Published:Updated:

`நீங்க என்ன கழட்டுறது நாங்களே கழட்டிக்குறோம்!' - நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள்; நடந்தது என்ன?

முழு நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்

`எல்லோரும் எந்திரிங்க... இல்லைன்னா உங்களைக் கைது செய்து சட்டையைக் கழட்டிடுவேன்' எனப் பேசினார். டி.எஸ்.பி-யின் இந்தப் பேச்சைக் கண்டித்து விவசாயிகள் கூச்சலிட்டனர். மேலும், விவசாயிகள் பலர் `நீங்க என்ன சட்டையைக் கழட்டுறது நாங்களே கழட்டிக்குறோம்' எனச் சொல்லி சட்டையைக் கழற்றினர்.

`நீங்க என்ன கழட்டுறது நாங்களே கழட்டிக்குறோம்!' - நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள்; நடந்தது என்ன?

`எல்லோரும் எந்திரிங்க... இல்லைன்னா உங்களைக் கைது செய்து சட்டையைக் கழட்டிடுவேன்' எனப் பேசினார். டி.எஸ்.பி-யின் இந்தப் பேச்சைக் கண்டித்து விவசாயிகள் கூச்சலிட்டனர். மேலும், விவசாயிகள் பலர் `நீங்க என்ன சட்டையைக் கழட்டுறது நாங்களே கழட்டிக்குறோம்' எனச் சொல்லி சட்டையைக் கழற்றினர்.

Published:Updated:
முழு நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது `சட்டையைக் கழட்டிடுவேன்' என போலீஸ் டி.எஸ்.பி விவசாயிகளைப் பார்த்துப் பேசினார். இதனால் ஆவேசமடைந்த விவசாயி ஒருவர் சட்டென தன்னுடைய ஆடைகளைக் கழட்டி முழு நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை மறியலில் விவசாயிகள்
சாலை மறியலில் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலத் தலைவரான அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். விவசாயி ஒருவர் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆறுகளில் மணல் எடுப்பதைத் தடுக்க வேண்டும், அரசு சார்பில் குவாரிகள் அமைப்பதைக் கைவிட வேண்டும், சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000-மும் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சமாகப் பெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

சாலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
சாலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

இதோடு மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசையும், அதற்குத் துணை போகும் மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து `மாவட்ட ஆட்சியர் எங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் உள்ள தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளை சமாதானம் செய்த போலீஸார், மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்
அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

அப்போது அலுவலக நுழைவாயிலில் உள்ள போர்டிகோ மற்றும் படியில் படுத்துக்கொண்டு கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ராஜ்குமார் 'எல்லோரும் எந்திரிங்க... இல்லைன்னா உங்களைக் கைது செய்து சட்டையைக் கழட்டிடுவேன்' எனப் பேசினார்.

டி.எஸ்.பி-யின் இந்தப் பேச்சைக் கண்டித்து விவசாயிகள் கூச்சலிட்டனர். மேலும், விவசாயிகள் பலர் `நீங்க என்ன சட்டையைக் கழட்டுறது நாங்களே கழட்டிக்குறோம்' எனச் சொல்லி சட்டையைக் கழற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் கொஞ்ச நேரம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயி ஒருவர், `விவசாயிகளைக் கேவலமாக நினைக்கிறாங்க. நாங்க கலெக்டரை சந்திச்சு மனு கொடுக்க வேண்டும்' எனக் கூறி, தான் அணிந்திருந்த அனைத்து உடைகளையும் கழற்றி முழு நிர்வாணமாக நின்றதுடன் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்  நடத்திய விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து தன் உடைகளைப் போட்டுக் கொண்டார். இதையடுத்து போலீஸார் மாவட்ட ஆட்சியரிடம் சென்று விவசாயிகளின் போராட்டம் பற்றி எடுத்துக் கூறினர்.

இதைத் தொடர்ந்து கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகள் விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அங்கேயே வந்து விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். மனித மண்டை ஓடுகள், முழு நிர்வாணம் என விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ஆட்சியர் அலுவலகம் நேற்று பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism