Published:Updated:

தரமற்ற விதைகளால் சிக்கலில் தவிக்கும் கிராம மக்கள்; காப்பாற்றுமா தமிழக அரசு?

அத்தியூர் திருக்கை விவசாயிகள்
அத்தியூர் திருக்கை விவசாயிகள் ( தே.சிலம்பரசன் )

தனியார் விதை நிறுவனத்தின் விதை நெல்லை வாங்கி நடவு செய்த இந்த கிராமத்து விவசாயிகள் அனைவருக்கும், கருகிப்போன நெல் நடவுகளே தற்போது எஞ்சியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது அத்தியூர் திருக்கை எனும் கிராமம். இங்கு தரமற்ற விதைகளால் பல விவசாயிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

`கடன் பெற்று விவசாயம் செய்து விட்டோம். இனி என்ன செய்யப் போகிறோமோ..?' என்ற வருத்தத்துடன் அமர்ந்திருந்த அந்த கிராமத்து விவசாயிகள் சிலரை சந்தித்தோம். விரக்தியின் விளிம்பில் இருந்த அவர்கள், ஒருவரின் பின் ஒருவராக தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக செந்தில் அதிபன் என்பவர் முதலில் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

``நாங்க அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிங்க. பாதிக்கப்பட்ட 61 விவசாயிகளுமே தொடர்ச்சியாக விவசாயம் பண்றவங்கதான். MPR 606 என்ற தனியார் நிறுவனத்தின் ஹைபிரிட் நெல்லை வாங்கி, சித்திரை பருவத்தில நடவு செஞ்சோம். அன்னியூர், கொசப்பாளையம், கண்டாச்சிபுரம், விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருக்கிற கடைகளில் இருந்துதான் இந்த விதை நெல்லை வாங்கினோம். ஒரு கிலோ விதை நெல் 86 ரூபா. மண் வளத்துக்கு ஏத்தமாதிரி ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 கிலோ வரை வாங்கி நாற்றுவிட்டு நடவு செஞ்சோம். 15 நாள் வரைக்கும் நல்லா வளர்ந்து வந்தது. அதுக்கு அப்புறமா ஒரு அடி உசரத்துக்கு மேலே வளரவே இல்ல.

அழுகிய நெல் நடவுகள்
அழுகிய நெல் நடவுகள்

முனை காயத் தொடங்கிடுச்சி. ஏதோ வளர்ச்சிப் பிரச்னை அப்படினு, வழக்கத்தைவிட உரம்கூட கூடுதலா வாங்கிப் போட்டு பார்த்துட்டோம். எந்தப் பயனும் இல்லை. மேலும், கருகத் தொடங்கிடுச்சி. இந்த விதை நெல்லை வாங்கி நடவு பண்ணிய 61 விவசாயிகளுடைய விளைநிலங்கள் 120 ஏக்கர்லயும் இதே நிலைமைதான். இதே விதை நெல், ஏக்கருக்கு 34 மூட்டை முதல் 42 மூட்டை வரைக்கும் போன முறை விளைஞ்சு நல்ல லாபம் கிடைத்தது. அதே நம்பிக்கையில இந்த முறையும் அதே MPR 606 ரக விதை நெல்லை வாங்கி பயிர் செஞ்சோம். மொத்தமும் கருகிப் போச்சு. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து, சரியாக விதை நெல்லை பக்குவப்படுத்தி கொடுக்கல அந்த தனியார் நிறுவனம். சம்பந்தப்பட்ட அதிகாரிங்ககிட்ட முறையிட்டோம். பாதிப்பை சோதிச்சு பார்த்துட்டு, `விதைதான் பிரச்சனை' அப்படின்னு சொன்னாங்க.

இந்த நெல்ல முழுக்க நடவு செய்து 90 முதல் 95 நாட்கள் ஆகுது. வழக்கமாக பாத்தா 3 அடி வரைக்கும் வளர்ந்து கதிர்கள் செழிப்பாக வச்சி அறுவடைக்கு தயாராக இருந்திருக்கணும். இந்த முறை வளரவும் இல்ல, நெல் கதிரும் வரல. வேர், தண்டு எல்லாம் அழுகிப் போச்சு. கடன் வாங்கி விவசாயம் செஞ்சுட்டு நிறைய விவசாயிங்க கவலைல இருக்காங்க. அரசு, இதை கருத்தில் கொண்டு, எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய தினேஷ் என்ற இளைஞர், ``இங்க இருக்கிற விவசாயிகள் பெரும்பாலும் படிக்காதவங்கதான். எதையும் வாங்கும்போது பெரும்பாலும் ரசீதை கேட்டு வாங்க மாட்டாங்க. இப்போ, `விதைய எங்ககிட்டதான் வாங்குனீங்க என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?'னு கேட்குறாங்க கடைக்காரங்க.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.

அதிகாரிங்க வச்சிருக்கிற லிஸ்ட்ல 25 விவசாயிகள் வரைதான் நிவாரணம் வழங்க ஏற்பாடு பண்ணுற மாதிரி இருக்கு. மத்தவங்க நிலை என்ன ஆகுமோ தெரியல. அரசு எங்கள் மீது பார்வையைக் கொஞ்சம் திருப்பி உரிய நியாயம் வழங்கணும்" என்றார்.

இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநரிடம் பேசினோம்.

``நாங்க அந்த விதையைப் பரிந்துரை செய்வதில்லை. எப்படி அதை வாங்கினார்கள் என்று தெரியவில்லை. யாராவது சொல்வதை வைத்து வாங்கிக் கொண்டு போய் நடுவு செய்துவிடுகிறார்கள் விவசாயிகள். சில சமயம் இது போன்று பிரச்னையாகிவிடுகிறது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் பேசி, யார் மூலம் விதை விற்கப்பட்டதோ அவர்கள் மூலமாகவே நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் இது தொடர்பாக அறிக்கை கேட்டிருக்காங்க. அதை அளிப்பதற்காக விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநரிடம் பேசினோம். ``இந்த விதைக்கு நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவுதான். இந்த ஊரில் மட்டும்தான் இந்த பாதிப்பு இருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் இல்லை. மாதிரி சோதனை முடிவில், `விதைதான் பிரச்சனை' எனச் செல்லவில்லை. நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் மட்டும்தான் என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடமாக இதுவரை நாங்கள் 40 ஏக்கரைத்தான் கண்டறிந்துள்ளோம். கூடுதலாக 5 முதல் 10 சதவீதம் இருக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ஆனால், அவர்கள் சொல்லும் பரப்பளவு இல்லை. சம்பந்தப்பட்ட கடைகள் மூலம், 23 ஏக்கர் பாதிப்பு நிலங்களுக்கு நிவாரணம் வாங்கிக் கொடுத்துள்ளோம். 17 ஏக்கர் நிலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட 40 ஏக்கர்காரர்களும் ரசீது வைத்துள்ளவர்கள். கொசப்பாளையம், கண்டாச்சிபுரத்தில் இயங்கும் 2 சம்பந்தப்பட்ட கடைகளுக்கு விதை விற்பனை செய்யும் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். விதை விநியோகஸ்தருடைய, விதையை விற்பனை செய்ய தடை செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

காவல்துறை அதிகாரி விசாரணை
காவல்துறை அதிகாரி விசாரணை
`விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி; அடுத்து இதைத்தான் எதிர்பார்க்கிறோம்!' - விவசாயிகள்

இதையடுத்து நேற்று மீண்டும் நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய அந்த ஊரைச் சேர்ந்த தினேஷ், ``23 ஏக்கர் நிலத்து உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதை வாங்கிய கடைகளுக்கு சென்று கேட்டனர். அதில் ஒரு கடையாக, அதிக அளவில் விவசாயிகள் விதை வாங்கிய கொசப்பாளையம் கடைக்கு போனோம். கடையின் விதை விற்பனை உரிமத்தை ரத்து பண்ணிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், கடையில் விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் நிவாரணம் கேட்டு அங்கேயே அமர்ந்துவிட்டோம். காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பேசினார். பணம், விழுப்புரம் கடைக்காரர்கள் சிலருக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் கேட்பதால், காவல்துறை அதிகாரி விசாரித்தபோது பணம் எதுவும் எதுவும் தரவில்லை என மறுக்கிறார்கள். எங்களைப் போன்ற சிலர் முன்னின்று இந்தப் பிரச்னையை வழிநடத்துகிறோம். நாங்கள் பணம் வாங்கிவிட்டதாகவும் புரளிகளைக் கிளப்புகிறார்கள். எங்களுக்குள்ளேயே பிரச்னையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இறுதியாக நாங்கள் வேறு வழியின்றி திரும்பி வந்தோம்" என்றார் ஆதங்கத்துடன்.

நெல் நடவு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே அத்தியூர் திருக்கை கிராமத்து விவசாயிகளின் கோரிக்கையாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு