Published:Updated:

அவசர அவசியமே!

கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

தலையங்கம்

அவசர அவசியமே!

தலையங்கம்

Published:Updated:
கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘புதிய அரசு இதைக் கவனிக்க வேண்டும்’’, “புதிய அரசு இதைச் செய்ய வேண்டும்’’, “புதிய அரசு இதை ரத்து செய்ய வேண்டும்...’’

அண்மையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்படிக் கோரிக்கை அறிக்கைகள் வீசப்பட்டுக்கொண்டுள்ளன. உண்மையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது புதிய அரசா?

ஏற்கெனவே ஐந்து முறை ஆட்சி அதிகாரத்திலிருந்த தி.மு.க ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. ‘இந்திரர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், ரம்பையும் ஊர்வசியும் இந்திரலோகத்தில் மாறவே மாட்டார்கள்’ என்று சொல்வார்கள்.

அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், ஆட்சி இயந்திரத்தின் முக்கியப் பாகமாக இருப்பது அதிகாரிகள்தாம். இவர்களே உண்மையான ஆட்சியாளர்கள். இவர்கள்தாம் ஊழல் செய்யவும் வழிகாட்டுகிறார்கள். உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிவகுக்கிறார்கள். பத்தாண்டுக் காலம் கழித்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ள தி.மு.க அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலன் மீது அக்கறை இருக்குமானால், சரியாகச் செயல்படாத அதிகார வர்க்கத்தின் மீது சாட்டையை எடுத்து வீச வேண்டும்.

தமிழ்நாட்டில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கும் விவசாயத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளைக் கவனிக்க அவசரமாக ‘கட்டளை மையம்’ (War Room) அமைக்கவுள்ளதை வரவேற்கிறோம். இதுபோல விவசாயத்துக்கும் நிரந்தரமான கட்டளை மையம் அவசியமானது.

வேளாண்மைத்துறை அதன் சம்பந்தப்பட்ட துறையில் ஊழல் புரையோடிக்கிடக்கிறது. கோடி கோடியாக மானியத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அதன் பலன் உண்மையான விவசாயிகளுக்குச் சென்று சேர்வதில்லை. விதை முதல் விற்பனை வரை விவசாயத்தில் பிரச்னைகள் கூடி கும்மியடிக்கின்றன.

ஆகையால், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் பிரச்னைகளுக்கு வழக்கம்போல அதிகாரிகள் சொல்லும் ஆலோசனைகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், அனுபவ விவசாயிகளின் ஆலோசனைகளையும் ‘கட்டளைகள்’ என்கிற வகையில் காதுகொடுத்துக் கேளுங்கள்.

கொரோனா அவசரம் போலவே... இதுவும் இப்போது அவசர அவசியமே!

- ஆசிரியர்

அவசர அவசியமே!