Published:Updated:

`ஆர்கானிக் சான்றிதழ்; ஜீரோ பட்ஜெட் திட்டத்துக்கு முன்னுரிமை!’- வேளாண் இயக்குநர் சொல்லும் யோசனைகள்

waste decomposer
waste decomposer

தமிழகம் என்பது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலம். இங்கு வற்றாத நதி என்று அதிகம் கிடையாது. எனவே விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

வளர்ந்து வரும் நாகரிக வளர்ச்சியில் மாற்றம் பெரும் பல்வேறு விஷயங்களைப் போல பாரம்பர்ய விவசாயம் என்பதை மறந்து ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டோம். ரசாயன உரங்கள் பயன்படுத்தினால் குறுகிய காலத்தில் அதிகமான மகசூல் பெறலாம் எனச் சிலர் கூறினாலும், அவற்றிற்கான எதிர்ப்பலைகள் தொடங்கி பல்வேறு மக்கள் தற்போது இயற்கை விவசாயத்தை ஆதரிக்கவும் தொடங்கிவிட்டனர். செயற்கை உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல் இயற்கை மூலம் கிடைக்கும் பொருள்களை மட்டுமே கொண்டு பழந்தமிழர்கள் பின்பற்றிய விவசாயத்தை செய்யத் தொடங்கிவிட்டனர். மாட்டுச் சாணம், மண்புழு உரம், பஞ்சகவ்யம், விவசாயக் கழிவுகள் போன்ற இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயிகளின் மத்தியில் புதிய முறையில் அறிமுகம் பெற்று பெரும் அளவில் வரவேற்பு பெற்றதுதான் 'வேஸ்ட் டீகம்போஸர்' எனப்படும் இயற்கை உரம்.

conference
conference

இந்த முறையை விவசாயிகளுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்க்கும் விதமாக தேசிய இயற்கை விவசாய மையம், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை, விழுப்புரம் ரோட்டரி சங்கங்களுடன் பசுமைவிகடன் இணைந்து நடத்தும் "இயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி வேஸ்ட் டீகம்போஸர்" ஒரு நாள் கருத்தரங்கம் இன்று(14.09.19) விழுப்புரத்தில் உள்ள ஜெயசக்தி மஹாலில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு வரும் விவசாயிகளின் பார்வைகளுக்காக இயற்கை முறையில் செய்யப்பட்ட பல்வேறு மூலிகைகள், வேளாண்மை சார்ந்த விளைபொருள்கள், விவசாயம் குறித்த புத்தகங்கள் என விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரங்கு நிரம்பிவழியும் அளவிற்கு ஏராளமான விவசாயிகள் இதில் பங்கு கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ், ரோட்டரி சங்கத் தலைவர் பாலகுருநாதன் மற்றும் நிர்வாகிகள், பாரம்பர்ய வேளாண்மை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், இயற்கை விவசாயி ஸ்டீபன் ஜெபக்குமார், மாடித்தோட்ட விவசாயி ஜஸ்வந்த் சிங், முன்னோடி விவசாயி இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு 'வேஸ்ட் டீகம்போஸர்' குறித்த முழுமையான தகவல்களை விரிவாக விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ், ``உலகில் பல்வேறு தொழில்கள் இருந்தாலும் அதில் சிறந்த தொழில் உழவுத் தொழில்தான். மானாவரி சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறோம்

audience
audience

இந்த உழவுத் தொழிலை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைச் செய்ய வேண்டும். நம் தமிழகத்தில் மக்கள் தொகை இன்றைய தினம் 8.2 கோடியை கடந்துவிட்டோம். அதற்கேற்றவாறு உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஏறத்தாழ 125 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவுதானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். உணவு உற்பத்தி செய்வது என்பது இலக்கு மட்டுமல்ல விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும்தான். இதன்படி தமிழக அரசு வேளாண்மை துறை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. `நீடித்த மேலாண்மை மானாவாரி இயக்கம்' உள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் நீர் ஆதாரங்கள் இன்றி பருவ மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது.

பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்காக பல்வேறு மானியங்கள் உள்ளன. அதாவது, மழையை எதிர்பார்த்து நிலத்தில் உழவு செய்வதற்கான மானியம், விதைகளுக்கான மானியம் , வரகு சாமை, திணை, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு, சூரியகாந்தி, ஆமணக்கு போன்றவற்றுக்கான மதிப்புக்கூட்டு மானியங்கள் உள்ளன. இதுவரை 50 இடங்களில் மதிப்பு கூட்டு இயந்திரம் நிறுவி உள்ளோம். அதாவது விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை முறை விவசாய பொருள்களுக்கு முழுமையாக மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. வரும் நாள்களில் மேலும் 150 இடங்களில் மதிப்பு கூட்டு இயந்திரங்களை நிறுவ ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். தனியாகச் செயல்பட முடியாத விவசாயிகள் கூட்டாக இணைந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நமது அரசால் கூட்டுப் பண்ணைத் திட்டம் தொடங்கப்பட்டது.

pasumai vikatan programme
pasumai vikatan programme

இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 20 நபர்களைச் சேர்ந்த குழு,100 நபர்களைச் சேர்ந்த குழு, ஆயிரம் பேரைக் கொண்ட குழுவெனப் பிரிக்கப்பட்டுள்ளது.100 பேரைக் கொண்ட குழுவிற்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது. இதில் அவர்களுக்கு தேவையான உழவு இயந்திரங்கள் விவசாயப் பொருள்கள் முதலியவற்றை வாங்கிப் பயன்படுத்தி கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் என்பது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலம். இங்கு வற்றாத நதி என்று அதிகம் கிடையாது. எனவே விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும். தென்னை, வாழை போன்ற பயிர்களை வைத்துள்ளவர்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் சிறந்தது. உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிர்களை வைத்துள்ளவர்களுக்கு தெளிப்பு நீர்ப் பாசனம் சிறந்ததாக இருக்கும். மேலும், விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்கள் முழுவதையும் முழுமையான விவரங்களுடன் தெரிந்துகொள்ள நமது அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 'உழவன் மொபைல் ஆப்பை' அனைவரும் பயன்படுத்துங்கள்.

விவசாயிகளுக்கு என்னென்ன சந்தேகம் எழுகின்றனவோ அவை அத்தனைக்குமான பதில்கள் இச்செயலில் உள்ளன. இந்தச் செயலியைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன, எப்பொழுது மழை பொழியும், மானியத்திற்கு எப்படிப் பதிவு செய்வது, பல்வேறு திட்டங்களுக்கு எப்படி முன்பதிவு செய்வது, உரங்கள் பற்றிய விவரம், விளை பொருள்களுக்கான தற்போதைய விலை குறித்த விவரங்கள் என வேளாண் துறையில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக எந்தெந்த பருவங்களில் என்னென்ன விதைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்பதை பற்றித் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நம் தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோல தமிழ்நாடு வருவாய்த் துறையும் ஒரு சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய அடங்கல் குறித்த விவரங்களை தாங்களே பதிவு செய்து கொள்ளலாம். முன்புபோல கிராம நிர்வாக அலுவலரிடமோ மற்ற அலுவலகங்களுக்கோ சென்று அலைய வேண்டியதில்லை.

one day conference
one day conference

மேலும், விவசாய நிலங்களில் அதிகம் செயற்கை உரங்களைப் போடாதீர்கள். ஏனெனில் மண்ணின் வளம் அதன் மூலம் குறையத் தொடங்குகிறது. எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய விளை நிலத்தின் மண்ணைப் பரிசோதித்து மண்வள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு மண்ணின் தரத்தை மேம்படுத்தி இயற்கை மூலம் விவசாயத்தில் நல்ல மகசூலைப் பெற வேண்டும் என்பதற்காக சுமார் 2500 ஏக்கர் நிலத்தைத் தேர்ந்தெடுத்து இயற்கை விவசாயம் செய்து வந்தோம். தற்போது அவற்றை 7,500 ஏக்கர் நிலங்களாக அதிகப்படுத்த உள்ளோம். செயற்கை உரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்து இயற்கை விவசாயம் செய்ய தகுந்த நிலமாக மாற்ற குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை ஆகும். தமிழ்நாடு ஆர்கானிக் ப்ராடக்ட் (tamilnadu organic product) இவை அனைத்துமே முழுக்க முழுக்க இயற்கை விதைகளே.

இவற்றை விவசாயிகள் தைரியமாக வாங்கிப் பயன்படுத்தலாம். தற்போது ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்த உள்ளோம். இந்தத் திட்டத்தில் மாவட்டத்திற்கு 150 பேரை தேர்வு செய்து முதற்கட்டமாகச் செய்து பார்க்க உள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள 150 விவசாயிகளில் நான்கு பேரை முதலில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிப்போம். அந்த நான்கு பேரின் மூலம் மற்ற 150 விவசாயிகளுக்கும் அவை முழுவதுமாக கற்றுத் தரப்படும். தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விவசாயிகளாகிய நீங்கள் உற்பத்தி செய்த இயற்கை முறையிலான பொருள்களை தமிழ்நாடு ஆர்கானிக் சர்டிஃபிகேஷன் டிபார்ட்மென்ட் மூலம் சான்றிதழ் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேஸ்ட் டீகம்போஸரை தேசிய ஆராய்ச்சி மையம் பசு மாடுகளின் சாணம் கொண்டு கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் உருவாக்கப்படும் உரம் சுமார் 30 லிருந்து 40 நாள்களில் தயாராகிவிடும். ஒருமுறை வேஸ்ட் டீகம்போஸர் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் யூஸ் பண்ணலாம். இதைப் பயன்படுத்துவதால் தாவரங்களில் வேர்நோய் என்பது வருவதில்லை, மகசூல் அதிகம் கிடைக்கிறது. விவசாயிகளான நீங்கள் இவற்றைப் பயன்படுத்தி பாருங்கள்"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு