Published:Updated:

“ உதயநிதியோட வாக்குறுதியை ஸ்டாலின் மறந்துடக் கூடாது!”

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஆலோசனை

“ உதயநிதியோட வாக்குறுதியை ஸ்டாலின் மறந்துடக் கூடாது!”

ஆலோசனை

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மிழ்நாட்டு வாக்காளர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். ஆக அதிகப்படியான விவசாயிகளின் ஆதரவுடன் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தி.மு.க வுக்கு வாக்களித்தாலும் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தாலும் அனைவருமே தமிழக விவசாயிகள்தான். அமைந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான அரசே. எனவே, மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். புதிய முதலமைச்சராகியிருக்கும் மு.க.ஸ்டாலின், அனைத்துத்தரப்பு விவசாயிகளின் இதயங்களிலும் நிலையான இடம் பிடிக்கும் வகையில் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி விவசாயப் பிரதிநிதிகள் சொல்லும் கருத்துகள் இங்கே இடம்பெறுகின்றன.

முழுமையான அழுத்தத்தில்
மும்முனை மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ‘‘நிவர், புரெவி புயல் மற்றும் பருவம் தவறிப் பெய்த மழையால், விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பு. இப்ப கோடைக்கால சாகுபடியைத் தான் நம்பி இருக்கோம். ஆனால், மும்முனை மின்சாரம், ஒழுங்கா கிடைக்கல. ஏப்ரல் 1-ம் தேதியில இருந்து 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு ஏற்கெனவே இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனா, தேர்தலுக்குப் பிறகு தினமும் 10 மணி நேரத்துக்கும் குறைவாக, அதுவும் குறைவான அழுத்தத்துலதான் மின்சாரம் கிடைக்குது. முழுமையான மின் அழுத்தத்துல தினமும் குறைந்தபட்சம் 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் கிடைச்சாதான் கோடைக்கால சாகுபடியை வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதுக்கு புதிய முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்.

இப்ப நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1,950 ரூபாய் விலை வழங்கப்படுது. குறைந்தபட்சம் 2,500 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சாதான், விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். இதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். கடந்த பத்தாண்டுகள்ல ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும் செஞ்ச முறைகேடுகளால, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடைஞ்சிக் கிடக்கு. இதனால் விவசாயிகளுக்குக் கடன் கிடைக்கல. முறைகேடு செஞ்சவங்க தண்டிக்கப்படணும். நலிவடைஞ்ச சங்கங்களுக்குப் புத்துயிர் கொடுக்கணும். ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒரு கூட்டுறவு சங்கம்ங்கற திட்டத்தை வகுத்து, புதுசா கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கணும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விவசாய நிலங்கள் காப்பாற்றபட வேண்டும்

‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் தடுக்கப்பட்டு, விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும்’னு ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருக்கார். அங்க மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியிலயும் விவசாய நிலங்கள்ல சாலை அமைக்கக் கூடாது. திருவையாறு பகுதியில புறவழிச்சாலை அமைக்க, செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்துகிட்டு இருக்கு. விவசாயிகள் பதறிக் கிடக்குறாங்க. இது மாதிரியான திட்டங்களைப் புதிய அரசு கைவிடணும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ‘‘தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு, அந்தச் சட்டங்களை நியாயப்படுத்திப் பிரசாரமும் செய்தார்.

புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தி.மு.க அரசு, எக்காரணம் கொண்டும், இந்த மூன்று சட்டங்களையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில்தான், பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. போலி விவசாயிகள் பலர் குறுக்கு வழியில் பயன் அடைந்துள்ளார்கள். உண்மையான விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவித்தொகை சுமார் 1,000 கோடி அபகரிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணம் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. புதிய அரசு நேர்மையான விசாரணை நடத்தி, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

உதயநிதி
உதயநிதி

சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது விவசாயிகளை நிம்மதி அடையச் செய்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அரசு. இத்தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. புதிய அரசு, அதை வாபஸ் வாங்குவதோடு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல, ‘தேசிய வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்’ என்று உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதையும் நிறைவேற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

தங்களின் எதிர்பார்ப்புகளைத் தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.