Published:Updated:

வீதிகளில் கிடந்த நெல் மூட்டைகள்... மழையில் நனைந்த அவலம்!

திறந்தவெளியில் நெல் மூட்டைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
திறந்தவெளியில் நெல் மூட்டைகள்

களத்தில் இறங்கிய விகடன்!

தீர்வு

‘‘இந்த ஆண்டுக் கோடை நெல் சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைச்சிருக்கு. ஏக்கருக்கு 35 மூட்டை மகசூல் ஆகியிருக்கு. ஆனா, இத அரசு நேரடி கொள்முதல் நிலையத்துல விற்பனை செய்றதுதான் பெரும்பாடா இருக்கு.

சாக்குகள் இல்லைனு இழுத்தடிச்சதுனால, ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீதியில வெட்டவெளியில கிடந்து, மழையில் நனைஞ்சிடுச்சி” என மனம் நொந்து பேசுகிறார்கள், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவைச் சேர்ந்த விவசாயிகள். விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டவைதான், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள். ஆனால் யதார்த்தமோ, மிகவும் வேதனையானது. கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல், விரைவாகக் கொள்முதல் செய்யப்படுவதே இல்லை.

சசிகுமார்
சசிகுமார்

நீண்டநாள் இழுத்தடிப்புகளால், பலவிதமான பாதிப்புகளைச் சந்திக்கும் விவசாயிகள், மனம் உடைந்து போகிறார்கள். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா அரித்துவாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ‘அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், அலுவலர்களின் அலட்சியத்தால், நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை’யென வேதனைப்படுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள். ‘வீதிகளில் ஆங்காங்கே இறக்கி வைத்த நெல் மூட்டைகள், கொள்முதலுக்காகக் காத்துக்கிடக்கின்றன.

வீதிகளில் கிடந்த நெல் மூட்டைகள்... மழையில் நனைந்த அவலம்!

சில பகுதிகளில் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டது’ என, செய்வதறியாது தவிக்கிறார்கள். அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், “கோடை நெல் சாகுபடியில் விளைவிக்கப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்றதுக்காகவே, டெல்டா மாவட்டங்கள்ல பல பகுதிகள்ல கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கு. வலங்கைமான் தாலுக்காவுல 12 கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்காங்க. ஆனால் இது எதுலயுமே நெல் கொள்முதல் ஒழுங்காக நடக்கலை. இந்தப் பகுதியில கோடை நெல் சாகுபடியில நல்ல விளைச்சல். ஏக்கருக்கு 35 மூட்டை வீதம் மகசூல் கிடைச்சிருக்கு. ஆனால் எங்களால் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை.

திறந்தவெளியில் நெல் மூட்டைகள்
திறந்தவெளியில் நெல் மூட்டைகள்

காரணம், எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல ஒழுங்காவே நெல் கொள்முதல் நடக்கலை. அரித்துவாரமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு நான் கொண்டு போன நெல் மூட்டைகள், பல நாள்களாக அங்கேயே திறந்தவெளியில கிடந்தது. மழையில் நனைஞ்சி, சில மூட்டைகள் சேதமாயிடுச்சி. எனக்கு மட்டுமல்ல, எங்க பகுதி விவசாயிகள் எல்லாருக்குமே இந்த நிலைமைதான். கோயில், பள்ளிக்கூடம், தார்ச்சாலைனு பொது இடங்கள்ல, திறந்தவெளியில ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கிடக்கு. இதுல மழையில் நனைஞ்சி, சில மூட்டைகள் சேதமானதோடு நெல் முளைக்கவும் ஆரம்பிச்சிடுச்சி. ‘சாக்குகள் இல்லாததால, இப்ப கொள்முதல் செய்ய முடியாது’னு கொள்முதல் நிலைய ஊழியர்கள் சொல்றாங்க. ‘திருவாரூர்ல இருந்து பழைய சாக்குகள் வந்தால்தான் கொள்முதல் செய்வோம்’னு சொல்லிட்டாங்க. முன்கூட்டியே இதைத் தயார் நிலையில வைக்க வேண்டியது, அதிகாரிகளோட கடமைதானே. இதுல என்ன ஒரு வேதனையான விஷயம்னா, ஏற்கெனவே இங்க புதுச் சாக்குகள் ஆயிரக்கணக்குல வந்து கிடக்கு. அது அடுத்த ஆண்டுக்காக வெச்சிருக்காங்களாம். அவசரத்துக்கு அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.

திறந்தவெளியில் நெல் மூட்டைகள்
திறந்தவெளியில் நெல் மூட்டைகள்

பக்கத்து ஊர்கள்ல உள்ள கொள்முதல் நிலையங்களுக்காவது, எங்களோட நெல்லைக் கொண்டு போகலாம்னு விவசாயிகள் முயற்சி பண்ணினோம். அங்கேயும் இதே நிலைமை’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

சேதமான நெல் மூட்டைகள்
சேதமான நெல் மூட்டைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் மணிகண்டனிடம் பேச முயன்றோம். அலைபேசியில் பலமுறை முயன்றும் நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. விவசாயிகளின் வேதனை குறித்து, வாட்ஸ்அப்பிலும், குறுஞ்செய்தியிலும் அவருக்கு நாம் தகவல் அனுப்பியிருந்தோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடமும் விவசாயிகளின் வேதனையை முறையிட, தொடர்ந்து முயற்சி செய்தோம்.

நெல்
நெல்

வெட்டவெளியில் வீதிகளில் கிடந்து நனைந்த நெல் மூட்டைகளின் புகைப்படங்களோடு விகடன் இணையதளத்தில் இதுகுறித்துச் செய்தி வெளியிட்டோம். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மீண்டும் நம்மைத் தொடர்புகொண்ட விவசாயி சசிகுமார், ‘‘பசுமை விகடனுக்கு ரொம்ப நன்றி. எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல மட்டுமே சுமார் எட்டாயிரம் நெல் மூட்டைகள், கொள்முதல் செய்யாமல் கிடந்துச்சு. எங்க ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல, எட்டுக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள்லயும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீதிகள்ல கிடந்துச்சு. விகடனில் செய்தி வெளியானதும், உயரதிகாரிகள் இங்க நேரடியாக வந்து வருத்தம் தெரிவிச்சாங்க. உடனடியாகச் சாக்குகள் வரழைக்கப்பட்டு, இங்க உள்ள எல்லாக் கொள்முதல் நிலையங்கள்லயுமே, இப்ப கொள்முதல் வேகமாக நடந்துக்கிட்டு இருக்கு. விகடன் முயற்சியால்தான் எங்களுக்கு உடனடித் தீர்வு கிடைச்சிருக்கு. ஒருபக்கம் இது எங்களுக்குச் சந்தோஷம்னாலும், இதுமாதிரியான நிர்வாகச் சீர்கேடுகள் எப்போதுதான் முடிவுக்கு வருமோனு ஆதங்கமா இருக்கு. தமிழக அரசு இதுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கணும்” என்றார்.