Published:Updated:

அன்று மாட்டு வண்டிகள்... இன்று டிராக்டர்கள்... விவசாயப் போராட்டங்கள் சொல்லும் வரலாறு!

மாட்டுவண்டிப் போராட்டம்
மாட்டுவண்டிப் போராட்டம்

அன்று கட்டை வண்டிகளால் கோவை குலுங்கியது. இன்று டிராக்டர்களின் அணிவகுப்பு கண்டு டெல்லி குலுங்குகிறது. 1970-களில் தமிழக விவசாயிகள் கொந்தளித்தது ஏன்?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. பெருவணிக நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தைத் தாரை வார்க்கும் திட்டம். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பம் குடும்பமாக டெல்லியை நோக்கி படை எடுக்கும் விவசாயிகளின் சேனையைக் கண்டு விழிபிதுங்கிக் கிடக்கிறது மோடி அரசு. போராடிப் போராடித்தான் சலுகை ஒவ்வொன்றையும் விவசாயிகள் பெற்று வருகிறார்கள் என்பது வரலாறு. இதுபோன்ற விவசாயிகள் போராட்டத்துக்கு முன் ஏர் பிடித்தது தமிழக விவசாயிகள்தாம்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாட்டில் இன்று கிட்டத்தட்ட 20 லட்சம் பம்ப்செட் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்து வருகிறது. ஆனால், அந்தச் சலுகை எளிதாகக் கிடைக்கவில்லை. பல்லாயிரம் விவசாயிகளின் தியாகத்தால் கிடைத்துள்ளது. 63 விவசாயிகளின் உயிர் பலியாலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள்மீது நடத்தப்பட்ட போலீஸ் ஒடுக்கு முறைகளாலும், சிறைக்கொடுமைகளாலும் கிடைத்ததுதான் கட்டணமில்லா மின்சாரம்.

குறிப்பாக 1970-ம் ஆண்டு பம்ப்செட் விவசாயத்துக்கு உயர்த்தப்பட்ட ஒரு பைசா மின்கட்டண உயர்வை எதிர்த்து நடத்தப்பட்ட மாட்டுவண்டிப் போராட்டம் உலகை அதிர வைத்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மூத்த விவசாயி ஈட்டி முனை குப்புச்சாமி தனது அனுபவங்களை நம்முடன் பகிந்துகொண்டார்.

``1970-ல் அன்றைய தமிழக அரசு, யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவாக இருந்த விவசாய மின்கட்டணத்தை 9 பைசாவாக உயர்த்தியது. அந்த மின்கட்டண உயர்வைக் கடுமையாகக் கண்டித்து தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் போராட்டம்
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் போராட்டம்

போராட்டத்தின் ஒரு யுக்தியாகக் கிராமங்களிலிருந்து சாரை சாரையாக மாட்டுவண்டிகளை ஓட்டி வந்து கோவை நகர வீதிகளை முற்றுகையிடத் தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகளின் சாலை மறியலில் கோவை நகரம் அதிர்ந்தது. மாடுகளை அவிழ்த்து சக்கரங்களில் கட்டிவிட்டு, வண்டிகளை குறுக்கும் நெடுக்குமாகச் சாலைகளில் நிறுத்தி வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு, கோவை நகரத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது.

மாட்டுவண்டிகள் இந்திய விவசாயிகளின் `பாட்டன் டாங்குகள்’ என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச ஆங்கில நாளிதழான `நியூயார்க் டைம்ஸ்’ அந்தப் போராட்டத்தை முதல்பக்க செய்தியாக்கியது.

நாராயணசாமி நாயுடு, ஏர் உழவன் கிருஷ்ணசாமி கவுண்டர், பழையகோட்டை பட்டக்காரர் நல்ல சேனாபதி, சர்க்கரை மன்றாடியார், முத்து மல்ல ரெட்டி, டாக்டர் சிவசாமி உள்ளிட்ட முன்னணி விவசாய போராளிகள் தலைமையில் நடைபெற்ற மாட்டுவண்டிப் போராட்டத்தை அடக்க முடியாத காவல்துறை ஒரு கட்டத்தில் ஒடுக்குமுறைகளைக் கையில் எடுத்தது.

தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வுப் போராட்டம் காட்டுத்தீயாய் பற்றி எரிந்தது. போராடும் விவசாயிகளை அடக்க அவர்கள்மீது தடியடி, கண்ணீர் குண்டு புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு எனப் பல ஒடுக்கு முறைகளை ஏவியது அன்றைய ஆளும் அரசு.

அப்போதைய காவல்துறையினரின் ஒடுக்குமுறை
அப்போதைய காவல்துறையினரின் ஒடுக்குமுறை

1970-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் பெருமாநல்லூரில் போராடிய மூன்று விவசாயிகள் போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர்.

நாராயணசாமி நாயுடு
நாராயணசாமி நாயுடு
டெல்லி: டி.ஐ.ஜி ராஜினாமா... அடையாள உண்ணாவிரதம்! - வலுக்கும் விவசாயிகள் போராட்டம்!

ராமசாமி, ஆயிக்கவுண்டர், மாரப்பன் ஆகிய அந்த மூன்று விவசாயிகள் பலியானதுபோல், கோவில்பட்டி, சேலம் பெத்த நாயக்கனூர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், நொச்சி ஓடைப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் ஒரே நாளில் போலீஸ் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 63 விவசாயிகள் பலியானார்கள். விவசாயிகள் மின்கட்டண மறுப்பு செய்தனர். அதனால் விவசாய பம்ப்செட் மின் இணைப்பைத் துண்டிக்கும் செயலில் மின் வாரியம் ஈடுபட்டது.

`கட்டை எடுத்தால் பட்டை எடுப்போம்’ என்கிற கோஷத்தை எழுப்பி மின்வாரிய ஊழியர்களை விரட்டி அடித்தனர் விவசாயிகள். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மின்கட்டண எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக, 1989-ல் அனைத்து விவசாய பம்ப்செட்களுக்கும் இலவச மின்சாரம் என்கிற அறிவிப்பை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்." என்கிறார் குப்புச்சாமி.

இறந்த விவசாயிகளின் நினைவுத்தூண்
இறந்த விவசாயிகளின் நினைவுத்தூண்

விவசாயிகளின் 19 ஆண்டுக்கால ஓயாத போராட்டத்துக்கும் தியாகத்துக்கும் கிடைத்த பரிசுதான் இலவச மின்சாரம். அன்று கட்டை வண்டிகளால் கோவை குலுங்கியது. இன்று டிராக்டர்களின் அணிவகுப்பு கண்டு டெல்லி குலுங்குகிறது.

அடுத்த கட்டுரைக்கு