Published:Updated:

தண்ணீர் தேவையைக் குறைக்கும் பானி பைப் !

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

தண்ணீர் தேவையைக் குறைக்கும் பானி பைப் !

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

நெல் நடவுக்காக வயலை உழும் பணியில் ஈடுபட்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியைப் பார்த்ததும், உழவை நிறுத்திவிட்டு வந்தார்.

“வயலைத் தயார் செஞ்சிட்டபோல இருக்கு. இந்தத் தடவை என்ன ரகம் நடவு செய்யப்போறே?’’ என்று கேட்டார் வாத்தியார்.

‘‘நீங்கதான போன தடவை சொன்னீங்க. பாரம்பர்ய நெல் ரகங்களை நடவு செஞ்சா, பராமரிப்பு கம்மி, நல்ல வருமானம் கிடைக்கும்னு. அதனால இந்தத் தடவை மாப்பிள்ளைச் சம்பாவும் கறுப்புக் கவுனியும்தான் நடப்போறேன். நாத்து தயாரா இருக்கு’’ என்றார் ஏரோட்டி.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே வாத்தி யாருக்கு எதிர் பக்கமிருந்து வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “நாங்களும் மாப்பிள்ளைச் சம்பாதான்யா நடவு செய்யப் போறோம். ஏரோட்டிகிட்டதான் நாத்துக்குச் சொல்லியிருக்கேன்’’ என்றார்.

‘‘பாரம்பர்ய ரகங்கள் நடவு செய்றது நல்ல விஷயம். அதே மாதிரி நெல் வயலுக்குத் தண்ணி கொடுக்குறதுலயும் கவனமா இருக்கணும். வயல் முழுக்கத் தெப்பம் மாதிரி எப்பவும் தண்ணி இருக்கக் கூடாது. காய்ச்சலும் பாய்ச்சலுமாதான் தண்ணி கொடுக்கணும். இதை இன்னும் பல விவசாயிகள் செய்ய யோசிக்கிறாங்க. அதுலயும் ‘பானி பைப்’னு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாசனம் செஞ்சா வழக்கமான தண்ணியைவிடக் கம்மியா பாய்ச்சினாப் போதும்னு சொல்றாங்க, திருச்சியில செயல்படுற பாசன மேலாண்மை பயிற்சி மைய விஞ்ஞானிகள்’’ என்றார் வாத்தியார்.

‘‘என்ன சொல்றீங்க வாத்தியாரே...‘பானி பைப்’ தொழில்நுட்பமா? விவரமா சொல்லுங்க” என்றார் காய்கறி.

‘‘பானி பைப்’னு சொல்றது வேற ஒண்ணும் இல்லை. பயிருக்கான நீர்த்தேவை எவ்வளவுனு சொல்ற குழாய். இது மண்ணுல இருக்க ஈரப்பதத்தோட அளவைக் காட்டும். வழக்கமா ரெண்டு நாளைக்கு ஒருதடவை நெல் வயலுக்குத் தண்ணி பாய்ச்சுறாங்க பெரும்பாலான விவசாயிங்க. அதை மாத்தி விஞ்ஞான முறைப்படி பயிருக்கு எவ்வளவு தண்ணி தேவையோ அதைத் தெரிஞ்சு பாசனம் பண்ண உதவுது இந்தக் குழாய்.

4 இன்ச் விட்டம், 1 அடி நீளமுள்ள ஒரு பி.வி.சி குழாயை நேரா நிக்க வெச்சா, கீழேயிருந்து 7.5 சென்டிமீட்டர் உயரத்துல சிவப்பு நிறத்துல ஒரு கோடும்... 15 சென்டி மீட்டர்ல கறுப்பு நிறத்துல ஒரு கோடும் குழாயோட வெளிப்பக்கத்துலயும் உள்பக்கத்துலயும் இருக்கும். இந்த 15 சென்டிமீட்டர் வரைக்கும் பரவலா துளைகள் இருக்கும். இந்தக் குழாயைக் கறுப்புக்கோடு தரைமட்டத்துக்கு வர்ற மாதிரி நிலத்துல அழுத்தி வெச்சிடணும். கையை உள்ள விட்டு குழாய்குள்ள இருக்க மண்ணை அள்ளிப் போட்டுடணும். இப்ப துளை வழியே தண்ணி உள்ளே வரும். இதுதான் பானி பைப்.

பானி பைப்
பானி பைப்


வழக்கமான பாசன முறையில தண்ணி காய்ஞ்ச பிறகு, நிலத்துல லேசா விரிசல் வரும். அதைப் பார்த்து நாம தண்ணி கட்டுவோம். ஆனா, இந்தக் குழாயைப் பயன்படுத்தும்போது, குழாய்க்குள்ள இருக்கச் சிவப்பு கோடுவரைக்கும் தண்ணி இருந்தா பாசனம் செய்யத் தேவையில்லை. அதுக்குக் கீழே போனா மட்டும் தண்ணி பாய்ச்சுனாப் போதுமாம்.

திருச்சி பாசன மேலாண்மை மைய விஞ்ஞானிக, விராலிமலை பக்கத்துல இருக்கப் பரம்பூர்ல சில விவசாயிக நெல் வயல்ல ‘பானி பைப்’ மூலமா சோதனை முறையில சாகுபடி செஞ்சிருக் காங்க. அதுல ‘பானி பைப்’ மூலமா தண்ணி பாய்ச்சுன இடத்துலதான் நல்ல மகசூல் கிடைச்சிருக்கு. நாலஞ்சு விவசாயிக நிலத்துலயும் இந்த முடிவுதான் கிடைச்சிருக்காம். வழக்கமா 12 முறை தண்ணி கட்டுற இடத்துல 7 முறைதான் தண்ணி கட்டியிருக்காங்க. ஆனா, வழக்கமான மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றார் வாத்தியார்.

‘‘அருமைய்யா... கோடைக்காலம் வரப் போகுது. குறைஞ்ச தண்ணியைக் கொடுத்துச் சமாளிச்சுக்கலாம்னு நம்பிக்கை வந்திடுச்சு’’ என மகிழ்ச்சியாகச் சொன்னார் ஏரோட்டி.

‘‘பரம்பூர்ல இன்னொரு நல்ல விஷயம் நடந்துகிட்டு இருக்காம்யா... நெல் கொள்முதல் நிலையங்கள்ல மூட்டைக்கு 40 ரூபாய் வரைக்கும் லஞ்சம் வாங்குறதைப் பத்தி பல தடவை பேசியிருக்கோம்ல... அந்த ஊர்ல தற்காலிகமா ஒரு கொள்முதல் நிலையம் அமைச்சிருக்காங்க. அங்க, ஒரு பைசா இல்லாம, விவசாயிகளோட நெல்லைக் கொள்முதல் செய்றாங்க. அதுக்குக் காரணம் அந்த ஊர் விவசாயிகளோட ஒற்றுமைதான்’’ என்றார் வாத்தியார்.

‘‘இதே மாதிரி எல்லா ஊர்லயும் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘நேரடி நெல் விதைக்கும் கருவி (டிரம் சீடர்) கிடைக்கமாட்டேங்குது. ரொம்ப டிமாண்டா இருக்கு. அது கிடைச்சா ரொம்ப உபயோகமா இருக்கும். அதுக்கு இந்த அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்’’ என்றார் காய்கறி.

‘‘ ‘நேரடி நெல் விதைக்கும் கருவி 4,500 ரூபாய்ல இருந்து 8,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. அரசு, இதைத் தயார் பண்ணி விவசாயிகளுக்கு மானிய விலையிலக் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். விவசாயிகள் ரொம்ப வருஷமா இதைக் கோரிக்கையா வெச்சுகிட்டே இருக்கோம். ஆனா, அரசாங்கம் கண்டுக்கிறது இல்லை. இப்ப வேலைக்கு ஆளுங்க கிடைக்காம பாதிபேர் விவசாயத் தையே விட்டுட்டுப் போறாங்க. இது மாதிரி யான கருவிகள் கிடைச்சா வேலையாள் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளிச்சுக்கலாம். இந்த பட்ஜெட்ல அரசாங்கம் இதைக் கவனத்துல எடுத்துக்கிட்டா நல்லாயிருக்கும்’’ என்றார் ஏரோட்டி.

“இந்தக் கோரிக்கை சம்பந்தமா பசுமை விகடன் குழுவினர் வேளாண் பொறியியல் துறை முதன்மைப் பொறியாளர் முருகேசன் கவனத்துக்குக் கொண்டு போனாங்க. அவரு, ‘கடந்த முறை வெளியிட்ட அரசாணையில் இந்தக் கருவிக்கு மானியம் இடம்பெறவில்லை. இந்த முறை வெளியிடுகிற அரசாணையில் சேர்க்க முயற்சி செய்கிறோம். எல்லா கருவிகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’னு சொல்லியிருக்காரு” என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


‘‘அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னுதான் தனி பட்ஜெட் அறிவிச்சாங்க. ஆனா, இன்னும் பழையபடிதான் இருக்கு. விவசாயிங்களோட நிலைமை. 2006-2011-ம் வருஷ தி.மு.க ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமா வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தாங்க.

ஆனா, அதை முறையான திட்டமிடல் இல்லாம, எந்த இடத்துல என்ன பயிர்களை நடவு செய்யணும்னு பார்க்காம, பேருக்குச் செடி நட்டுக் கொடுத்துட்டுத் திட்டத்தை முடிச்சுட்டாங்க. அந்த நிலங்கள் மறுபடியும் தரிசு நிலங்களாயிடுச்சு. இப்ப தமிழக முதலமைச்சரின் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்னு ரெண்டு திட்டத்தைச் செயல்படுத்துறாங்க. அதுலயும் முறையான திட்டமிடல் இல்லையாம்.

நெல் விளையுற பகுதிக்கெல்லாம் தரிசு நில மேம்பாட்டு நிதியை ஒதுக்குறாங்க. சரியான புள்ளிவிவரம் இல்லாம, திட்டத்தோட பயன் போய்ச் சேருதான்னு பார்க்கிறது இல்லை. திட்டத்தைச் செயல்படுத்துனா போதும்னுதான் நினைக்கிறாங்க. அது எப்படிச் செயல்படுதுன்னு ஆய்வு செஞ்சா தான் திட்டங்களோட பயன் முழுமையா கிடைக்கும்.

வேளாண் இடுபொருள்கள் கொடுக்குற திட்டம் நவம்பர் மாசம் வந்த திட்டம். அதை இப்ப வரைக்கும் 15 சதவிகிதம்தான் கொடுத்திருக்காங்களாம். அப்படிக் கொடுக்குற இடுபொருள் விலை மார்க்கெட்ல 200 ரூபாய்னா, அரசாங்கம் 1,200 ரூபாய் மதிப்புல வாங்குதாம். அதே மாதிரி, மழைக்காலத்துல கொடுக்க வேண்டிய மரக்கன்றுகளை ஏப்ரல், மே மாசம் கொடுப்பாங்க... அது வெயில்ல காய்ஞ்சுப் போயிடும். இப்படித்தான் ஒவ்வொரு திட்டமும் பயனில்லாமப் போகுது. இதை யெல்லாம் இனியாவது அரசாங்கம் கவனத்துல எடுத்துக்கணும்’’ என்றார் வாத்தியார்.

‘‘சரிங்க வாத்தியாரே... மாடுக ரொம்ப நேரமா நிக்குதுங்க... நான் வேலையைப் பார்க்குறேன்’’ என ஏரோட்டி வேலையில் கவனமாக, முடிவுக்கு வந்தது மாநாடு.

காளான் வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மார்ச் 15-ம் தேதி முயல் மற்றும் காடை வளர்ப்பு, 16-ம் தேதி இயற்கை விவசாய வழிமுறைகள் மற்றும் இடுபொருள்கள் தயாரிப்பு, 17-ம் தேதி வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு, 19-ம் தேதி தேனீ வளர்ப்பு மற்றும் நோய் மேலாண்மை, 22-ம் தேதி காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், 24-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு, 25-ம் தேதி மீன் வளர்ப்பு, 29-ம் தேதி சிறுதானிய மதிப்புக்கூட்டல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 90429 73060

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism