Published:Updated:

முல்லை பெரியாறு: தீவிரமடையும் மதுரை சிறப்பு குடிநீர் திட்டப் பணி; எதிர்க்கும் தேனி விவசாயிகள்; ஏன்?

லோயர்கேம்ப்

குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுசென்றால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். லோயர்கேம்ப் முதல் வைகை வரை செல்லும் ஆற்று நீரின் அளவு குறையும். இதனால் நிலத்தடிநீர் மட்டமும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். 

முல்லை பெரியாறு: தீவிரமடையும் மதுரை சிறப்பு குடிநீர் திட்டப் பணி; எதிர்க்கும் தேனி விவசாயிகள்; ஏன்?

குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுசென்றால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். லோயர்கேம்ப் முதல் வைகை வரை செல்லும் ஆற்று நீரின் அளவு குறையும். இதனால் நிலத்தடிநீர் மட்டமும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். 

Published:Updated:
லோயர்கேம்ப்

2018-ம் ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லை பெரியாறு-மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அப்போதையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, 2020 டிசம்பர் 4-ம் தேதி இத்திட்டத்துக்கு மதுரையில் வைத்து அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்துக்கு முதலில் ரூ.1,020 கோடி நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் ரூ.1,295.76 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு (அம்ரூத்), ஆசிய வளர்ச்சி வங்கி, மதுரை மாநகராட்சி சேர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளன.

சாலையோரங்களில் போடப்பட்டிருக்கும் குழாய்கள்
சாலையோரங்களில் போடப்பட்டிருக்கும் குழாய்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்திட்டம் அறிவிக்கப்பட்டு முதலே, தேனி மாவட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் திட்டத்துக்கான இடத்தேர்வு, ஆய்வுப்பணி மற்றும் பூமி பூஜைக்காக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்த அரசு அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை, தென்னை, நெல், மா விவசாய சங்கங்கள், வணிகர் சங்கம், முன்னாள் ராணுவத்தினர் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், ஹோட்டல் சங்கங்கள், முடிதிருத்துவோர் சங்கம், மக்கள் மன்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், சலவைத் தொழிலாளர்கள் சங்கம் என அனைத்துத் தரப்பினரும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருந்தாலும், 5 மாவட்ட நீர்த் தேவைக்கான அணையைக் கொண்டிருந்தாலும், தேனி மாவட்டத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது முல்லை பெரியாறு அணைதான். முல்லை பெரியாறு அணையின் நீரானது சுரங்கப்பாதை வழியாக 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைப்பாதையில் கொண்டு வரப்பட்டு லோயர்கேம்ப் பகுதியில் உள்ள வைரவன் ஆற்றில் கலந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது. இடையில் சுருளியாறு, கொட்டக்குடி ஆறுகளுடன் சங்கமித்து இறுதியில் வைகை ஆற்றோடு இணைந்து வைகை அணையில் தேக்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தண்ணீர்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமாநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த 5 மாவட்டங்களின் நீராதாரமாக வைகை அணை உள்ளது எனக் கூறப்பட்டாலும், வைகை அணைக்கே நீராதாரமாக இருக்கக் கூடியது முல்லை பெரியாறு அணையின் நீர்தான்.

முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்பில் இருந்து வறட்சியான பகுதிகளின் விவசாயத் தேவைக்கான நீரைக் கொண்டு செல்ல 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 200 மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளதாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதற்கிடையேதான் ரூ.17.78 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, 2 டிரான்ஸ்பார்மர்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைக்கவுள்ளனர். இங்கிருந்து ராட்சத குழாய்களை தரையில் பதித்து குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாகத் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மதுரைக்கு சுமார் 150 கிலோ மீட்டருக்கு குழாய் மூலமாகவே முல்லை பெரியாறு தண்ணீரைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

லோயர்கேம்ப் குழாய் மூலம் வரும் முல்லைப்பெரியாறு நீர்
லோயர்கேம்ப் குழாய் மூலம் வரும் முல்லைப்பெரியாறு நீர்

கம்பம் பள்ளத்தாக்கு பாலைவனவாகும் அபாயம்

தேனி மாவட்டம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே அதிகம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நெல், 12,000 ஏக்கர் வாழை, 4,000 ஏக்கர் திராட்சை, 13,000 ஏக்கர் தென்னை, 20,000 ஏக்கர் மா என விவசாயம் நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாது, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற கொடிவகை காய்கறிகளும், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரி, வெண்டை, நூல்கோல், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளும், கீரை வகைகளும் பருவநிலைக்கு ஏற்றவாறு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைவிக்கப்படும் பன்னீர் திராட்சை சுவை மிகுந்ததாக உள்ளது. பெரும்பாலும் பிற பகுதிகளில் சீஸன்களுக்கு மட்டுமே திராட்சை விளைவிக்கப்படும். ஆனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆண்டுதோறும் விளைவிக்கப்படுகிறது. இதேபோல நெல், கரும்பு மட்டுமல்லாது உளுந்து, பாசிப்பயறு, தட்டான்பயறு பயிரிடவும் ஏற்றப் பகுதியாக உள்ளது.

பம்பிங்க் ஸ்டேஷன் அமையவுள்ள இடம்
பம்பிங்க் ஸ்டேஷன் அமையவுள்ள இடம்

பொதுவாக, 142 அடி உயரத்துக்கு நீர் தேக்க அனுமதிக்கப் பட்டுள்ள முல்லை பெரியாறு அணையில், நீர்மட்டம் 104 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்க முடியும். அதற்கு கீழ் அணையின் நீர் மட்டம் குறைந்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது.

கம்பம் பள்ளத்தாக்கில் உண்டான பருவநிலை மாற்றத்தாலும், முல்லை பெரியாறு அணையின் நீர்த் தேக்கம் உயரம் குறைக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் முப்போகம் விளைந்த பூமியில் இரு போகமாக மாறி, தற்போது ஒரு போகம் எடுத்தாலே போதும் என்ற மனநிலைக்கு விவசாயிகள் வந்துவிட்டனர். காய்கறி விவசாயிகளும் நீர்பற்றாகுறை காரணமாக அதிகப்பரப்பில் பயிரிடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

இத்தகையைச் சூழலில், லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு நேரடியாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படடுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கம்பம் பள்ளதாக்கு பாலைவனமாகும் நிலை உள்ளது. இதுமட்டுமல்லாது தங்களின் குடிநீர் தேவைக்கே அவதிப்படும் நிலை உருவாகும் எனவும் தேனி மக்கள் அஞ்சுகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் முல்லை பெரியாறு நீர் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 40 ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், லோயர்கேம்ப்பில் இருந்து வைகை அணை வரை உள்ள முல்லை பெரியாற்றின் வழிப்பாதையில் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகே இன்னொரு தடுப்பணை கட்டி குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுசென்றால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். லோயர்கேம்ப் முதல் வைகை வரை செல்லும் ஆற்று நீரின் அளவு குறையும். இதனால் நிலத்தடிநீர் மட்டமும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஆமைவேகத்தில் நடந்து வந்தப்பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, லோயர்கேம்ப் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர்கேம்ப் பகுதியில் விவசாய சங்கங்கள், சலவைத் தொழிலாளர் சங்கம் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சதீஸ்பாபு
சதீஸ்பாபு

இதுகுறித்து தேனி மாவட்ட பாரதிய கிசான் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஸ்பாபுவிடம் பேசினோம். ``வைகை அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளாகியும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 20 அடிக்கும் மேல் அணையில் வண்டல் மண்ணும், சகதியும் தேங்கியுள்ளது. இதன்காரணமாக அணையின் முழு கொள்ளவை தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே, முல்லை பெரியாறு-மதுரை சிறப்பு குடிநீர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கால்வாசி நிதியை வைகை அணையைத் தூர்வார ஒதுக்க வேண்டும். அணையைத் தூர்வாரினால் முழு கொள்ளளவு நீரைத் தேக்கி, மதுரை மாவட்ட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முடியும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism