Published:Updated:

கட்டமைப்பு தவறால் வீணாக வெளியேறும் தண்ணீர்! கலங்கும் விவசாயிகள், சீரமைப்பு எப்போது?

ஆனைக்குட்டம்

"கடந்த 2021-ல், அணை சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அறிக்கையில், ஆனைக்குட்டம் அணையின் மதகுகள் பிரச்சினையை சரி செய்யவே முடியாது. அவை முழுவதும் மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டியவை என குறிப்பிட்டுள்ளனர்".

கட்டமைப்பு தவறால் வீணாக வெளியேறும் தண்ணீர்! கலங்கும் விவசாயிகள், சீரமைப்பு எப்போது?

"கடந்த 2021-ல், அணை சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அறிக்கையில், ஆனைக்குட்டம் அணையின் மதகுகள் பிரச்சினையை சரி செய்யவே முடியாது. அவை முழுவதும் மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டியவை என குறிப்பிட்டுள்ளனர்".

Published:Updated:
ஆனைக்குட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவில் அர்ச்சுனா நதியின் குறுக்கே ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. 7.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை, 125.752 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. 491.26 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அணையில் பாசனத்துக்காக 7 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கீழத்திருத்தங்கல், முத்துலிங்காபுரம், வாடி, வடமலாபுரம், ஆனைக்குட்டம், காரிசேரி, அ.மீனாட்சிபுரம், மேல ஆமத்தூர், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னவாடி, துலுக்கப்பட்டி, மணியம்பட்டி மற்றும் வேப்பிலைப்பட்டியை சுற்றியுள்ள 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீர்தேக்கம்
நீர்தேக்கம்

முக்கியமாக விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆனைக்குட்டம் நீர்வழித்தடத்தில்தான் 12 உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆனைக்குட்டம் அணையில் 3 ஷட்டர்களில் ஏற்பட்ட பழுதுக்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு உள்வரவாக வரும் நீரை தேக்கி வைக்க முடியாமல் அப்படியே வெளியேற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையின் மேற்குகரை பலமிழந்து ஷட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக 7.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் வெறும் 4.50 மீட்டர் உயரத்துக்கு மட்டும் நீரை தேக்கி வைக்க முடிகிறது.

இந்தநிலையில் பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஆனைக்குட்டம் அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. இந்தநிலையில் அணை முழுக்கொள்ளவை எட்டுவதற்கு முன்பே, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உள்வரத்து நீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், ஷட்டர் பழுது காரணமாக நீர்கசிவும் ஏற்பட்டிருப்பதால் பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பிரச்னை குறித்து விவசாய சங்கத்தினர் பேசுகையில், "ஆனைக்குட்டம் அணையின் மதகு பிரச்சினையை சீர்செய்ய விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்ததன் காரணமாக கடந்த 2016-ல் உலகவங்கியின் நிதி உதவியின் பேரில் 4கோடியே 26லட்சம் ரூபாய் மதகு சீரமைப்பு பணிக்காக செலவிட்டும் பயனில்லாமல் போனது.

வீண் வெளியேற்றம்
வீண் வெளியேற்றம்

இதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அணை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டனர். ஆனாலும், வரிப்பணம் வீணானதை தவிர அணையின் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினை தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது" என குற்றஞ்சாட்டுகின்றனர்.

சமூக ஆர்வலர் உத்தண்டுராமன் பேசுகையில், "ஆனைக்குட்டம் அணையின் சீரமைப்பு சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாங்கள் சென்று கேட்டபோது ஆனைக்குட்டம் அணையின் பொறியியல் கட்டுமானமே தவறாக இருக்கும்போது எங்களால் மட்டும் தன்னிச்சையாக என்ன செய்யமுடியும் என பதிலளிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2021-ல், அணை சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அறிக்கையில், ஆனைக்குட்டம் அணையின் மதகுகள் பிரச்சினையை சரி செய்யவே முடியாது.

கடிதம்
கடிதம்

அவை முழுவதும் மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டியவை என குறிப்பிட்டுள்ளனர். அதன்பிறகாவது, நிலைமையை புரிந்துக்கொண்டு பருவமழைக்கு முன்னர் இந்த அணையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இன்றுவரை அதற்கு பதிலில்லை.

நீர்வெளியேற்றம்
நீர்வெளியேற்றம்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே ஆனைக்குட்டம் அணையின் பெயரை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றனர். மற்றபடி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் பிரதிநிதிகள் எடுக்கவில்லை" என்றார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுந்தரலட்சுமி பேசுகையில், "ஆனைக்குட்டம் அணை சீரமைப்புக்காக பல கோடி ரூபாய் செலவிட்டும் மதகு பிரச்சனையை சீர்செய்ய முடியவில்லை என்பது அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். எனவே அணை குறித்து முழுவதுமாக கள ஆய்வு செய்து அதன்பிறகு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய நீர்வள துறை, தமிழக அரசு அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் ஆனைக்குட்டம் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

நீர் தேக்கம்
நீர் தேக்கம்

ஆய்வின்படி, முந்தைய கட்டமைப்பில் உள்ள குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, அணையின் தரைமட்டத்திலிருக்கும் மதகுகளை குறிப்பிட்ட அடி உயரத்தில் அமைக்க முடிவுசெய்துள்ளோம். பிளவக்கல் அணையிலிருந்து வரும் நீர்வரத்து கால்வாய் வழிகளை தூர் வாரவும், ஆனைக்குட்டம் அணைக்கு உள்வரத்து நீரை அதிகரிக்க அணையை ஆழப்படுத்தி ஷட்டர் பகுதியில் மண்ணை அகற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அணையை முழுவதுமாகவே மறுக்கட்டமைப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் இருப்பதால் மத்தியக்குழு ஆலோசனை, நிதி ஒதுக்கீடு என அனைத்து பணிகளும் அடுத்தடுத்து நடந்துவருகின்றன. இதில், முதற்கட்டமாக ஆனைக்குட்டத்தில் மண் பரிசோதனை ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பாசன கண்மாய்களுக்கு நீர்திறந்துவிடக்கோரி விவசாய சங்கத்தினர் கேட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளோம். அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படும் வழித்தடங்களையும் தூர்வார பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ஆனைக்குட்டம் நீர்த்தேக்கத்தில் நிலைமை சீரமைக்கப்படும்" என்றார்.

வீணாகும் நீர்
வீணாகும் நீர்

சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அசோகன் ஆகியோரிடம் பேசினோம். "ஆனைக்குட்டம் அணையை சீரமைக்க பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து சட்டமன்றத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதிஒதுக்கீடு செய்து மறுக்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.