Published:Updated:

நீர் சிக்கனத்தைக் கற்றுத்தரும் பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்...

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்

நீர் மேலாண்மை

நீர் சிக்கனத்தைக் கற்றுத்தரும் பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்...

நீர் மேலாண்மை

Published:Updated:
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்

விவசாயத்துக்கு அடிப்படை தண்ணீர். சமீபகாலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு காரண மாகப் பாசன பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. பாசன நீரைச் சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காகவே ஒரு பயிற்சி நிலையம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் செயல் பட்டுவருகிறது.

நீர் நிர்வாகத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள், விவசாயிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பல தரப்பினரும் பாசன மேலாண்மை குறித்துப் பயிற்சி அளிப் பதற்காகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் செயல் பட்டுவருகிறது.

பயிற்சி நிலையத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாடுகள் பற்றிப் பசுமை விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பயிற்சி நிலையத்துக்குச் சென்றோம்.

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்...
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்...


திருச்சி - தஞ்சாவூர் சாலையில் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) அருகே இருக்கிறது. பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமான பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், தற்போது அந்தப் பயிற்சி நிலையத் தில்தான் பணியாற்றி வருகிறார். நிலைய வாசலில் நம்மை வரவேற்ற பயிற்சி நிலையத் தின் உதவிப் பேராசிரியர்கள் செல்வம் மற்றும் பிரபாகரன் பயிற்சி நிலையத்தை நமக்குச் சுற்றிக் காட்டினார்கள்.

தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்குச் சொந்தமான 30 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிறது பயிற்சி நிலையம். கணிப்பொறி மையம், பயிற்சிக் கூடங்கள், மிகப்பெரிய நூலகம், தங்கும் விடுதி, உணவகம் என ஒரு பயிற்சி நிலையத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. பயிற்சி நிலையத்தின் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநரான ராஜாமோகன், பயிற்சி நிலையத்தைப் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ராஜாமோகன்
ராஜாமோகன்


‘‘எங்கள் பயிற்சி மையத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளைக் கற்றுத் தருகிறோம். குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பயிற்சி மையத்தின் நோக்கம். இதற்காகப் பொதுப்பணித்துறை, வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அலுவலர்கள் இணைந்து பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

வேளாண்மைத் துறை தொடர்பாக ஒரு குழு, பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதர அமைப்பின் கீழ் ஒரு குழு, வேளாண் பொறியியல் துறையில் ஒரு குழு என்று மூன்று குழுவினர் இங்கு இருக்கிறார்கள். இந்த மூன்று குழுவினரும் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளித்து வருகிறார்கள். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, விளைச்சலைப் பெருக்குவதுதான் பயிற்சியின் நோக்கம். அதைத் தாண்டி, சூழ்நிலைக்குத் தகுந்த பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில், பயிற்சிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது. இங்கு உள்ள உணவகத்தில் மூன்று வேளையும் உணவு தரப்படும்.

கடந்த இரண்டு வருடங்களாக நிலவும் அசாதாரணச் சூழ்நிலையில் பயிற்சிக்கு வரும் மாணவர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளை இங்கு தங்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாகத் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருகிறோம். சில நேரங்களில் எங்கள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் தேவையான இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாசன சங்கங்களையும் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள்.

காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்
காட்சியகத்தில் உள்ள பொருள்கள்


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதிதாகக் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்பு களையும் எங்கள் நிபுணர்கள் விவசாயி களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பயிற்சிக்குத் தேவையான வகுப்பறைகள், கூட்ட அரங்கு, நூலகம் என அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற அலுவலர்கள் இங்கு இருக்கிறார்கள். விவசாயிகள், மாணவர்கள், பொதுப்பணித் துறையினர் எனப் பல தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இந்தப் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

பாசனம் தொடர்பான பயிற்சிகளைத் தாண்டி, விவசாயம் தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். சமீபத்தில் தென்னையைப் பாதித்துள்ள சுருள் வெள்ளை ஈ, பிரச்னைக்கான தீர்வை எங்களுடைய நிபுணர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கினார்கள். நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பயிற்சி தேவைப்படும் விவசாயிகள், பாசனதாரர்கள் எங்களை அணுகலாம்’’ என்றார்.

தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நீர் சிக்கனத்துக்கான இரண்டு கருவிகள் இருக்கின்றன. அந்தக் கருவிகள் பற்றி விளக்கினார் பயிற்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் பிரபாகரன்.

 பிரபாகரன்
பிரபாகரன்


பயிருக்கான நீர் தேவையைச்
சொல்லும் கருவி

‘‘இது மண்ணில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தின் அளவைக் காட்டக்கூடிய கருவி. பொதுவாகப் பாசனம் செய்யும் விவசாயிகள் மண்ணுக்குத் தண்ணீர் தேவையா, இல்லையா? என்பதைப் பெரும்பாலும் யோசிப்பதில்லை. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதை மாற்றி விஞ்ஞான முறைப்படி பயிருக்கான நீர் தேவையை அறிந்து பாசனம் செய்ய இந்த எளிமையான கருவி உதவி செய்கிறது.

பயிருக்கான நீர் தேவையைச் 
சொல்லும் கருவி
பயிருக்கான நீர் தேவையைச் சொல்லும் கருவி


கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தக் கருவியைப் பயன்படுத்தும் விவசாயிகள் தற்போது தேவையை அறிந்து பாசனம் செய்கிறார்கள். இதனால் கிடைக்கும் தண்ணீர் சிக்கனம் மூலம் பாசன பரப்பை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்’’ என்றவர் கருவி செயல்படும் விதம்குறித்து விளக்கினார்.

“கருவியின் கீழ் பாகத்தில் இரண்டு கம்பிகளும், மேல்பாகத்தில் கைப்பிடிக்க வசதியான ஓர் அமைப்பும் இருக்கும். கைப்பிடிக்கும் பகுதியில் நான்கு நிறங்கள் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். கருவியில் உள்ள கம்பிகளைச் சாகுபடி நிலத்தில் மண்ணில் குத்தி, மேல்பாகத்தில் இருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும்போது நான்கு நிற விளக்குகளில் ஏதாவது ஒரு விளக்கு எரியும்.

நீல நிற விளக்கு எரிந்தால், தண்ணீர் அதிகமாக இருக்கிறது. அதனால் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. அதிகமாக உள்ள தண்ணீரை வடிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை. பச்சை நிற விளக்கு எரிந்தால் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது, தற்போது பாசனம் தேவையில்லை என்று பொருள்.

ஆரஞ்சு நிறத்தில் விளக்கு எரிந்தால் தண்ணீர் தேவை. ஆனாலும் இன்றைக்கே பாய்ச்ச வேண்டும் என்றில்லை. ஓரிரு நாள்களில் பாய்ச்சலாம் என்ற நிலை. சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்தால் தண்ணீருக்காகப் பயிர் தவிக்கிறது. உடனடியாகப் பாசனம் செய்ய வேண்டும் என்று பொருள். இந்த நான்கு விதமான விளக்குகள் மூலமாகப் பயிருக்கான பாசன நீர் தேவையை நாம் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப பாசனம் செய்வதன் மூலம் தேவை இல்லாமல் பாசனம் செய்வதைக் குறைக்கலாம்.

பானி பைப்

பயிர்களுக்கான நீர் தேவையைச் சொல்லும் கருவியைப் போலவே, நெல் வயலின் நீர் தேவையைச் சொல்லும் எளிமையான கருவி. ஓர் அடி பி.வி.சி குழாய் இருந்தால் போதும். இந்தக் கருவியை நாமே செய்துகொள்ளலாம்’’ என்றவர் கருவியைக் காட்டி, அது செயல்படும் முறையை விளக்கினார்.

பானி பைப்
பானி பைப்


‘‘4 இன்ச் விட்டம், 1 அடி நீளமுள்ள ஒரு பி.வி.சி குழாயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு பகுதியில் கீழேயிருந்து 7.5 செ.மீ உயரத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடும், 15 செ.மீ. உயரத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு கோடும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த 15 செ.மீ முழுக்க பரவலாகத் துளைகள் இட்டுக்கொள்ள வேண்டும். இப்போது கருவி தயார். இந்தக் குழாயை நெல் வயலில் வைத்து அழுத்த வேண்டும். கறுப்புக் கோடு நிலத்தின் மட்டத்திற்கு வரும் வரை மண்ணுக்குள் அழுத்த வேண்டும். அழுத்தியபிறகு, குழாயின் உள்ளே கைவிட்டு, மண்ணை அள்ளி வெளியே போட வேண்டும். இப்போது குழாயின் கீழ் பகுதியில் உள்ள துளைகள் வழியாகத் தண்ணீர் குழாய்க்குள் வரும். நாம் பாசனம் செய்யும்போது நிலத்தில் எந்த உயரம் தண்ணீர் பாய்ச்சுகிறோமோ அதே அளவு குழாயிலும் தண்ணீர் உயர்ந்துகொண்டே இருக்கும். நிலத்தில் இருக்கும் நீரின் அளவும், குழாயின் உள்ளே இருக்கும் நீரின் அளவும் சமமாக இருக்கும். நிலத்தில் நீர் வற்ற வற்ற குழாயின் உள்ளே இருக்கும் நீரும் வற்றிக்கொண்டே இருக்கும். நிலத்தின் மேல் பகுதியில் இருக்கும் நீர் முழுவதும் வற்றியவுடன் சிறிய அளவில் மண்ணில் கோடு போன்ற விரிசல் தென்படும். அதைப் பார்த்தவுடன் வயல் காய்ந்துவிட்டது என எண்ணி உடனே பாசனம் செய்வோம். ஆனால், உண்மையில் அந்த நேரத்தில் பாசனம் செய்யத் தேவையில்லை.

மண்ணின் மேல் பகுதியில் ஈரம் இல்லாவிட்டாலும், வேர்ப் பகுதியில் தேவையான தண்ணீர் இருக்கும். அதனைக் குழாயினுள் நாம் பார்க்கலாம். 7.5 செ.மீ. சிவப்புக் கோடுவரை தண்ணீர் இருந்தால் பாசனம் தேவையில்லை. அதைவிடக் கீழே போகும்போது பாசனம் செய்தால் போதுமானது. இதைத்தான் காய்ச்சலும், பாய்ச்சலும் என்று சொல்கிறார்கள். ஆனால், நிலத்தின் மேல்மட்டத்தில் தண்ணீர் இல்லையென்றவுடனே பலரும் பாசனம் செய்து விடுகிறார்கள். பொதுவாக நெல் பயிருக்கு 18 முதல் 25 முறை பாசனம் செய்கிறார்கள். இந்த ‘பானி பைப்’ குழாயைப் பயன்படுத்தித் தண்ணீரின் இருப்பைத் தெரிந்துகொண்டு பாசனம் செய்யும்போது, அதில் 5 முதல் 7 முறை செய்யும் பாசனத்தைத் தவிர்க்கலாம். நெல் வயலுக்கு ஒருமுறை பாசனம் செய்யும்போது இரண்டரை இஞ்ச் மட்டத்திற்கு தண்ணீர் கட்டுவார்கள். அதை 50 மில்லி மீட்டர் தண்ணீர் என்று அளவிடுவார்கள். அந்த வகையில், நிலம் தயாரிப்பு முதல் கடைசி பாசனம் வரை 1200 மில்லி மீட்டர் வரை தண்ணீர் பாய்ச்சுவார்கள். இந்தப் பைப் பயன்படுத்துவதன் மூலம் 5 முதல் 7 பாசனம் குறைவதால் 250 முதல் 350 மில்லி மீட்டர் தண்ணீர் பாசனம் செய்வதை குறைக்கலாம். நெல் வயலில் நான்கு இடங்களில் இந்தக் குழாய் அமைப்பைப் பொருத்தலாம்’’

ஹைட்ரோ ஜெல்
ஹைட்ரோ ஜெல்

என்றவர், நீர் ஆவியாவதைத் தடுக்கும் ‘ஹைட்ரோ ஜெல்’ பற்றியும் பேசினார். பாசன நீர் ஆவியாவதைத் தடுக்க ‘ஹைட்ரோ ஜெல்’ பயன்படுகிறது. பொடி வடிவில் கிடைக்கும் இதனை நிலத்தில் தூவும்போது, அது தண்ணீரை ஆவி ஆகவிடாமல் செய்கிறது. இதன் அளவைவிட 400 மடங்கு தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும். மக்காச்சோளத்திலிருந்து இது போன்ற ‘ஜெல்’கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

தொடர்புக்கு, பிரபாகரன்,

செல்போன்: 94432 80952

நிரந்தர மையம்!

1984-ம் ஆண்டுத் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத் தைச் சென்னையைத் தற்காலிகத் தலைமையிட மாகக் கொண்டு ஆரம்பித்தது தமிழக அரசு. 1987-ம் ஆண்டுத் திருச்சி துவாக்குடியில் நிரந்தர மையமாகத் தமிழகப் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டது. இங்குள்ள கட்டடங்களைக் கட்டுவதற்கான வரைபடத்துக்காகத் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் சிறந்த வரைபடம் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பயிற்சி நிலையத்தை நிர்வகிக்கத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை ஆணையர் மற்றும் செயலாளர் தலைமையில் ஓர் ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் ஓர் இயக்குநரைக் கொண்டு இந்தப் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.பயிற்சிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது. இங்கு உள்ள உணவகத்தில் மூன்று வேளையும் உணவு தரப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism