உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3-ம் தேதி) பி.ஜே.பி அமைச்சரின் மகனால், விவசாயிகள் 3 பேர், தனியார் டி.வி நிருபர் ஒருவரும் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் காரை ஓட்டிவந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தக் கொடும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு சம்பந்தமான என்ன செய்திருக்கிறீர்கள், ஏன் அசட்டையாகக் கைளாள்கிறீர்கள் என்று உத்தரப் பிரதேச அரசைக் கேட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என்றால் இதை எப்படிப் புரிந்துகொள்வது?

இத்தனைக்கும் இந்த வேளாண் சீர்திருத்த சட்டங்களை முதலில் கொண்டு வர திட்டமிருந்ததே பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் கொண்டு வர திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி, நீட் உள்ளிட்டவற்றை இன்று காங்கிரஸே எதிர்த்து வருகிறது. 2020, செப்டம்பர் மாதத்தில் வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போதே யாருடைய கருத்தையும் கேட்காமல் நிறைவேற்றியது மத்திய பி.ஜே.பி அரசு.
அப்போதே விவசாயிகள் இந்தச் சட்டங்களை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், அப்போது லடாக் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்ற எல்லைப் பிரச்னையை மறைக்க விவசாயிகள் போராட்டம் உதவியது. அதனால் விவசாயிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் தோல்வியில் முடித்தது அரசு. இதனால், ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் தொடர சீனா/இந்தியா பிரச்னை பெரிய அளவில் மக்களிடம் சேராமல் தவிர்க்க உதவியது. ஆனால், ஒரு கட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடக்க முடியாமல் திணறியது மத்திய அரசு.

இதை பஞ்சாப் விவசாயிகளின் காலிஸ்தான் பிரச்னை, வியாபாரிகள் பிரச்னை, தீவிரவாதிகள் எனப் பலவகையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. தொடர்ந்து இந்தியா முழுக்க விவசாயிகள் போராட்டம் செய்ய ஆரம்பித்ததால் உச்சநீதிமன்றம் உள்ளே நுழைந்து வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. பிறகு, மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது.
தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், ஏதோ ஒருவகையில் மத்திய அரசுக்கு சில பிரச்னைகளை மறைக்க உதவியாக இருந்து வந்தது. இருந்தாலும் அவ்வப்போது பி.ஜே.பி-யினர் விவசாயிகள் போராட்டங்களைக் கிண்டலடிப்பதும், அதைக் கொச்சைப்படுத்துவதும் நடந்தேறி வந்தது. ஹரியானா, டெல்லி என ஆங்காங்கே அடக்குமுறைகளை ஏவி விடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இத்தனை களேபரங்களிலும் விவசாயிகள் தாங்கள் எங்கெல்லாம் எதிர்ப்பைக் காட்ட முடியுமோ அங்கெல்லாம் காட்டினர். அப்படித்தான் லக்கீம்பூரில் நடைபெற்ற விழாவுக்கும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஒன்றுகூடினர்.
மத்திய உள்துறை இணையமைச்சராக இருக்கும் அஜய்குமார் மிஸ்ரா, லக்கீம்பூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் தன் சொந்த ஊரில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். அதற்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கேசவ் பிரசாத் மௌரியா ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடத்தில் எதிர்ப்பு தெரிவிக்க கூட்டமாகச் சென்றனர். அந்தக் கூட்டத்தின் மீதுதான் அமைச்சரின் மகன் கார் விவசாயிகளின் மீது மோதி நான்கு பேரை காவு வாங்கியது. காரில் அமைச்சரின் மகன் உட்கார்ந்திருந்தார் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். அவர் துப்பாக்கி எடுத்து சுட்டார், காரை அவர்தான் ஓட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. கார் விவசாயிகள் மீது மோதி படுகொலையை நடத்திய வீடியோவை நாடே பார்த்தது.
இவ்வளவுக்கும் இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, ``என்னை எதிர்ப்பவர்களை லக்கீம்பூரிலிருந்து வெளியேற்ற வேண்டி வரும். இரண்டே நிமிடங்களில் போராடும் விவசாயிகளுக்குப் பாடம் கற்பிக்க முடியும்” என்று பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இணையமைச்சராக இருக்கும் ஒருவர் பேசும் பேச்சு அல்ல இது? இந்த விவகாரத்தில் அமைச்சரும் அமைச்சர் மகனும், உத்தரப் பிரதேச அரசும் செயல்படும் விதம் நாடே அறியும். ஆனால், பிரதமர் மோடிக்கு இது தெரியாதா? ஏன் இன்னும் அவர் அமைச்சரவையில் தொடர்கிறார்? இதுநாள் வரை உத்தரப் பிரதேச சம்பவமாக இருந்தது, இனி அது மத்திய பி.ஜே.பி அரசின் சம்பவமாக மாறி ஒரு வாரம் ஆகிறது. ஆனால், இதை மோடி புரிந்துகொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்னையில் அடிப்படையான நியாயம்கூடவா தெரியாமல் பிரதமர் மோடி இருக்கிறார்.

இதுவரையில் விவசாயிகள் போராட்டத்தால் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நடந்திருக்கும் இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியிருக்கிறது. சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கலாம், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம், அமைச்சரவையில் இருந்து அஜய்குமார் மிஸ்ராவை நீக்கியிருக்கலாம் இப்படி எந்தவொரு நடவடிக்கையும் பிரதமரிடமிருந்து வரவில்லை. இப்படியொரு சம்பவம் எதுவும் நடக்காததுபோல் மௌனம் காக்கிறார்.
`மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் வானொலியில் பேசும் பிரதமர் மோடியின் மனசாட்சியை இந்தச் சம்பவங்கள் உலுக்கவில்லையா? அல்லது உலுக்கினாலும் உலுக்காத மாதிரி நடிக்கிறாரா எனத் தெரியவில்லை. முதல்வர் மற்றும் பிரதமராக பொது வாழ்வில் 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் மோடி. `நான் பிரதமர் ஆவேன் என்று நினைக்கவில்லை’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அரசியலில் அடுத்தகட்டத்தை நகரும் சூழலில், இது உங்களுக்கு கறுப்புப் புள்ளி. இது தொடர்ந்தால் பி.ஜே.பி-யின் அடுத்த அத்தியாயத்தை மக்கள் எழுத தொடங்குவார்கள் திருவாளர் மோடி.

இந்திய மண் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் பார்த்துவிட்டது. கொடுங்கோலாட்சியும் பார்த்துவிட்டது, நல்ல ஆட்சியும் பார்த்துவிட்டது. இந்திய வரலாற்றில் இதுவொரு சம்பவம்தான். ஆனால், அந்தச் சம்பவத்திலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது நீதி... அந்த நீதியை நிலைநாட்டும் கடமை நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல; ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆட்சியில் நீங்கள்தானே இருக்கிறீர்கள்? சம்பவத்துக்குக் காரணமானவர்களும் உங்கள் ஆட்சியில்தான் இருக்கிறார்கள். உணர்வீர்களா மோடி?