`நவீன மயமாக்கல் விவசாயிகளை மேம்படுத்துமா?!' - மோடி சொன்னதும் கடந்தகால உண்மைகளும்

பிரதமர் மோடி சொல்வது போல நவீனமயமாக்கல் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துமா? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும்?
விவசாயத்தை நவீன மயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும், வேளாண்துறையை நவீனமாக்க அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் தொடரும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அகில இந்திய வானொலியில் `மான் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இதைத் தெரிவித்துள்ளார். நவீன மயமாக்கல் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துமா? இது விவசாயிகளுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும்? இது தொடர்பாக, இயற்கை வேளாண் செயற்பட்டாளர் ரமேஷ் கருப்பையா சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

``மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதை மடை மாற்றுவதற்காகவும், விவசாயிகள் மீது அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவும்தான், விவசாயத்தை நவீனமயமாக்குவோம் எனப் பேசியிருக்கிறார்.
ஆனால் இதுவும் கூட, புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களோடும் கார்ப்பரேட் நிறுவனங்களோடும் தொடர்புடையது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், மக்கள் வரிப்பணத்தில் பெருமுதலீட்டுக் கருவிகளை அறிமுகப்படுத்தி, அவர்களோடு போட்டிப் போட முடியாத நிலையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை, உழவுத் தொழிலில் இருந்தே வெளியேற்றப்போகிறார்கள். விவசாயத்தை நவீனமயமாக்குவோம் என பிரதமர் மோடி சொல்வதை மேலோட்டமாகப் பார்க்கும்போது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக, விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இது ஆறுதலாகவே தோன்றும். நவீனமயமாக்கல் என்ற சொல்லை, விவசாயத்துக்கு உதவக்கூடிய வேளாண் கருவிகளை அறிமுகப்படுத்துதல் என்ற ஒற்றை அர்த்தத்தில் மட்டும் இதைப் பார்க்க முடியாது.

பிரதமர் மோடி சொல்வதும்கூட இந்த அர்த்தத்தில் அல்ல. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, நவீனப்படுத்துதல் என்பது, நமது முன்னோர்களின் பாரம்பர்ய வேளாண் அறிவையும் தொழிநுட்பத்தையும் புறந்தள்ளக்கூடியதாகும். அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்புகளையும் வலுக்கட்டாயமாக விவசாயத்திலும் நுழைப்பதாகும். இதுவும்கூட விவசாயிகளின் நலன்களுக்கானதல்ல. பெரு நிறுவனங்களும், அதிகாரப் பீடத்தில் இருப்பவர்களும்தான் பயன் அடைவதற்குதான். இதனால் விவசாயிகளுக்கு பாதகம் நேர்ந்தாலும் ஆட்சியாளர்கள் கவலைப்பட மாட்டார்கள். இந்தியா வேளாண்மையில் 1970-களில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் நவீனமயமாக்கல் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அடைந்த பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
வீரிய ஒட்டுரக விதைகளாலும், செயற்கையான ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மிக மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டன. படிப்படியாக விளைச்சல் குறைந்து, அதற்கு நேர் முரணாகச் செலவுகள் அதிகரித்து விவசாயிகள் கடனாளி ஆகிப்போனார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் ஆரம்பமானது. மரபணு மாற்றுப் பயிர்களாலும் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கலப்பின வெளிநாட்டு ரக மாடுகள் வளர்ப்பாலும் நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். இமயமலையில் இருந்து உற்பத்தியாகக்கூடிய வற்றாத ஜீவநதிகளான ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய ஐந்து நதிகள் ஓடக்கூடிய வளமான மாநிலம் பஞ்சாப்.

இதனால்தான் பஞ்சாப் என்று அழைக்கப்படுகிறது. பசுமைப் புரட்சி இந்தியாவிலேயே முதல்முறையாக, முழுமையாக பஞ்சாபில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை எந்த வகையிலும் மேம்படவில்லை. மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மாநில விவசாயிகள்தாம் அதிகளவில் போராடி வருகிறார்கள். வேளாண் தொழில்நுட்பம் என்பது பருவகால சூழலுக்கு ஏற்ப தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, இயற்கைப் பேரிடர்களை சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதற்கேற்பதான் விவசாயம் தகவமைக்கப்பட வேண்டும். எனவே, விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நவீனமயமாக்கல் கை கொடுக்காது. நவீனமயமாக்கல் என்ற பெயரில், நம் பாரம்பர்ய விவசாயத்தை ஏற்கெனவே சீரழித்தது போதும். மிச்சமிருப்பதையாவது விட்டு வையுங்கள்’’ என்றார்.