Published:Updated:

விவசாயிகளை கொத்தடிமைகளாக்குகிறதா `அக்ரிஸ்டேக்'; பில்கேட்ஸின் புதிய திட்டம் என்ன?

Farmer ( AP Photo / Rajesh Kumar Singh )

ஏற்கெனவே தோற்றுப் போன பச்சைப் புரட்சியின் அடுத்த முகமாக அக்ரி ஒன் என்ற பெயரில் பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு வருகிறது கேட்ஸ் புலி.

விவசாயிகளை கொத்தடிமைகளாக்குகிறதா `அக்ரிஸ்டேக்'; பில்கேட்ஸின் புதிய திட்டம் என்ன?

ஏற்கெனவே தோற்றுப் போன பச்சைப் புரட்சியின் அடுத்த முகமாக அக்ரி ஒன் என்ற பெயரில் பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு வருகிறது கேட்ஸ் புலி.

Published:Updated:
Farmer ( AP Photo / Rajesh Kumar Singh )

இப்போது அடிக்கடி இந்தியக் கொள்கை வகுப்போர் மத்தியிலும், பல பெரு நிறுவனங்களின் மத்தியிலும் ஒலித்து வரும் சொல் அக்ரிஸ்டேக் (Agristack) அதாவது விவசாயிகளின் விவரத் தொகுப்பு. இது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும் இந்திய விவசாயத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்காகவுமாம்.

பல ஆயிரம் வருடங்களாக தற்சார்புடன் உச்சமான விளைச்சலுடன் இருந்து வந்த இந்திய விவசாயம் ஆங்கிலேய ஆட்சியில் குலைக்கப்பட்டது. ஆனாலும், விவசாயத்தின் அடித்தளமான இயற்கை வளங்கள், குறிப்பாக நிலவளம், உயிர்ச்சூழல் வளம், தண்ணீர் வளம் சிதைக்கப்படவில்லை. மாறாகப் பச்சைப் புரட்சி இவை அத்தனையையும் சிதைத்தழித்தது. பெரு வணிக நிறுவங்களின் வருவாய்க்கான உலைக்களமாக விவசாயம் மாறியது. விவசாயிகள் மயக்க மாயையில் சிக்கிய மீன்களாயினர். மீளாக் கடன்காரர்கள் ஆகினர்.

விவசாயம்
விவசாயம்

பெரு வணிகத்தின் வழி முறை எதுவாக இருந்ததெனில் திணிக்கப்பட்ட தொழில்நுட்பம் அல்லது ஒரு இடுபொருள் தோல்வியடைந்தது மட்டுமன்றி அதுவே புதிய பிரச்னையாக மாறும்போது இன்னுமொரு புதிய தொழில்நுட்பம் அல்லது அணுகுமுறையை அறிமுகப்படுத்தும். இது எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு என்று கட்டியங்கூறிக் கொண்டு வரும். அதுவும் தோல்வியடைந்து பிரச்னையாகும்போது இன்னுமொன்றைக் கட்டியங்கூறும். இது ஒரு தொடர்கதையாக இருக்கும். புகுத்தும் ஒவ்வொன்றும் தீர்வல்ல என்றாலும் அதைத் திணிப்பதற்குக் காரணம் வணிகம், தீர்வல்ல. ஆகவே, ஒவ்வொரு தொழில்நுட்பமும் அவர்களின் வணிகத்தைப் பெருக்கியது. பெருவணிக நிறுவனங்கள் வளர்ந்தன. விவசாயிகள் கடன் அளவும் வளர்ந்தது… வளர்ந்தது… வளர்ந்துகொண்டேயிருக்கிறது. மேலும், உணவையும் சூழலையும் நஞ்சாக்கியது.

வணிகம் என்பது தொடர்ந்து லாபம் பார்க்க புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு இருப்பதே. ஒவ்வொரு நுட்பமும் தோல்வி அடையும்போது அதை அடுத்த வாய்ப்பாக மாற்றிக்கொள்கிறது வணிகம். பெருவணிகம் இப்போது கணினித்துறை உருவாக்கியுள்ள பல்வேறு நுட்பங்களைக் கொண்டு விவசாயத்தை ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுக்க முயல்கிறது, ஒட்டு மொத்த விவசாயத்தையும் விவசாயிகளையும் தன்னுடைய கொத்தடிமையாக்கிட முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் தொடக்கம்தான் அக்ரிஸ்டேக் – AgriStake. அது என்ன அக்ரிஸ்டேக்?

ஸ்டேக் என்பதற்கு அடுக்கி வைத்தல் என்று பொருள். எ-கா வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்தல், புத்தகங்களை அடுக்கி வைத்தல். விவசாயி குறித்த விவரங்களை அடுக்கி வைத்தல் அக்ரிஸ்டேக். அதாவது, ``விவசாயிகள் விவரத் தொகுப்பு.” இந்திய விவசாயம் பச்சைப் புரட்சிக்குள் போனபோதே விவசாயிகள் வாழ்க்கை சூதாட்டமாக மாற்றப்பட்டது. இப்போது இன்னுமொரு சூதாட்டத்தில் இறக்கப்போகிறது `விவசாயிகள் விவரத் தொகுப்பு.' பச்சைப் புரட்சியை அறிமுகப்படுத்தும்போது சொல்லப்பட்ட விவசாயிகளின் வாழ்வை, விவசாயத்தை மீட்டெடுக்க அதிக விளைச்சல் – அதிக வருவாய் – பட்டினி இல்லாத இந்தியா என்கிற அதே சொல்லாடல்களுடன். அது எப்படி பசுமைப் புரட்சி என்ற குளுமையான பெயரோடு புகுத்தப்பட்டதோ, அதேபோல இது டிஜிட்டல் விவசாயம் என்ற அடைமொழியோடு வருகிறது… இந்திய விவசாயிகளை ஒட்டு மொத்தமாகக் கொத்தடிமைகளாக்க.

இந்த விவசாய சூதாட்டத்தில் அவர்கள் பயன்படுத்தப்போவது ஒவ்வொரு விவசாயியின் விவரங்களை. நிலம், அந்நிலத்தில் உள்ள நீர்வளம், மண்ணின் தன்மை, அதில் உள்ள ஊட்டச்சத்துகள், அந்த நிலம் உள்ள வட்டாரத்தின் மழை நிலவரம், அவரது கடன், குடும்ப விவரம் உள்ளிட்ட பலவும் இதற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவற்றை எப்போதும் எவரிடமும் கொடுக்கவில்லையே என்று நினைக்கலாம்.

Farmer
Farmer
AP / Channi Anand

உண்மை என்னவெனில் நம்மை அறியாமலேயே இவற்றையெல்லாம் நாம் கொடுத்துள்ளோம். அவர்களாகவே சிலவற்றை எடுத்துக்கொண்டார்கள்.

பிரதம மந்திரியின் ரூ.6,000 உதவித்தொகைக்கு பதிவு செய்தோமில்லையா அப்போது நம் நிலம் குறித்த விவரங்களைத் தந்தோமா…

பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணையும்போது நிலம், பயிர் பற்றிய விவரங்களை அளித்தோமா…

வங்கிகளில் கடன் வாங்கும் போது ஆதார் எண்ணைக் கொடுத்தோமா…

இவை எல்லாமே புள்ளி விவரத் தங்கச் சுரங்கம். இது மட்டுமல்ல; நில உரிமை விவரங்கள் அனைத்தையும் டிஜிட்டல் ஆக்க வேண்டும் என்று மத்திய அரசு வேகமாக பட்டா குறித்த விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. இதுவும் ஒரு பொக்கிஷம். இப்படி ஒவ்வொரு விவசாயி பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே இந்திய அரசு சேகரிக்கிறது. இப்படி சேகரித்த விவரங்களைத்தான் ``விவசாயிகளின் விவரத் தொகுப்பு” (அக்ரிஸ்டேக்) என்கிறார்கள். இந்த விவரங்களையெல்லாம் விவசாயிகளுக்குத் தெரியாமல் சேகரிப்பது மட்டுமல்ல, அந்தந்த மாநில அரசுக்கும் தெரியாமல் சேகரிக்கப்படுகிறது. விவசாயம் மட்டுமல்ல, இப்புள்ளி விவரங்களும் மாநில அரசின் பட்டியலில் உள்ள ஒன்று. ஆனால், எவையெல்லாம் சேகரிக்கப்படுகிறது என்ற விவரமும் மாநில அரசுக்குத் தெரியாது. இதுமட்டுமல்ல, சேகரிப்பட்ட விவரங்களை மாநில அரசு கேட்கும்போது குறிப்பிட்ட சில விவரங்களை மட்டுமே கொடுக்கும் எல்லா விவரங்களையும் கொடுக்காது.

அரசு எப்போதும் மக்களுக்கு நல்லது செய்யத்தானே என்ற ஆழமான நம்பிக்கை கொண்ட நாம் இதைக் கொண்டு அரசு விவசாயிகளின் வாழ்வையும் மேம்படுத்தத்தானே பயன்படுத்தும் என்று நாம் நினைப்போம். ஆனால், மத்திய அரசு இந்த விவரங்களை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. மாறாக வணிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது.

இப்படி நமக்குத் தெரியாமலேயே சேகரித்த விவரங்களைத் தொகுத்து வணிகத்துக்குத் தேவையான வடிவத்தில் அமைக்க மத்திய அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு விவசாயியின் விவரங்களையும் பல்வேறு விதத் தொகுப்புகளாக மாற்றி வணிக நிறுவனங்களுக்கு விற்கும்.

விவசாயம்
விவசாயம்

எ-கா: ஒரு வங்கி விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதற்கு உரிய விவரத் தொகுப்புகளை மைக்ரோசாஃப்ட் இடமிருந்து பெற்றுக் கொள்ளும். பெரம்பலூர் மருதையரசன் தனது பருத்தி சாகுபடிக்கும் திருநெல்வேலியில் இருக்கும் மூக்கையா மக்காச் சோளம் பயிரிடவும் கடன் கேட்கும்போது அந்த வங்கிகள் இவர்களுக்கு இப்பயிர் கடன் கொடுக்க இவர்களது நிலத்தின் உள்ள தண்ணீர் அளவு, அவரவர் பகுதியில் இப்பருவத்தில் எவ்வளவுதான் மழை இருக்கும், இவர்களது விளைச்சல் என்னவாக இருக்கும், ஒவ்வொரு வருடமும் இவர்களது பகுதியில் இந்தப் பருவத்தில் என்ன விளைச்சல் இருந்திருக்கிறது, இந்தப் பருவத்தில் இவரது இதுவாகத்தான் இருக்கும் என்றெல்லாம் மைக்ரோசாஃப்ட் கொடுத்த விவரத் தொகுப்புகளைக் கொண்டு கணிப்பார்கள். அதன் பின்தான் கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். கடன் கொடுப்பதை வங்கி மேலாளர் அல்லது அங்கு இருக்கும் `அக்ரி' முடிவு செய்யமாட்டார். எங்கோ இருக்கும் கணிணி முடிவு செய்யும். இதெல்லாம் இப்போதே நடக்கத் தொடங்கியிருக்கிறது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் ஒடிசாவின் கியான்ஞ்கர் ஆகிய இரு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் பயமுறுத்துகிறது. கடன் கேட்ட 1,871 விவசாயிகளுக்கு வெறும் 7 பேருக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது என AgriFintech India-வின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வங்கிகள் போலவே விவசாயிகள் வாழ்வில் தேனாறையும் பாலாறையும் ஓடச் செய்வோம் எனச் சொல்லிக் கொண்டு வரும் விவசாய இடுபொருள் முதல் விளைபொருள்களை வாங்கும் வணிக நிறுவனங்கள் மைக்ரோசாஃப்ட்டிடம் நம்மைப் பற்றிய விவரங்களை வாங்கிக் கொள்ளும். அவை நாம் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று நமக்கு விவசாயம் சொல்லிக் கொடுக்கும். என்னிடம் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று சொல்லும். இதை டிஜிட்டல் விவசாய விரிவாக்கம் என்கிறது அரசுகளும் பெரு வணிக நிறுவனங்களும்.

அதென்ன டிஜிட்டல் விவசாய விரிவாக்கம்?

1965-க்கு முன், அறிவு விவசாயியிடமும் அவரின் குடும்பத்தவர்களிடமும் இருந்தது. பச்சைப் புரட்சி காலத்தில் வேளாண் பல்கலைக் கழகங்கள் மூலம் இறக்குமதியாகி வந்த அறிவை விவசாய அலுவலர்கள் விவசாயிகளிடம் கொடுத்தார்கள். என்ன விதை விதைக்க வேண்டும், என்னென்ன உப்பு இடவேண்டும், எப்போது இடவேண்டும், பூச்சி தாக்குதலுக்கு என்னென்ன விஷத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், இப்படி வகை வகையான அறிவு வேளாண் துறையால் கை மாற்றப்பட்டது. இதுதான் விரிவாக்கம். இறக்குமதி அறிவை சமூகத்துக்குள் விரிவு செய்யப்பட்டது. அதனால்தான் வேளாண் விரிவாக்க மையம் என்று அரசு பெயரும் வைத்தது.

டிஜிட்டல் விவசாய விரிவாக்கம் என்பது சென்சார்கள், ரோபோக்கள் மூலம் நடக்கும் வேலை. ஆகாயத்தில் பறக்கும் விண் கலன்களில் உள்ள பல்வேறு சென்சார்கள் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தைக் கணக்கிடுவது, அந்த நிலத்துக்குரிய வானிலை நிலையைத் தொடர்ந்து கணித்துக் கொண்டேயிருப்பது, மண்ணின் ஊட்டச் சத்துக்களைத் தொடர்ந்து அளவிட்டுக் கொண்டேயிருப்பது, நிலத்தில் உள்ள ஒவ்வொரு பயிரின் தேவை, ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றையும் கவனித்துக் கொண்டயிருக்கும். திருநெல்வேலியில் இருக்கும் மூக்கைய்யாவின் மக்காச்சோள வயல்களையும், பெரம்பலூரில் இருக்கும் மருதையரசனின் மானாவாரி பருத்தியையும் கவனித்துக் கொண்டேயிருப்பது எல்லாம் நடக்கும்.

விவசாயம்
விவசாயம்

இந்த விவரங்களையும், நம்மையறியாமலேயே நாம் அளித்த விவரங்களையும் கொண்டு நம் ஒவ்வொருவர் குறித்து வரைபடம் உருவாக்குவர். அது போலவே ஒவ்வொரு விவசாயியின் விவசாயம், விவசாய முறை, அவரது குடும்ப சூழல், பொருளாதார நிலை பற்றிய நிலை எல்லாவற்றையும் வரைபடமாக்குவர். பிக் டேட்டா நுட்பம் மூலம் புள்ளிவிரங்களை அலசி ஆராயும் மைக்ரோசாஃப்ட். மின்னியல் மூலம் கண்காணிப்பு நுட்பங்கள், மண்ணியலைக் கண்காணிக்கும் நுட்பங்கள், வானிலை கண்காணிப்பு நுட்பங்கள், தொலை உணர்தல் நுட்பங்கள், நம் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசியில் உள்ள செயலிகள் மூலம் நம்மைப் பற்றிய, நம் விவசாயம், விளைநிலம், பயிர்கள், பொருளாதார நிலை, வங்கிப் பரிவர்த்தனைகள், ஏன் ரேஷன் கடையில் வாங்கிய பருப்பு, அரிசி வரை நம்மைத் தொடர்ந்து கவனித்தும், கணித்தும் கொண்டிருப்பர். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு செயற்கை அறிவூட்டல் நுட்பம் கொண்ட கணினி மூலம் அலசி ஆராய்வர். ஒவ்வொரு விவசாயி குறித்த, வட்டாரங்கள், மாவட்டங்கள் குறித்த வரைபடங்களை உருவாக்கிடுவர். இவற்றைக் கொண்டு மூக்கைய்யாவுக்கும் குப்புசாமிக்கும் எவ்வளவு கடன் கொடுப்பது முதல் என்னென்ன பயிர் செய்ய வேண்டும், எந்த வகை விதைக்க வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும், எப்போது உப்பிட வேண்டும், எந்தெந்த பயிருக்கு சற்று கூடுதலாக உப்பிட வேண்டும், எந்த வகையான பூச்சித் தாக்குதல் எப்போது வரும் எனப் பலவும் சொல்லும்.

முன்பெல்லாம் விவசாயியின் அறிவு விவசாயத்தின் மூலமாக இருந்தது. 65-க்குப் பின் வேளாண்மைப் பல்கலை மூலம் வந்த இறக்குமதி அறிவை வேளாண் அதிகாரிகள் மூலமாக வந்த அறிவு விவசாயிகளின் அறிவாக இருந்து வருகிறது. இந்த டிஜிட்டல் விவசாய அறிவு நம் ஒவ்வொருவருடைய கைபேசி வழியாக பில்கேட்ஸிடம் நம்மைப் பற்றிய விவரங்களை வாங்கிய கம்பெனிகளின் ஆட்கள் மூலம் நம் நிலத்துக்கு வரும். இப்படி வந்து சேரும் அறிவு சாதாரணமானதல்ல. மூக்கையா, குப்புசாமி உள்ளிட்ட ஒவ்வொரு விவசாயி குறித்த ஒவ்வொரு புள்ளிவிரத்தையும் கொண்டு அவர்களது விவசாயத்தைத் தங்கள் வசம் ஆக்கும் அறிவு. நம்மைப் பற்றிய விவரங்கள்தான் அவர்களின் மூலம்.

இதுமட்டுமல்ல, பில்கேட்ஸ் அவரின் மனைவி (இவர்கள் விவாகரத்து அறிவித்துள்ளார்கள்) மெலிண்டா கேட்ஸ் இணைந்து நடத்தும்-மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை விவசாயிகளின் வாழ்வை உயர்த்தும் ஆபத்பாந்தவனாகக் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆரோக்கியத்தை வளர்க்கும் கடவுளாக காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதே சமயம் இதன் மூலம் காசு பார்க்கவும் முயல்கிறார்கள். கேட்ஸ் தம்பதியினரின் ஃபவுண்டேஷன் பல்வேறு வகைகளில் கைகோத்துள்ள சில நிறுவனங்கள் மான்சாண்டோ, பேயர், சின்ஜென்டா, டூபான்ட்…சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை இருக்கின்றன கூட்டாளிகளின் பட்டியல்.

ரா.செல்வம்
ரா.செல்வம்

பில்-மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 2006-லேயே `டிஜிட்டல் கிரீன்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனமொன்றை இந்தியாவில் தொடங்கிவிட்டது. `டிஜிட்டல் கிரீன்' அமைப்பு, வறுமையிலிருந்து பல்வேறு அதி நவீனத் தொழில்நுட்பங்களின் கூட்டு சக்தியுடனும் அடித்தட்டு அளவிலான அமைப்புகளின் கூட்டுறவுடனும் இந்தியாவின் சிறு குறு விவசாயிகளை வறுமையிலிந்து விடுவிக்கும் என்று பறைசாற்றிக் கொள்கிறது. விவசாயிகளின் பிரச்னைகளை சிறு சிறு வீடியோக்களாகப் பதிவு செய்து அதற்கான தீர்வுகளையும் வீடியோக்களாகக் காட்டும் என்கிறது டிஜிட்டல் கிரீன்.

ஏற்கெனவே தோற்றுப் போன பச்சைப் புரட்சியின் அடுத்த முகமாக அக்ரி ஒன் என்ற பெயரில் பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு வருகிறது கேட்ஸ் புலி. அதிக விளைச்சல், அதிக வருவாய் என்ற மாயையைப் பரப்பிய ரசாயன விவசாயம் இப்போது கணினி அறிவு, செயற்கை அறிவு, ரோபோக்கள் உதவியுடன் புதிய சாகுபடி முறையைக் கடைப்பிடித்து அதிகம் விளைவித்து பட்டினியை ஒழிப்போம் என்று கூறி வருகிறது.

ஆறு மாதங்களாகப் போராடும் விவசாயிகள் ரத்து செய்யக் கேட்கும் அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் இப்போது இந்திய மத்திய அரசு செயல்படும் விதத்தையும் இத்துடன் இணைக்கும் போது... மத்திய அரசு இந்திய விவசாயிகளை ஒட்டு மொத்தமாக டிஜிட்டல் கொத்தடிமைகளாக்க அரசு முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களை உலகின் மருந்துக் கம்பெனிகளின் ஆராய்ச்சி எலிகளாக்கிய பில் கேட்ஸ் இப்போது இந்திய விவசாயிகளைக் குறி வைக்கிறார், இதிலிருந்து விவசாயிகள் வாழ்வு காக்கப்பட, விவசாயிகள் மட்டுமன்றி மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

- அறச்சலூர் ரா.செல்வம்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.