Published:Updated:

`ஆஹா... அழகு!' மழைநீர் சேகரிப்பை பிரபலப்படுத்த விருதுநகரில் வித்தியாசமான முயற்சி!

தர்ப்பூசணி தோற்றத்தில் கிணறு

``ஓலைப் பெட்டி, பொங்கல் பானை, ரெயின்போ மிக்ஸ் போன்ற பல வடிவங்களில் கலைநயத்துடன் வண்ணமயமாகக் கிணறுகளை சீரமைத்துள்ளோம்" - மாவட்ட அதிகாரி.

`ஆஹா... அழகு!' மழைநீர் சேகரிப்பை பிரபலப்படுத்த விருதுநகரில் வித்தியாசமான முயற்சி!

``ஓலைப் பெட்டி, பொங்கல் பானை, ரெயின்போ மிக்ஸ் போன்ற பல வடிவங்களில் கலைநயத்துடன் வண்ணமயமாகக் கிணறுகளை சீரமைத்துள்ளோம்" - மாவட்ட அதிகாரி.

Published:Updated:
தர்ப்பூசணி தோற்றத்தில் கிணறு

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பயன்பாட்டுக்காகவும், ஊர்மக்களின் பொது பயன்பாட்டுக்காகவும் தோண்டப்பட்ட பல கிணறுகள் நிலத்தடிநீர் பற்றாக்குறையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. இந்தக் கிணறுகள், குப்பைகள் கொட்டப்படும் இடங்களாகவும், கழிவுநீர் குழிகளாகவும் பாழடைந்து வந்தன.

பழக்கூடை தோற்றம் | கிணறு
பழக்கூடை தோற்றம் | கிணறு

எனவே, மாவட்டம் முழுவதும் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கிணறுகளைக் கண்டறிந்து புனரமைப்பு செய்து பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் இந்தக் கிணறுகளில் வந்துசேரும் வகையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனடிப்படையில், மாவட்ட ஊரக பணிகள் வளர்ச்சி முகமையின் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் திறந்த கைவிடப்பட்ட நிலையில் உள்ள கிணறுகள் பகுதிவாரியாகக் கணக்கிடப்பட்டு அவற்றை மறுபுனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிணறு வடிவில்
கிணறு வடிவில்

கண்கவர் வண்ணங்களால் பழக்கூடை, தர்ப்பூசணி, ஓலைப்பெட்டி, பொங்கல்பானை போன்ற பல்வேறு வடிவங்களில் கிணறுகள் மிளிரத்தொடங்கியுள்ளன. மக்கள் மனதைக் கவரும் வகையில், கிணறுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலகவதியிடம் பேசினோம்.

பொங்கல் பானை வடிவில் கிணறு
பொங்கல் பானை வடிவில் கிணறு

``மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டன. அவற்றில் முதற்கட்டமாக 100 கிணறுகளை இலக்காகக் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மறுபுனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 10 கிணறுகள்‌ மறுபுனரமைப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கிணற்றின் உள்ளும், கிணற்றைச் சுற்றியும் வளர்ந்துள்ள முட்செடிகள், களைகள் அகற்றப்பட்டு மழைநீர் சேமிப்புக்காக மராமத்து செய்யப்படுகிறது. பின், குண்டுக்கல், ஜல்லிக்கல், மணல் உள்ளிட்டவை பரப்பப்பட்டு கிணற்றைச் சுற்றிலும் பெய்யும் மழைநீர் அமைப்பு வழியே கிணற்றுக்குள் விழும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் ஒரு கிணற்றுக்கு ரூ.65,000 செலவில், குழந்தைகளைக் கவரும் வகையில் திருச்சுழி தாலுகா முத்துராமலிங்கபுரத்தில் பழக்கூடை வடிவிலும், சவ்வாஸ்புரத்தில் தர்ப்பூசணிவடிவிலும் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஓலைப் பெட்டி, பொங்கல் பானை, ரெயின்போ மிக்ஸ் போன்ற பல வடிவங்களில் கலைநயத்துடன் வண்ணமயமாகக் கிணறுகளை சீரமைத்துள்ளோம்.

கூடை வடிவில் கிணறு
கூடை வடிவில் கிணறு

இதற்கு கிடைத்துள்ள வரவேற்பும் எங்களை உற்சாகமடைய வைத்துள்ளது. கிணறுகளை சீரமைப்பு செய்யும் பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்பநிதியும் வழங்குவதாக ஆட்சியர் மேகநாத ரெட்டி கூறியுள்ளார்.

மாவட்டத்தில் முதற்கட்டமாக 157 கிணறுகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 100 கிணறுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அருப்புக்கோட்டை 10, காரியாப்பட்டி 7, நரிக்குடி 3, ராஜபாளையம் 14, சாத்தூர் 13, சிவகாசி 8, ஸ்ரீவில்லிபுத்தூர் 12, திருச்சுழி 6, வெம்பக்கோட்டை 8, விருதுநகர் 12, வத்திராயிருப்பு 7 கிணறுகளில் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கடுத்தபடியாக மேலும் 300 கிணறுகளைத் தேர்வுசெய்து சீரமைக்க உள்ளோம்" என்றார் உற்சாகத்துடன்.