Published:Updated:

முன் வரவேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘அன்பு விவசாயிகளே..! இயற்கை வேளாண்மைக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. இனி, வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் செலவு செய்து உரங்களை இறக்குமதி செய்வதைக் குறைப்போம். செலவு குறைந்த இயற்கை வேளாண்மைதான் நம் நாட்டுக்குத் தேவை. கடந்த காலங்களில் விவசாயத்தில் நடந்த தவறுகளைக் களைவோம்; இயற்கையை நோக்கித் திரும்புவோம்’’ என்றெல்லாம், பல்வேறு உதாரணங்களை மேற்கோள்காட்டி விவசாயிகளே வியக்கும் அளவுக்கு விரிவாகப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அண்மையில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நடைபெற்ற `ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ கருத்தரங்கில் காணொலி மூலமாகக் கலந்துகொண்டபோதுதான் பிரதமர், இப்படியெல்லாம் பேசியுள்ளார். ``2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பப் போகிறோம்” 2019-20-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் பிறகு, இந்த அறிவிப்பு, கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த இன்னும் ஓர் ஆண்டு இருப்பதாலும், ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களாலும் மீண்டும் ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மையைக் கையில் எடுத்துள்ளார்கள் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. எப்படி இருந்தாலும், இதை வரவேற்போம்.

ஆனால், மேடை அலங்காரத்துக்காகப் பேசிய பேச்சாக மட்டும் இது இருந்துவிடக் கூடாது. இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றால், அதற்குக் கொள்கைகள் வகுத்து, போதுமான நிதி ஒதுக்கி... வேகப்படுத்த வேண்டும். கூடவே, மண், நீர், காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தும், தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கங்களுக்கு கடிவாளம் போட வேண்டும். இவற்றையெல்லாம் செயல்படுத்தாமல், வேறுமனே ‘இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள்’ என்று வேதங்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும் பிரதமர் மேற்கோள்காட்டிப் பேசுவது கதைக்கு உதவாது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இயற்கை வேளாண்மையால் மட்டுமே முடியும். இதை வெற்றிகரமாக செய்துகொண்டுள்ள ஆயிரமாயிரம் விவசாயிகள் நாடு முழுவதும் உள்ளனர். இவர்களையும் இணைத்துக்கொண்டு, இயற்கை வேளாண்மையை இயக்கமாகச் செயல்படுத்த முழு மனதுடன் மத்திய அரசு முன் வர வேண்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்