Published:Updated:

கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி... ஸ்காட்லாந்தைப் போலத் தமிழ்நாட்டில் சாத்தியமா?

காற்றாலை
பிரீமியம் ஸ்டோரி
காற்றாலை

மாற்று வழி சொல்லும் வல்லுநர்!

கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி... ஸ்காட்லாந்தைப் போலத் தமிழ்நாட்டில் சாத்தியமா?

மாற்று வழி சொல்லும் வல்லுநர்!

Published:Updated:
காற்றாலை
பிரீமியம் ஸ்டோரி
காற்றாலை

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மின்சாரத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்காக அணுமின் மற்றும் அனல் மின் உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே போனால், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். இயற்கை சமநிலையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இதற்கு என்னதான் தீர்வு? சுற்றுச் சூழலில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மின் உற்பத்தியை அதிகரிக்க, காற்றாலை மின்சாரம் பெரிதும் கைகொடுக்கிறது.

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று அங்கு கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட்டு வந்தார். தமிழ்நாட்டில் மின் உற்பத்தியின் பெரும்பகுதி அணு மின் நிலையம் மற்றும் அனல் மின் நிலையங்களைச் சார்ந்தே இருக்கின்றன. காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நிலைத்த மின் ஆற்றலைப் பெற முடியும். ஸ்காட்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளைப்போல தமிழ்நாட்டிலும் கடலுக்குள் காற்றாலைகளை அமைப்பது சாத்தியமா எனத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயிராற்றல் துறையின் முன்னாள் பேராசிரியர் வெங்கடாசலத்திடம் கேட்டோம்...

ஸ்காட்லாந்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி
ஸ்காட்லாந்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

“காற்றின் வேகம் ஒவ்வொரு நிலப்பரப்புக் கேற்றாற்போல மாறுபடும். இதை அதிவேகம், மிதமான வேகம், குறைவான வேகம் என மூன்றாகப் பிரிக்கலாம். கடல் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிக அளவில் இருக்கும். கடலிலிருந்து வீசுகிற காற்று எந்தத் தடையும் இல்லாமல் வேகமாக வரும். இரண்டு மலைகளுக்கு இடையிலான கணவாய் பகுதி களில் காற்றின் வேகம் மிதமானதாக இருக்கும். கடற்கரைப் பகுதிக்கு அப்பாற்பட்டிருக்கும் நிலப்பரப்புகளில் மரங்கள், கட்டடங்கள் போன்று காற்றுக்குப் பல தடைகள் இருப்ப தால் அங்கு குறைவான வேகத்திலேயே காற்று வீசும்.

காற்றாலை
காற்றாலை

பல்லடம், பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட விவசாய நிலப்பகுதிகளில் குறைந்த வேகத்தில்தான் காற்று வீசும். இதுவே அதிராம்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். நெதர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் ஆழமில்லாத கடலில் சமதளப்பரப்பில் காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தி செய்கிறார்கள். அந்நாடுகளைப் போன்று தமிழ்நாட்டிலும் கடலுக்குள் காற்றாலைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

கடலுக்குள் காற்றாலை
கடலுக்குள் காற்றாலை

கடலுக்குள் காற்றாலை அமைக்க வேண்டுமெனில் அவை சமதளப் பரப்பாக, ஆழம் குறைந்த பகுதியாக இருக்க வேண்டும். கடல் போக்குவரத்து குறைந்த பகுதியாகவும் இருக்க வேண்டும். அப்படியான பகுதிகளில் கடலுக்குள் காற்றாலைகள் அமைத்து நிலத்தடியின் வழியாகவோ, நிலத்துக்கு மேலாகவோ மின் கம்பிகள் வழியாகவோ மின்சாரத்தைக் கொண்டு வரலாம். காற்றாலையிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வருகையில் அதன் வோல்டேஜை குறைத்து எடுத்து வந்து பிறகு, அதை மிகைப்படுத்தி விநியோகிக்கப்படும். இதை ஸ்டெப் டவுன் மற்றும் ஸ்டெப் அப் [step down and step up] என்று சொல்வோம். மேற்கூறிய சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் கடலில் காற்றாலை நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்க முடியும். மீனவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாதபடி இத்திட்டத்தைச் செயல்படுத் தலாம்” என்றவர்,

தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்காமலேயே, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று மாற்று யோசனையையும் கூறுகிறார்.

பேராசிரியர் வெங்கடாசலம்
பேராசிரியர் வெங்கடாசலம்

“இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழ்நாட்டில் தான் காற்றாலைகள் அமைப் பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1982 -83-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு நான் தலைமை வகித்தேன். காற்றின் வேகம் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது, எந்தெந்தப் பகுதிகளில் அதிக காலம் காற்று வீசுகிறது போன்ற விவரங்களைச் சேகரித்துக் கள ஆய்வு மேற்கொண்டோம். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் - கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதிராம்பட்டினம், கயத்தாறு உள்ளிட்ட கணவாய்ப் பகுதிகளில் காற்றாலைகள் அமைத்தோம்.

அன்றைய காலத் தொழில்நுட்பத்தின்படி இந்தக் காற்றாலைகளில் (காற்றாடி) இருந்து மணிக்கு 250 - 750 கிலோ வாட் மின் உற்பத்தியைத்தான் மேற்கொள்ள முடியும். இப்படியாக அன்றைக்கு அமைக்கப்பட்ட காற்றாடி கள்தான் மேற்சொன்ன பகுதிகளில் இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருக் கின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியில் மணிக்கு 2 - 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நாளடைவில் வந்துவிட்டன. இவ்வகையான நவீன காற்றாலைகள்தான் பல்லடம், பொள்ளாச்சி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் உள்ள முரண் என்னவென்றால் காற்றின் வேகம் அதிகமாக உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் 250 - 750 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யும் காற்றாலைகள்தான் இயங்குகின்றன.

இதுவே, காற்றின் வேகம் குறைவாக உள்ள பல்லடம், பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளில் 2 - 3 மெகாவாட் உற்பத்தி செய்யும் நவீன காற்றாலைகள் இயங்குகின்றன. இந்த முரணைக் களைந்தாலே நாம் அதிக மின் உற்பத்தியை சாத்தியப்படுத்த முடியும்.

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதோடு ஆண்டுக்கு 9 மாதங்கள் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே, அங்குள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு புதிய காற்றாலைகளை உருவாக்குவதற்கு அரசு மானியம் வழங்கலாம். கடலுக்குள் காற்றாலைகள் அமைப்பதைக் காட்டிலும் இதற்கான செலவு குறைவுதான்.

250 கிலோ வாட் மின்சார உற்பத்தி நடந்து வருகிற பழைய காற்றாலையை அகற்றி புதிய காற்றாலையை அமைக்கையில் 2 மெகாவாட் மின்சாரம் அதாவது 8 மடங்கு அதிகமான மின் உற்பத்தியைச் சாத்தியப் படுத்த முடியும்.

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரித்து மின்சார உற்பத்தி செய்து வருகிறோம். அதற்கான நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் காற்றாலைகள் அமைப்பதற்கான செலவு குறைவு என்பதோடு நிலைத்த ஆற்றலையும் பெற முடியும்.

கடற்கரையோரங்களில் நவீன காற்றாலைகள் அமைக்கப்படுமாயின் காற்று அதிகம் வீசும் பருவத்தில் அதன் உற்பத்தியைக் கொண்டே தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்துவிட முடியும். அந்த 3 மாதங்களில் அணுமின் நிலையம் மற்றும் அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டு அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். நடைமுறை சாத்தியங்கள் மிகுந்த இத்திட்டத்தைச் செயல் படுத்துவது மின் உற்பத்தி மற்றும் பொருளா தாரம் எனப் பல வகைகளில் நன்மையளிக்கக் கூடியது” என்று ஆலோசனைகளை வழங்கினார் முனைவர் வெங்கடாசலம்.

பேராசிரியர் வெங்கடாசலம் முன் வைத்த கருத்துகளைத் தெரிவிக்கும் பொருட்டும், காற்றாலை மின் உற்பத்தி சார்ந்து மின்சாரத்துறையின் திட்டங்கள் குறித்துக் கேட்க வேண்டி தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடமிருந்து உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை. கடலில் அமைக்கப்பெற்றிருக்கும் காற்றாலைப் பண்ணைகளை பார்வையிடுவதற்காக ஸ்காட்லாந்து சென்று விட்டு வந்த அவரிடமிருந்து அப்பயணம் குறித்த எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. நம் நில அமைப்புக்கு ஏற்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் மாநிலத்தில் உள்ள வல்லுநர்களிடம் அவர் உரையாடுவதே முறையாக இருக்கும். மாநில அரசின் நிர்வாகக் குறைபாட்டால் இன்றைக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. மத்திய அரசின் மீது பழியைத் தூக்கிப் போட்டு நழுவாமல் இந்த சூழலை எதிர்கொண்டு, மின்சாரத்துறையின் நிர்வாகத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.