்டு வேப்பங்குளம் பஞ்சாயத்துக்கு அரசுத் தரப்பிலிருந்து எதுவுமே செய்யவில்லையா?’ எனத் திருச்செல்வம் ராமுவிடம் தொடர்ந்து நாம் கேட்டோம். அதற்கு, "எங்களின் தன்னெழுச்சியான இந்த நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளையும், தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங் போன்ற பெரிய ஆட்களின் வருகையையும், ஊடகங்களின் பாராட்டுகளையும் பார்த்துவிட்டு அரசாங்கம் எங்கள் கிராமத்தை நோக்கி தேடி வந்தது. எங்கள் பணிகளையும் தன்முனைப்பையும் கண்டு அதிகாரிகள் வியந்தார்கள். எங்கள் ஆர்வமும் உழைப்பும் கண்டு அரசாங்கம் எங்கள் மீது திடமான நம்பிக்கை கொண்டது. தட்டிக் கொடுத்தது. ஒத்துழைத்தது. உற்சாகமூட்டியது.

30 லட்சம் ரூபாய் செலவில் கண்மாய்களின் மடைகளை சீரமைக்க உத்தரவிட்டது. ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் நெற்களம் அமைத்துக் கொடுத்துள்ளது. 1,000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நிதி ஒதுக்கி, தற்போது 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 100 சதவிகித மானியத்தில் காளான் வளர்ப்புக்கு 35 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்து இன்னும் இரண்டு கண்மாய்கள் தூர் வாரும் பணி நடைபெறுகிறது. இவை எங்கள் தன்னெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி. இவையெல்லாம் அரசு எங்கள்மீது நம்பிக்கை வைத்துச் செய்த காரியங்கள். எனவே, அரசுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களிடமும் இருக்கிறது. அதைத்தான் எங்கள் வேப்பங்குளம் செய்தது.

Veppankulam
Veppankulam

வரும் காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட இந்த விருது எங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தந்துள்ளது. நீர்நிலை மேலாண்மையிலும், விவசாயத்தில் தகவல் தொழிநுட்பத்தைக் கையாண்டதற்கும் முதல்முறையாக மாவட்ட அளவில் பாராட்டி கலெக்டர் பரிசளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று, இது மாநிலத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்" என்கிறார் விவசாயத்தில் தகவல் தொழில்நுட்பத்தைக் கையாண்டதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சுதந்திர தினவிழாவில் பாராட்டும் பரிசும் பெற்ற திருச்செல்வம் ராமு.

கலெக்டர் கையால் பெற்ற பரிசையும் பாராட்டையும் வேப்பங்குளம் பஞ்சாயத்து எப்படி உணர்கிறது? எனப் பாராட்டுப் பெற்ற ஒன்பது விவசாயிகளில் ஒருவரான கணேசனிடம் கேட்டோம். அதற்கு அவர் உற்சாகமாகப் பதில் அளித்தார்.

"எங்க ஒன்பது பேருக்கும் கிடைச்சிருக்க பாராட்டுங்கிறது இந்த ஒட்டுமொத்த வேப்பங்குளம் பஞ்சாயத்துக்கே கிடைச்ச பெருமை. அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை இந்த மாதிரியான பாராட்டுகள்தான் குறைக்குது. விவசாயத்துறை அதிகாரிகள், நீர் மேலாண் அலுவலகர்கள், உயர் அதிகாரிகள் போன்றவர்களுடன் ஒருவித நல்ல அணுகுமுறையை வெளிப்படுத்தி இருக்கு.

மாவட்ட கலெக்டர் கையால் அதுவும் முக்கியமான சுந்தந்திர தின விழா மேடையிலே வைச்சு பாராட்டி பரிசு கொடுத்தது எங்களைப் போன்ற விவசாயிகளின் உழைப்புக்குக் கிடைச்ச ஒரு பெரிய அங்கீகாரம். நம்ம கிராமத்தை நாமதான் முன் நின்று முன்னேற்றனும் அப்படிங்கிற ஒரு மனநிலையை எங்களுக்கு இன்னும் தீவிரமா உருவாக்கி இருக்கு. எங்க ஒட்டுமொத்த வேப்பங்குளம் பஞ்சாயத்துக்கே ஒரு புதுத் தெம்பு கிடைச்சிருக்கு. எங்களைப் பாதுகாக்கவும் பாராட்டவும் அரசாங்கம் இருக்கு அப்படிங்கிற ஒரு புது நம்பிக்கையை இந்தப் பாராட்டும் பரிசும் தந்திருக்கு'' என மகிழ்ச்சி கொப்பளிக்க பேசுகிறார் கணேசன்.

ganesan
ganesan

நம்பிக்கைதானே விவசாயிகளின் மிகப்பெரிய சொத்து. அந்த நம்பிக்கை இன்னும் பலம் பெற இதுபோன்ற அரசின் பரிகள் என்றென்றும் துணை நிற்கட்டும்.

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/